Monday, May 4, 2015

"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ ஷான் ஆகியோரது மரணதண்டனை விவகாரத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு அடுத்ததாக பலதரப்பினராலும் அதிகம் வறுத்தெடுக்கப்பட்டவர்கள் ஆஸ்திரேலிய காவல்துறையினர்தான். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்களை கடத்திக்கொண்டுவரவுள்ளது என்ற தகவலை அறிந்த ஆஸ்திரேலிய காவல்துறை, அந்த கூட்டத்தை ஆஸ்திரேலியா வந்திறங்கியதும் ஆஸ்திரேலிய விமானநிலையத்தில் வைத்து கைது செய்யாமல், அவர்கள் இந்தோனேஷயாவில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டால் அந்நாட்டு சட்டத்தின்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும், அவர்களை இந்தோனேஷியாவிடம் “போட்டுக்கொடுத்தது” ஏன் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய காவல்துறை பத்து வருடங்களாக வாய் திறக்காமலே இருந்துவந்தது.

அத்துடன் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய இளைஞனின் தந்தை, பாலி கைது சம்பவத்துக்கு பின்னர் வெளியிட்ட தகவலும் ஆஸ்திரேலிய காவல்துறையை கடந்த பத்துவருடங்களாக மக்கள் அரங்கில் பாரதூரமான குற்றவாளியாக முன்னிறுத்தியது.

அதாவது,

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்காக பாலிக்கு பயணமாகும் முன்னரே இதில் சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய இளைஞன் ஒருவனின் தந்தையாருக்கு தனது மகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது. அவன் பாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் போதைப்பொருட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடப்போகிறான் என்பதை ஓரளவுக்கு அவரால் ஊகிக்க முடிகிறது. ஒரு பொறுப்புள்ள தந்தையாக தனது மகனை காப்பாற்றுவதற்கு அவர் துரிதமாக செயற்படுகிறார். தனது மகன் இந்தோனேஷியாவில் போய் போதைப்பொருளுடன் அகப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் சுதாரித்துக்கொண்ட அவர், ஆஸ்திரேலிய காவல்துறையினரை நேரில் சந்தித்து, தனது மகனின் இந்தோனேஷிய பயணத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக உறுதியளிக்காத ஆஸ்திரேலிய காவல்துறையின் அசட்டையீனத்தால் மனமுடைந்துபோயிருக்கையில், ஓரிரு வாரங்களில் தனது மகன் உட்பட ஒன்பது பேர் பாலியில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவதை செய்தியாக பார்க்கிறார்.

2005 இல் இடம்பெற்ற பாலி கைது சம்பவத்துக்கு பின்னர் தனது மகனை காப்பாற்றுவதற்காக ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டபோது, ஆஸ்திரேலிய ஊடகங்கள் உட்பட அனைத்துதரப்பினரும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் மீது காறி துப்பாத குறையாக காண்டாகிவிடுகிறார்கள்.

“ஒரு பொறுப்புள்ள தகப்பன் தனது மகனை காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சியை இந்த நாட்டின் காவல்துறை தட்டிக்கழித்துவிட்டு இன்னொரு நாட்டின் காவல்துறைக்கு வாலாட்டியிருக்கிறது. ஆஸ்திரேலிய காவல்துறை தனது நாட்டின் குடிமக்களுக்காக செயற்படுகிறதா அல்லது இன்னொரு நாட்டின் பாதுகாப்புக்காக எமது நாட்டு குடிமக்களின் உயிர்களை பலியாக்குகிறதா” என்று ஆஸ்திரேலிய காவல்துறையை நாலா பக்கமும் தாறுமாறாக ஊடகங்கள் கிழிக்கத்தொடங்கின.

இந்த இரண்டு விடயங்களுக்கும் பத்து வருடங்களாக மௌனம் காத்துவந்த ஆஸ்திரேலிய காவல்துறை, மயூரன் மற்றும் அன்ட்ரூவின் மரணங்களுக்கு பின்னர் எழுந்த உள்நாட்டு அழுத்தங்களையடுத்து மக்களுக்கு பதிலளிக்கவேண்டிய கடப்பாட்டுடன் ஊடகங்களின் முன் தோன்றியது.


இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது, பாலி9 விவகாரத்தை முற்றுமுழுதாக கையாண்ட ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் -

“எமது நாட்டின் இரண்டு பிரஜைகள் வெளிநாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் வருந்தத்தக்கதுதான். அதற்காக அவர்கள் செய்த குற்றம் ஒன்றும் செல்லுபடியற்றது என்றாகிவிடாது. இந்தோனேஷிய காவல்துறையிடம் இவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு முன்னர் ஒன்றுக்கு நூறுதடவை யோசித்து நிதானமாகத்தான் செயற்பட்டோம். இன்றும்கூட, பத்து வருடங்களுக்கு முன்னர் நாம் எடுத்த முடிவு பற்றி சிந்தித்துபார்க்கும்போது, அதில் பிழை ஒன்றும் இருப்பதாக எமக்கு தெரியவில்லை.

“இந்த நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டவிருந்த போதைப்பொருட்களையும் அதன் மூலம் நிகழவிருந்த ஆயிரக்கணக்கான மரணங்களையும் நாங்கள் தடுத்திருக்கிறோம். அதற்காக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், இரண்டு உயிர்கள் இழக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. ஊடகங்கள் கேட்பது போல, இந்த இரண்டு உயிர்கள் போனதற்கு நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. ஏனெனில், நாங்கள் எம் கடமையைத்தான் செய்தோம்.

“இந்த இரண்டு மரணங்களின் பின்னர் எமக்கு இதன் பின்விளைவுகள் விளங்கிவிட்டது, ஆகவே இனிவரும் காலங்களில் எமது நாட்டு பிரஜைகளை மற்ற நாடுகளிடம் மாட்டிவிடாமல் நாங்களே தண்டிப்போம் என்று கூற எமக்கும் விருப்பம்தான். ஆனால், அவ்வாறு எம்மால் செயற்பட முடியாது.

“ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பான பணியில் உள்ள நாம், அதற்காக மேற்கொள்ளும் எமது நடவடிக்கைகளையோ அல்லது அது குறித்த தகவல்களையோ எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாது.

“உண்மையில், பாலியில் இந்தக்குழுவினர் கைது செய்யப்பட்டமைகூட ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்களை கடத்தும் பெரிய கூட்டமொன்றை கைது செய்வதற்கான மிகப்பெரிய திட்டத்தில் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவம்தான். அப்போது, எமக்கு இவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், இவர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்று எதுவும்; எமக்கு தெரியாது. எமக்கு அறியக்கிடைத்த தகவல் எல்லாம், இவர்கள் போதைப்பொருட்களுடன் ஆஸ்திரேலியாவுக்குள் இறங்கப்போகிறார்கள் என்பது மட்டுமே. இந்த கைது சம்பவம் சட்டத்தின் கைகளில் அகப்பட்டு, இவ்வளவு பாரதூரமான முடிவுவரை பயணிக்கும் என்று அப்போது நாம் எதிர்பார்க்கவில்லை. அதற்காக, அப்படி எதிர்பார்த்திருந்தாலும் நாங்கள் எமது கடமையை செய்யாமல் ஒதுங்கியிருக்கமாட்டோம்.

“இந்த கடத்தல் கூட்டம் ஆஸ்திரேலியா வந்த பின்னர் அவர்களை கைது செய்திருக்கலாம் என்பது பல சிக்கல்கள் நிறைந்த விடயம். அவர்கள் ஆஸ்திரேலியாவினுள் சில முக்கிய தரப்புக்களை பணம் கொடுத்து சமாளித்து போதைப்பொருட்களை எந்த தடைகளும் இன்றி கொண்டுவந்திருக்கலாம். அல்லது, விமானத்திலேயே வேறு பயணிகளிடம் போதைப்பொருட்களை கைமாறியிருக்கலாம். இப்படி, இந்த ஊகங்கள் எல்லாம் பல்வேறு சிக்கலான சாத்தியக்கூறுகள் நிறைந்த விவகாரம்.

“கடத்தில் சம்பந்தப்பட்ட ஒரு இளைஞனின் சந்தேகமான நடவடிக்கைகள் குறித்து அவன் பாலிக்கு புறப்படுவதற்கு அவனது தந்தை எம்மிடம் முறைப்பாடு செய்த விடயம் உண்மைதான். ஆனால், எந்த ஆதாரமும் இன்றி இந்த நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு பயணத்தடை போடுவதற்கு சட்டத்தில் இடமேயில்லை. ஊகத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியாது. எடுக்கவும் மாட்டாது. ஒரு பேச்சுக்கு, அவ்வாறு அந்த இளைஞனின் பாலிப்பயணம் தடுக்கப்பட்டிருந்தாலும்கூட இறுதி முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது” – என்று ஆஸ்திரேலிய காவல்துறை மிகத்தெளிவாக ஊடகவியாளர் மாநாட்டில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளித்துள்ளது. அத்துடன், மயூரன் - ஷான் மரணதண்டனை விவகாரத்தில் தனது கைகளில் இரத்தக்கறை எதுவும் இல்லை என்றும் ஆணித்தரமாக அடித்துக்கூறிவிட்டது.

அதேவேளை, இன்னொரு விடயத்தையும் கோடிட்டுகாட்டியுள்ள ஆஸ்திரேலிய காவல்துறை “இனிவரும் காலங்களில், மரண தண்டனையை இன்னமும் அமுல்படுத்திவரும் நாடுகளிடம் ஆஸ்திரேலிய குற்றவாளிகள் குறித்த தகவல்களை பகிரும்போது அது தொடர்பில் நாம் தற்போது செயற்பட்டு வரும் புதிய சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் செயற்படுவோம்” – என்று குறிப்பிட்டுள்ளது.

பாலி 9 விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறை ஒரு தசாப்தகாலமாக விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட வந்த ஒரு தரப்பாகும்.  அதேவேளை, ஆஸ்திரேலிய காவல்துறை இந்த விவகாரத்தில் மட்டுத்தான் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றது என்றும் கூறிவிட முடியாது. ஆஸ்திரேலிய காவல்துறையின் பல கடந்த கால நடவடிக்கைகள் ஊடகங்களாலும் நடுநிலை அமைப்புக்களாலும் சில வேளைகளில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தினாலும் கண்டிக்கப்பட்டிருக்கின்றன.

ஈழத்தமிழர்கள் தரப்பிலிருந்து நோக்குவதாயின், கடந்த 2007 ஆம் ஆண்டு மெல்பேர்னிலும் சிட்னியிலும் கைது செய்யப்பட்ட மூன்று ஈழத்தமிழர்கள் விவகாரம் என்பது ஆஸ்திரேலிய காவல்துறை பாரதூரமாக விரலை சுட்டுக்கொண்ட வழக்கு என்று கூறலாம். இந்த வழக்கின் முடிவில் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தினாலேயே ஆஸ்திரேலிய காவல்துறையினர் கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.

தமிழர் தாயக்கத்தில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி செய்வதற்கு ஆஸ்திரேலியாவில் திரட்டப்பட்ட நிவாரண நிதியை விடுதலைப்புலிகளின் ஆயுதக்கொள்வனவுக்கு வழங்கினார்கள் என்ற அடிப்படை குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆஸ்திரேலிய காவல்துறை 2007 ஆம் ஆண்டு மூன்று ஈழத்தமிழர்களை கைது செய்திருந்தது. இவர்களில் ஒருவரை, ஏதோ கையில் ஆயுதங்களுடன் திரியும் கொலைவெறிபிடித்தவனை கைது செய்வதுபோல, துப்பாக்கி முனையில் நடுவீதியில் வைத்து கைது செய்தது மட்டுமல்லாமல் இந்த கைதுக்கு எந்த சட்ட ஆதாரமும் இருக்கவில்லை. மூவரை கைது செய்தாயிற்று. ஆனால், அடுத்தது என்ன செய்வது என்று தெரியாதவர்கள் போல சுமார் இரண்டு வருடங்களாக இந்த வழக்கை ஏலேலோ ஏலேலோ என்று இழுத்து கடைசியில் நீதிமன்றிடம் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி, ஈற்றில் கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

துப்புக்கிடைத்த பரபரப்பில் அல்லது சட்டத்துக்கு அப்பாற்பட்ட மறைமுக அரசியல் கரங்களின் அழுத்தங்களில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக செயற்படுவதும் இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் மேற்குலக அதிகார கட்டமைப்புக்களிலும் விதிவிலக்கான விடயம் அல்ல.

 It is the first responsibility of every citizen to question authority. - Benjamin Franklin

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!


"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...