Wednesday, December 17, 2014

மரணத்தில் பிடியில் திணறிய மார்ட்டின் சதுக்கம்: அந்த 16 மணித்துளிகள்...!!!


பயங்கரவாதம் - வன்முறை - ரத்தம் என்று உலகளாவிய ரீதியில் எந்த செய்திகளுக்குள்ளும் அகப்படாத அமைதி பூமியாக அர்ச்சிக்கப்பட்டுவந்த ஆஸ்திரேலியா, கடந்த டிசெம்பர் 15 ஆம் திகதி சுமார் 16 மணி நேரம் தீவிரவாதத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகையே திரும்பி பார்க்கவைத்துவிட்டது. அகதிகள் பிரச்சினையால் மாத்திரம் அவ்வப்போது உலகத்தின் செய்தித்தாம்பாளத்தின் பிரதான கருப்பொருளாக புரண்டுவந்த ஆஸ்திரேலியா - அதன் வரலாற்றிலேயே - முதல் தடவையாக தீவிரவாதி ஒருவனின் பணயக்கைதி நாடகத்திற்குள் சிக்குண்டு திணறிவிட்டது.

சம்பவம் நடந்த இடம்: சிட்னி மாநகரின் மாட்டின் சதுக்கம்

ஆஸ்திரேலிய தமிழர்களுக்கு மிகவும் பரீச்சயமான இடம். தமிழர்கள் நடத்திய அமைதி ஊர்வலங்கள், மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வுகள் என அனைத்து வெளியரங்க நிகழ்வுகளும் சிட்னி நகரின் மையத்தின் அமைந்துள்ள மார்ட்டின் சதுக்கத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கனான தமிழ் மக்கள் கூடிய ஆர்ப்பாட்ட பேரணிகளின் இறுதி சங்கமமாக மார்ட்டின் சதுக்கத்தில் - 2009 ஆம் ஆண்டு கால முற்பகுதியில் - பல ஒன்றுகூடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மாட்டின் சதுக்கம் சிட்னி நகரத்தின் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். முக்கியமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளுக்கு சரியான தெரிவென்றால் சிட்னியில் விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மார்ட்டின் சதுக்கமும் ஒன்று. காரணம், வருடத்துக்கு சுமார் 5.5 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் சன நடமாட்டம் மிக்க மாட்டின் சதுக்க - நிலத்தடி - ரயில்நிலையம் அமைந்த பிரதேசம், ஆஸ்திரேலியாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான "சனல் 7" தலைமையக கட்டடம் அமைந்துள்ள பிரதேசம், ஆஸ்திரேலியாவின் சுமார் மூன்று முன்னணி வங்கிகள் உட்பட முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அமைந்த பிரதேசம், அத்துடன் வானளாவ உயர்ந்து கிடக்கும் அழகான கட்டடங்களுக்கு இடையில் முதலாம் உலகப்போரின் வீரச்சாவடைந்த ஆஸ்திரேலிய மாவீரர்களின் நினைவுத்தூபியும் இங்கு அமைந்துள்ளது. ஆதலால், "சிட்னியின் இதயம்" என்றழைக்கப்படும் மார்ட்டின் சதுக்கத்தை உள்ளுர் - வெளியூர் சுற்றுலா பயணிகளும் விட்டுவைப்பதில்லை.

எந்நேரமும் - தனது எழில் கெடாது - இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த அந்த இடத்தில்தான் அன்றைய தினம் காலன் சற்று காலாற உட்கார்ந்து செல்ல வந்தான்.

காலை 09.45 

எந்நாளும் போலவே பணிநாள் மும்முரத்தில் மார்ட்டின் சதுக்கம் முழ்கிப்போயிருந்த அந்த நேரத்தில், 53 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள லின்ட் சொக்லெட் கபேயினுள், மதத்தின் பெயரால் மதம் பிடித்த மிருகம் ஒன்று தனது தோள் பையினுள் துப்பாக்கியுடன் நுழைந்தது. அடுத்த 16 மணி நேரமும் அந்த அரக்கனின் மரணப்பிடியில் திணறப்போவது - எதுவும் - தெரியாமலே அப்பாவிகளாக அங்கிருந்தவர்கள் கோப்பி அருந்திக்கொண்டிருந்தார்கள். உள்ளே வந்த துப்பாக்கிதாரி, கடையின் பிரதான வாயிலான கண்ணாடியிலான தானியங்கி கதவுக்கான மின் வயரை பிடுங்கிவிட்டு, கடையிலிருந்த அனைவரையும் துப்பாகி முனையில் தரையில் அமருமாறு உத்தரவிட்டான். கடையின் ஜன்னல் கண்ணாடியோரம் சிலரை வரவழைத்து, அரபு மொழியில் துணி ஒன்றில் எழுதப்பட்ட பதாகையை வெளியிலுள்ளவர்களுக்கு தெரியும்படியாக பிடித்துக்கொண்டிருக்குமாறு உத்தரவிட்டான். அதில் "இந்த பூவுலகில் அல்லாவை தவிர வேறெவரும் கடவுள் இல்லை. முகமட் அவரது இறை தூதர்" என்று எழுதப்பட்டிருந்தது. கடையில் வேலை செய்பவர்கள், கோப்பி அருந்த வந்தவர்கள் என 17 பேர் - அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று எதுவும் தெரியாமல் - அந்த மர்ம மனிதனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுக்கொண்டார்கள். அப்போது, கடைக்கு வந்த ஒரு பெண்மணி கதவு திறபடாத கடையினுள் - துப்பாக்கி முனையில் இடம்பெறும் இந்த சம்பவங்களை கண்டுவிட்டு - அலறியடித்துக்கொண்டுபோய் போலீஸிடம் கூற - தொடங்கியது கூத்து. 

மார்ட்டின் சதுக்கத்துக்கு வரும் வீதிகள் உடனடியாக மூடப்பட்டன.

மார்ட்டின் சதுக்கத்தில் உள்ள கட்டடங்களில் பணிபுரியும் அனைவரும் - சனல் 7 தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட - அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

மேலதிக பொலீஸ் படை, சிட்னி மாநிலத்தின் அவசர செயலணியின் சிறப்பு படையினர், அதிரடி படையினர், அம்புலன்ஸ் உத்தியோகத்தர்கள், தீயணைப்பு படையினர் என்று மார்ட்டின் சதுக்கத்தை சூழ்ந்து கொண்டனர்.

"சிட்னியில் துப்பாகிமுனையில் பணையக்கைதிகள்" என்று செய்தி காட்டுத்தீ போல பரவ - ஆஸ்திரேலியா தாண்டி சர்வதேச ஊடகங்களும் செய்தி சங்கை ஊத, உலகின் ஒட்டுமொத்த செய்தி கமராக்களும் மாரட்டின் சதுக்கத்தை நோக்கி திரும்பின.


ஆஸ்திரேலிய காவல்துறையினரும், இப்படியான ஒரு சம்பவத்துக்கு முன்னெப்போதும் முகம்கொடுத்ததில்லை. அதனால், விடயத்தை கையாள்வதில் மிகுந்த நேர்த்தியும் கவனமும் தேவை என்பதில் மிகவும் உறுதியுடன் செயற்ப்பட ஆரம்பத்தினர். அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கடைக்குள் பாய்ந்து துப்பாக்கிதாரியை "போட்டு தள்ளி விட்டு" பணயக்கைதிகளை காப்பாற்றப்போகிறோம் என்று, ஹீரோத்தனத்தை காட்டப்போய், அது அங்கு அகப்பட்டுள்ளவர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்று சிரத்தையுடன், படிப்படியாக காய்களை நகர்த்தை ஆரம்பித்தனர். அவர்களது நடவடிக்கையின் பிரகாரம், சில மணி நேரங்களிலேயே, துப்பாகிதாரி யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அடுத்து, சிட்னியிலுள்ள முஸ்லிம் சமூகத்தலைவர்கள் மற்றும் பேச்சுவார்ததையாளர்களை அழைத்து துப்பாக்கிதாரியுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. துப்பாக்கிதாரியின் நோக்கம், நிபந்தனை போன்றவற்றை அறியும் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

ஆனால், மறுபுறத்தில் கடையினுள் தான் பிடித்துவைத்திருந்த பணயக்கைதிகளிடம் ஊடகங்களை தொலைபேசியில் அழைத்து தனது நிபந்தனைகளை தெரிவிக்குமாறு துப்பாகிதாரி உத்தரவிட்டான். அதன் பிரகாரம், துப்பாக்கிதாரி முனவைத்த கோரிக்கைகள் - 

1) கடைக்கு உடனடியாக இஸ்லாமிய தனிநாட்டு கொடி ஒன்றை அனுப்பவேண்டும்.
2) ஆஸ்திரேலிய பிரதமருடன் தான் நேரடியாக பேசவேண்டும். 

துப்பாக்கிதாரியின் கோரிக்கைகளை அடியோடு நிராகரித்த பொலீஸார், அவனின் நிபந்தனைகளை செய்தியாக வெளியிடவேண்டாம் என்றும் சகல ஊடகங்களுக்கும் கடுமையாக உத்தரவிட்டனர். பணயக்கைதிகளை பிடித்துவைத்திருந்து தனக்கும் தனது நோக்கத்துக்கும் பிரபலத்தை தேடுவதே துப்பாக்கிதாரியின் நோக்கம் என்பதை பொலீஸார் கண்டுகொண்டதால், அந்த நோக்கத்தை நிறைவேற்றவிடாமலும் பொதுமக்களை குழப்பமடைவதை தடுக்கும் நோக்கத்திலும் பொலீஸார் ஊடகங்களுடன் இணைந்து தமது நடவடிக்கைகளை முன்னகர்த்தினர். 

இதற்கிடையில், பிற்பகலளவில் மூன்று பணயக்கைதிகளும், முன்னிரவில் இருவருமாக ஐந்து பேர் துப்பாக்கிதாரியின் பிடியிலிருந்து சாதுரியமாக தப்பியோடிவந்துவிட்டனர். இது மிகப்பெரியளவில் பொலீஸாருக்கு சாதகமாகவும் துப்பாக்கிதாரியின் திட்டத்துக்கு பாதகமாகவும் அமைந்துவிட்டது. தப்பி வந்த ஐவரிடமுமிருந்து கடைக்குள் நடைபெறும் நாடகத்தின் முழு தகவல்களையும் பொலீஸார் பெற்றுக்கொண்டுவிட்டனர். இதனால், கடுங்கோபம் கொண்ட துப்பாக்கிதாரி தன்னிடம் அகப்பட்டுக்கிடக்கும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளுக்கும் வெளியிலிருந்து தன்னுடன் பேச்சுவார்ததை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் கடுமையான உத்தரவொன்றை பிறப்பித்தான். அதாவது, இனிமேல் யாராவது தனது பிடியிலிருந்து தப்பினால் உள்ளே தனது கட்டுப்பாட்டில் உள்ளவர்களை கொலை செய்யப்போவதாகவும், ஒருவர் தப்பினால் ஒருவரையும் இருவர் தப்பினால் இருவரையும் "போட்டு தள்ளப்போவதாக" கொலை சமன்பாடொன்றை முன்வைத்தான். இது உள்ளிருப்பவர்களுக்குள்ளேயே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. யாரும் தப்பியோடிவிடக்கூடாது என்று வெளியிலிருந்தவர்களை பிரார்த்தித்ததைவிட உள்ளிருந்தவர்கள் ஒவ்வொருத்தரையும் பார்த்து பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


இந்த நாடகம் மணிக்கணக்கில் தொடர்ந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதல் ஆஸ்திரேலியாவின் நேச நாடுகளுக்கு ஆஸ்திரேலிய இராஜாங்க திணைக்களம் இந்த பணயக்கைதிகள் நாடகம் குறித்த செய்திகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உலகத்தலைவர்களும் தங்கள் பங்குக்கு வழமைபோல அறிக்கைகளை விட ஆரம்பித்தனர்.

நடுநிசி கடந்து 2 மணியளவில், பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த கடையினுள் இருந்து ஓரிரு துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. சுற்றிவளைத்துநின்ற பொலீஸார், இதற்கு மேல் தாமதிக்கமுடியாது என்று முடிவெடுத்து ஜன்னால் கண்ணாடிகளை உடைத்துக்குகொண்டு குபு குபுவென உள்ளே பாய்ந்தனர். சரமாரியான வெடிச்சத்தங்கள், மார்ட்டின் சதுக்கத்தின் ஓரு மூலையில் தீப்பந்துகள் வெடித்துப்பறந்தது போல சன்னங்கள் சீறிப்பாய்ந்தன. எல்லாம் ஒரு அரைமணி நேரத்தில் ஓய்ந்துபோனது. பொலீஸாரின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருந்த அம்புலனஸ்கள் மற்று அவசரகால மீட்புப்படையணியினர் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பணயக்கைதிகளை கடைக்குள்ளிருந்து மீட்டுவந்தனர். மரணத்தின் பிடியிலிருந்து கைத்தாங்கலாக மீட்டுவந்த அனைவரும் உடனடியாக அம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இரவை கிழித்துக்கொண்டு சிட்னி நகர் வீதிகளில் மின்னலென பாய்ந்த அம்புலன்ஸ் வண்டிகள், எவரையும் சாகவிடக்கூடாது என்று உறுதியுடன் உறுமிக்கொண்டு பாய்ந்தன. கடைக்குள் பாய்ந்த பொலீஸாரையும் நடவடிக்கையை நெறிப்படுத்திய முக்கிய அதிகாரிகளையும் தவிர உள்ளே என்ன நடந்தது என்று அப்போது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

மர்மம் துலங்கிய அடுத்தநாள் காலை ரத்தம் சுமந்த செய்திகளுடன் விடிந்தது.

அதாவது, முதல்நாள் இரவு 2 மணியளவில் துப்பாக்கிதாரி அவனது 16 மணிநேர நாடகக்களைப்பில் அவனையறியாமலேயே குட்டித்தூக்கம் ஒன்று போட்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனது கையிலிருந்த துப்பாக்கியை பறிப்பதற்காக கடையின் முதலாளி அவனை நோக்கி பாய்ந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து, சடுதியாக தூக்கத்தால் எழும்பிய துப்பாக்கிதாரி, தன்னை நோக்கி பாய்ந்த கடை முதலாளியை அடித்து விழுத்தி கடுமையை தாக்கி பின்னர் சுட்டுக்கொன்றான். இதை பார்த்து அலறியடித்துக்கொண்டு நாலாபக்கமும் ஓடிய ஏனைய பணயக்கைதிகளை நோக்கி துப்பாக்கிதாரி சரமாரியாக வேட்டுக்களை தீர்க்க, அந்தக்கணம்தான் பொலீஸார் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தனர். உள்ளே வந்த பொலீஸார் வெளிச்சக்குண்டுகளை வீசி உடனடியாகவே துப்பாக்கிதாரியை அடையாளம்கண்டுகொள்ள, அவர்களை நோக்கி தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட துப்பாக்கிதாரியை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர் பொலீஸார். பொலீஸாருக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையில் இடம்பெற்ற சில கணநேர துப்பாக்கிச்சண்டையின் இடையில் அகப்பட்டு, இன்னொரு பணயக்கைதியான - மூன்று பிள்ளைகளின் தாயாரும் சட்டவல்லுனருமான - பெண்ணொருவர் கொல்லப்பட்டார். இந்தப்பெண் தனக்குப்பக்கத்திலிருந்த கர்ப்பிணிப்பெண்ணொருவருவரை தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற முற்பட்டபோதே துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைநதார் என்று பொலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யார் இந்த துப்பாக்கிதாரி? இந்த பணயக்கைதிகள் நாடகத்தை அரங்கேற்றியதன் நோக்கம் என்ன?



1964 ஆம் ஆண்டு ஈரானில் பிறந்து 1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த ஹரோன் மொனிஸ் என்ற 50 வயது நபரே இந்த துப்பாக்கிதாரி. ஈரானில் பாதுகாப்பு மற்று புலனாய்வு அமைச்சகத்தில் பணி புரிந்துவிட்டு இஸ்லாமியத்தின் பெயரில் தீவிரவாத சிந்தனைகளுடன் தன்னை ஒரு மதத்தலைவராக தானே பிரகடனம் செய்துகொண்ட மொனிஸ், 1996 ஆம் ஆண்டு தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஈரானில் விட்டுவிட்டு மலேசியா ஊடாக ஆஸ்திரேலியா வந்துள்ளான். இஸ்லாத்தின் பெயரால் ஒரு மதத்தலைவர் போல வேடமிட்டு தீவிரவாத பிரசாரங்களை மேற்கொள்வதில் மும்முரமாக செயற்பட்டுவந்த மொனிஸ், தன்னை சங்கிலியால் விலங்கிட்டு சிட்னி நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியபோது, இவனின் அடையாளம் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. 

2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தடயவியல் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்ட பெண் ஒருவரை மீண்டும் திருமணம் செய்துகொண்ட மொனிஸிற்கு அந்த பெண்மணியின் ஊடாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சிலகாலங்களுக்கு பின்னர், தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாகவும் தொல்லை தருவதாகவும் மொனிஸிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டார் இவரது இரண்டாவது மனைவி. 

குடும்பவாழ்வை பற்றி சற்றும் கவலையடையாது தொடர்ந்தும் தீவிரவாதப்போக்கிலேயே தனது பயணத்தை மேற்கொண்டுவந்த மொனிஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய படையினரின் குடும்பங்களுக்கு அவதூறு கடிதங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 300 மணி நேர சமூக சேவை மற்று இரண்டு வருட நன்னடத்தை பிணையில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். 

2013 இல், மொனீஸின் - விகாரத்துப்பெற்ற - இரண்டாவது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரிக்கப்பட்டு, கொலையுடன் சம்பந்தப்பட்டமைக்கு நேரடியான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்ட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், மொனீஸ் சிட்னியில் நடத்திய "ஆன்மீக பட்டறையில" சுமார் 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் சேஷ்டைகள் புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர், இந்த மாட்டின் சதுக்க மரண படலம் அரங்கேறியிருக்கிறது. 

தற்போது, பல்வேறு தரப்பிலிருந்தும் அரசாங்கத்தையும் நீதி மற்றும் பாதுகாப்பு தரப்பினரையும் நோக்கி ஊடகங்கள் போர் தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

- இவ்வளவு குற்றச்செயல்களுடன் சுமார் பத்து வருடங்களுக்கு மேல் நடமாடிய குற்றவாளியை பாதுகாப்பு தரப்பு தகுந்த கண்காணிப்பின் கீழ் வைத்திருக்காதது ஏன்?

- 40 க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்று அறிந்தும் நீதிமன்றம் இவரை பிணையில் விடுதலை செய்தது ஏன்?

- சந்தேகப்படும்படியான பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடிய இப்படியான குற்றவாளி துப்பாக்கியை பெற்றுக்கொண்டது எப்படி? 

- நகரின் மத்தியில் ஒரு துப்பாக்கிதாரி 17 பேரை பயணக்கைதிகளாக பிடித்துவைத்திருந்து, அதை முறியடித்ததில் இரண்டு உயிர்களை காவு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில்தான் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை செயல்படுகின்றதானால், அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலை என்ன? 

பதில்கள் இல்லாத கேள்விகளோடு மாட்டின் சதுக்கம் உட்பட ஆஸ்திரேலியாவின் சகல பிரதேசங்களும் மெல்ல மெல்ல வழமை நிலையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றன.

Monday, December 15, 2014

"கானல் மேல் காதல்" பாடல் பி(சி)றந்த கதை!


15.2.2013
காரணமே இல்லாத இரவொன்றில் Deyo வீட்டுக்கு சென்றிருந்தபோது, வழமை போலவே,என்னை வைத்து மெலடிகளுடன் விளையாடும் Deyoவின் குசும்பு பரிபாலனமானது. Minor chordசை வைத்து மனதை கிறங்கடிக்கும் ஓருவித ஓசையை மண்டையில் ஆழமாக நுழைத்துவிட்டு, அதில் மெட்டு போடசொல்வது Deluxshion Deyoவின் வழமையான பாணி. அவ்வித்தத்தில் அன்றைய இரவு பிரசவமானதுதான் "கானல் மேல் காதல்" மெட்டு. அன்று இரவு நாம் இருவர் மட்டும்தான் அந்த மெட்டுக்கு ரசிகர்கள்.பிறந்த அந்த மெட்டினை ஆளாளுக்கு வாய்நிறை புகழ்ந்துகொண்டோம். இந்த மெட்டின் மீது அமையப்போகும் பாடல் நிச்சயம் எல்லோர் மனதையும் ஆழமாக சென்று தாக்கும் என்று நாம் இருவரும் தீர்க்கதரிசன தீத்தமாடிவிட்டு பின்னிரவில் கடையை மூடிக்கொண்டோம். பதிவு செய்த மெட்டை bounce பண்ணி எனது மெயிலுக்கு அனுப்பினான் Deyo. அதன் பிறகு இருவரும் - என்ன காரணத்தினாலோ தெரியவில்லை - ஆளாளுக்கு பிஸியாகிவிட, அந்த மெட்டு உத்தியோகப்பற்ற அநாதையாக மின்னஞ்சலில் அமைதியாக சமாதியாகிக்கிடந்தது.

19.11.2014
மீண்டும் ஒரு காரணமில்லாத இசை இரவு. இருவரும் பல மாதங்கள் கழித்து சந்தித்துக்கொண்டோம். எதேட்சையாக இடறிய சம்பாஷணையொன்றில், நாம் ஈன்ற அந்த பழைய மெட்டு இருவருக்கும் ஞாபகம் வந்தது. Deyo கணனியை தொட, நான் காகிதத்தை தொட, இருவரும் இயந்திரங்களாக இயங்கினோம். நாம் சிருஷ்டிக்கப்போகும் இசை, மனித உணர்வின் சோகமான ஒரு பதிவாக இருக்கப்போகிறது என்பதும், அந்த ஓசை ஒவ்வொருவரினது ஆன்மாவையும் தொட்டுச்செல்லும் பாரம் மிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதிலும் இருவரும் கருத்துடன்பட்டுக்கொண்டோம்.

பாடலின் அடிவேரான மெட்டு தயாராகிவிட்டது. ஆனால், சரியான beat அமையவேண்டுமே. எல்லா பாடல்களிலும் வருவது போன்ற பாணியை பின்பற்றாது, வித்தியாசமாக அமையவேண்டும் என்ற வெறியுடன் Deyo, ஏதேதோ முயற்சிகள் எல்லாம் செய்தான். ஈற்றில், தற்போது நீங்கள் எல்லோரும் கேட்கும் தாளத்துக்கு அண்மித்த ஒரு beat arrangement உடன் "recording போகலாமா" என்றான். எனக்கோ, அது சாடையாக " அழகான ராட்சசியே" பாடல் beatஐ ஞாபகப்படுத்துகிறதே என்ற ஒரு தயக்கம் அடி மனதில் எழுந்தது. அதை Deyoவிடம் கூறியவுடன், தனக்கும் சற்று அந்த feeling வருவதாக கூறிவிட்டு, மீண்டும் beat arrangementக்குள் முக்குளித்து நீராடி, முற்றிலும் மாறுபட்ட rhythm setup உடன் வெளியில் வந்தான்.

இப்போது, நான் பல்லவிக்கு நான் எழுதிய வரிகளை பாடிக்காட்டினேன்.
"ஏதேதோ எண்ணம் நெஞ்சில் எரியும் தீயாய் சுடுகிறதே
காதல் என் இரவினில் நாளும் கனவுகள் எழுதி செல்கிறதே"

"என்னடா! வரிகளில ஒரு புதுமை தெரியிற மாதிரி இல்ல. வார்த்தைகளிலயும் ஒரு பழைய பாட்டு feeling வாற மாதிரி கிடக்கு" எண்டான் Deyo. எனக்கும் பாடிக்காட்டும்போதுதான் சாதுவாக உறைத்தது. அது என்ன எரியும் தீ. தீ என்றாலே எரியுது எண்டுதானே அர்த்தம். எனக்கு ஏதோ முந்தி வித்தி அண்ணா சொன்னதுதான ஞாபகம் வந்தது. "அது என்னடா பேச்சுவார்த்தை? பேச்சு என்றாலே வார்ததைகளின் கோர்வைதானே" எண்டு கூறுவார்.

இனி என்ன செய்யிறது. வார்த்தைகளை செப்பனிடுவம் என்ற எண்ணத்துடன், ரசிகர்களுடன் இலகுவாக relate பண்ணும் விதத்தில் வார்த்தைகளை அடுக்கி,அடுக்கி Deyoவிடம் சமர்ப்பித்தேன். அவனுக்கும் பிடித்துவிட்டது. Recording ஆரம்பமானது.

Smoothஆக சென்ற பல்லவி பரிபூரணமாக,எல்லா இசையமைப்பாளர்களுக்கும் வரும் அந்த சிக்கல் பொய்ன்ட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தோம். அதாவது, first interlude. அதாவது, பல்லவி முடிந்து சரணத்துக்கு போகும் முன்னரான இசை. அதை எப்படி arrange பண்ணுவது என்று இருவரும் தனித்தனியே எங்கள் எங்கள் மண்டைகளை சொறிந்துகொண்டிருந்தபோது, "இந்த இடத்தில் நாதஸ்வர ஸ்டைலில் ரசிகர்களின் மைன்டில் ஈஸியாக register ஆகக்கூடிய மெட்டு ஒன்று போட்டால் பிரமாதமாக இருக்கும்" என்று நான் சொல்லி வாய் மூட முன்னரே, கரண்ட் அடிச்சவன் மாதிரி துள்ளிய டியோ "எடடா அந்த கசூவை" என்றான்.

இந்த Kazoo என்பதைப்பற்றிக்கூறுவதானால், அது ஒரு தனிக்கதை.

Kazoo என்பது ஒரு காற்று வாத்தியம். அதை சிம்பிளாக விளங்கப்படுத்துவதானால், நாங்கள் ஊர் திருவிழாக்களில் ஒரு ரூபாவுக்கு வாங்கி ஊதித்திரிந்த அம்மம்மா குழல் என்பது பூவரசம் இலையில் நாங்கள் செய்து பீ பீ ஊதியதன் "நவீன வடிவம்". இந்த Kazoo என்பது அந்த அம்மம்மா குழலில் "நவீன வடிவம்" என்று கூறலாம். அவ்வளவே. மெல்லிய தகரத்தால் செய்த காற்று வாத்தியம். போனமறை Vaanavil நிகழ்ச்சி பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, Arunan தான் இந்த கசூவை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய "வித்தகர்". என்னமோ தெரியவில்லை, எனக்கு அந்த வாத்தியத்தின் மீது ஒரு இனம் புரியாத காதல். நான் அதை எந்த நேரமும் ஊதிக்கொண்டிருப்தை பார்த்து, எங்கள் இசைக்குழுவின் நிவேதா, சுவாதி எல்லாம் "ஐயோ....ப்ளீஸ். உந்த சவுண்ட கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா. நுளம்பு சத்தம் போடுற மாதிரி, பயங்கர annoying தெய்வீகன்" என்று இருவரும் என்னை வறுத்தெடுப்பார்கள்.

"இவர்களது வாய்களை அடைக்குமளவுக்கு இந்த கசூவை வைத்து ஒரு பாட்டு செய்து இவர்களை பழிக்கு பழிக்கு வாங்குவது என்று அப்போதே நினைத்ததேன்" - என்றெல்லாம் நான் பீலா விடப்போவதில்லை. ஏனெனில், வானவில் நிகழச்சி முடிந்த கையோடு, Kazoo எங்கென்றே எனக்கு தெரியாது. பிறகு இன்னொரு நிகழ்ச்சிக்காக அருணனுடன் சேர்ந்து ஒத்திகை பார்த்த கையோடு, என்னை அறியாமலே, அருணனுடைய Kazoo எனது காருக்குள் வந்துவிட்டது. ( அருணன் அவர்களே..வார்தையை வடிவாக கவனிக்கவும் "என்னை அறியாமலே")

இதை அன்றைய இரவுப்பொழுதில், பாடல recording செய்வதற்கு முதல், பேசிக்கொண்டிருந்தபோது Deyo விடம் கூறி, பாடகர் Benny Dayal மேடை நிகழ்ச்சி ஒன்றில் "ஓமண பெண்ணே" பாடலின் தொடக்கத்தை கசூவில் வாசிப்பதை youtube இல் போட்டு பார்த்துக்கொண்டோம்.

Interludeக்கு என்ன செய்யலாம் என்ற தேடலில் நாம் இறங்கியவுடன் சட்டென ஞாபகம் வந்தவனாய், கசூவில் அந்த டியூனை வாசிப்பதாக முடிவு செய்யப்பட்டு, அதை live ஆக வாசித்து reording செய்தாயிற்று. அதற்கு அழகாக string sectionனை mix பண்ணி, அற்புதமான ஒரு interlude ஐ உள்ளங்கையில் அள்ளிக்கொடுத்தான் Deyo. எத்தனை interlude செய்தாலும், இந்த interlude உருவாக்கம் மட்டும் மறக்கமுடியாத அனுபவம். தருணத்தில் கிடைத்த வாத்தியம். அதற்கு ஏற்றாற் போல மெட்டு, இதில் அற்புதமாக வந்து உட்கார்ந்துகொண்ட பாடலின் ஆன்மா. அப்படியொரு, உணர்ச்சிக்குவியலாக அந்த இடையிசை அமைந்தது.

பிறகென்ன, ஏற்கனவே செதுக்கிய சரணத்தின் மெட்டு சாஸ்டாங்கமாக வந்து வீழ, மனதைக்கொள்ளை கொண்ட kazoo interlude இசையே இன்னொரு பரிமாணமாக சரணத்தின் பின்னால் சேர, பாடல் பரவச நிலைக்கே போய்விட்டது.

முன்பெல்லாம், அம்மா இரண்டு அடுப்புகளில் ஒரே நேரத்தில் கறி வைக்கும்போது, mechine போல இயங்கும் அந்த வேகத்தை பார்க்கும்போது, பிரமிப்புடன் கண்வெட்டாது லயித்துக்கிடப்போமே, அது போலத்தான், டியோவின் ஏனைய mixing மற்றும் mastering வேலைகளும் துரித கதியில் நடந்தேறியபோது, மைக்கின் முன்பாக நின்றவாறே பார்த்து ரசித்துக்கொண்டேன். அற்புதமான அனுபவம்.

எல்லாமும் முடிந்த பின்னர். பாடலை தூக்கி நிறுத்துவதற்கு bass guitar இன் சிறு கலவையும், acoustic guitar இன் தூவலும் சேர்த்து இன்னும் ஒரு படி மேலே நகர்த்துவது என Deyo முடிவெடுத்தான். மணித்துளிகள் கரைந்ததே தெரியவில்லை. அப்படியொரு வேகம். ஏற்கனவே எல்லாம் தயாரான பாடலை அன்று இறுதியாக்கும் வேலையில் ஈடுபட்டதுபோல, மெட்டை தவிர எதுவுமே தயாராகாத பாடலை, சீவித்தள்ளி விட்டு அந்த சாமத்தில் "Mc Donalds" போனோம். நாம் எதிர்பார்த்ததைவிட அழகாகவே உருவான பாடலின் இசையை நினைத்து நினைத்து drive thru இல் எமக்கு பரிமாறிய பெண்ணை பார்த்து அநியாயத்திற்கு அதிகாமாகவே இருவரும் சிரித்தோம். அவளும் அப்பாவியாக எமை பார்த்து நகைத்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து, டியோவின் அழைப்பின் பேரில் வந்த Ashique M. Fahim, பாடலுக்கு bass மற்றும் acoustic பொடிகள் தூவி, பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்துவிட்டான்.

Recording முடிந்தவுடன், phone பண்ணிய Deyo, "டிசெம்பர் 7 ஆம் திகதி பாட்டை youtube இல் வெளியிடுவம். Lyrics videoவை readyபண்ணவேணும்" என்றான். உடனே நிமாலை அழைத்தேன். பாடல் பற்றி விவரத்தை சொன்னேன். வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று மட்டும்தான் கூறினேன். டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி காலை, தகதகவென அப்படியொரு தரம் மிக்க lyrics videoவை அனுப்பி வைத்தார் Nimal Taz.

Nimal, நாம் எங்கேயோ வைத்து அழகு பார்க்க வேண்டிய அற்புதமான தொழில்நுட்ப கலைஞன். கணினியில் அவர் எத்தனையோ சுவைமிக்க கறிகளை பண்ணக்கூடிய சமையல் கலைஞன். ஆனால், அவரிடம் அநேகமானவர்கள் - அவரது திறமையை பயன்படுத்தாது - சாம்பாரை மட்டும் கேட்டு வாங்கி பரவசப்பட்டுக்கொள்வது துரதிஷ்டவசமானது. ஆனால், "கானல் மேல் காதல்" பாடலுக்கு அவர் புரிந்த நளபாகம் நச்! நச்!

இவர்கள் யாவரதும் உச்சத்திறமைகளின் விளைவுதான், இன்று - 7 நாட்களில் - ஆயிரம் பார்வைகளை தாண்டி நிற்கும் " கானல் மேல் காதல்"


Wednesday, November 19, 2014

சாரு எனப்படும் "சகலகலா வல்லவன்"

சாரு என்றழைக்கப்படும் எனது உற்ற தோழனின் - கலைத்தாயின் செல்ல மகனின் - பிறந்தநாள் இன்று.

இந்தப்பதிவு நான் நெடுநாட்களாய் எழுதத்தோன்றிய விடயத்தின் ஒரு விஸ்தீரணமான விவரிப்பு. வெளிக்கொணரப்படவேண்டிய கலைஞன் ஒருவனின் சிறுகுறிப்பு.

சாரு என்றழைக்கப்படும் சாரங்கனை –

உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் “படலைக்கு படலை” என்ற நாடகத்தின் ஊடாக ஒரு நகைச்சுவை அரங்காற்றுகை பாத்திரமாக அறிந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளனாக தாளவாத்திய கலைஞனாகவும் மேடைகளில் பார்த்திருக்கிறார்கள்

ஆனால், இந்தப்பதிவு, சாரு எனப்படும் - பலரும் அறிந்திராத - இசையமைப்பாளன் பற்றியதாகவும்.

இன்று உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழ் இளையோர்கள் பல முனைகளில் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதும், அவர்களது படைப்புக்கள் பல்தேசிய மக்களால் அங்கீகரிக்கப்படுவதும் எமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடையாளங்கள் ஆகும்.

ஆனால், இவ்வகையான mainstream audienceஸின் ரசனைக்கு விருந்தாகும் படைப்புக்களை வழங்கவல்ல ஒரு கலையுலக பிரவேசத்துக்கு முன்னோடிகளாக தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் ஒரு இளைஞர்படை தங்கள் புதிய சிந்தனைகளுடன் களமிறங்கியது. பிரான்ஸில் கிளம்பிய அந்த புயல் இன்றுவரை உலகளாவிய ரீதியில் ஒரு அதிர்வை ஏற்படுத்திக்கொண்டுதானிருக்கிறது.

அந்த இளைஞர்கள் பெயர்களை அடுக்கிச்சென்றால், அவர்களைவிட அவர்களின் படைப்புக்கள் அதிகம் பேசும்.

அவர்கள்தான் -

உலகயே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த விஜய் ரி.வியின் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” “ஜோடி நம்பர் வன்” நடன போட்டிகளில் வெற்றி நாயகனாக வலம் வந்த பிரேம்கோபால்.

தனது தொடர்ச்சியான குறும்படங்களின் ஊடாக வித்தியாசமான கலைப்பரிமாணங்ளை யதார்த்த வாழ்வியலின் சாட்சியங்களாக சமர்ப்பித்து எங்கள் கண் முன்னே கொண்டுவரும் சதா பிரணவன்.

நாடகம், குறும்படம் என்று வளர்ந்து தானே தயாரித்து நடிக்கும் திரைப்படங்களை இயக்கும்வரை முன்னேறி ஷங்காய் திரைப்படவிழா வரை "Gun & Ring" என்ற தங்களது திரைப்படத்தை கொண்டு சென்று திரையிட்ட வெற்றிநாயகன் மன்மதன் பாஸ்கி.

போட்டி செறிந்த தென்னிந்திய திரைக்களத்தில் நுழைந்து "கலாப காதலன்" "இராமேஸ்வரம்" போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த இன்னொரு இசைப்பண்டிதன் நிரு.

இவர்களின் வரிசையில், நகைச்சுவை நாடக கலைஞனாக அறிமுகமாகி பின்னர் தன்னை பல பரிமாணங்களில் செதுக்கி புதிய சாளரங்கள் வழியே தனது இசைத்திறமைகளை விஸ்தீரணமாக வளர்த்துக்கொண்டவன் சாரு.

பிரான்ஸில் தமிழ் தொலைக்காட்சியொன்றில் பணிபுரிந்த காலத்திலேயே தனது இசைப்பயணத்தை ஆக்ரோஷமாக ஆரம்பித்தவன், முற்று முழுதாக computerise பண்ணிய இசையை தகுந்த தொழில்நுட்ப அணுகுமுறையின் ஊடாக லாவகமாக பயன்படுத்தும் வித்தையை இன்றுவரை அற்புதமாக கையாண்டு வருபவன்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், இசைத்தொகுப்பு ஒன்றிற்காக பாடல் ஒன்றை கேட்டதோடு தொடங்கிய எமது நட்பு இன்றுவரை இசை எனும் வலுவான பாலத்தில்தான் அதிகம் பயணம் செய்துகொண்டுள்ளது. எந்த ஒரு பாடல் புதிதாக வெளியானாலும் அது பற்றி ஒரு ஆராய்ச்சி, புதிய பாடகர்கள் - இசையமைப்பாளர்கள் - இசை குறித்த விமர்சனங்கள், வித்தியாசமான படைப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்றெல்லாம் வாரம் ஒரு முறையாவது மணிக்கணக்கில் உரையாடுவோம். சலிப்பதே இல்லை. ஆனால், சாருவின் இசைஞானம் விசாலமானது. அவனது பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் சிலவேளைகளில் பாரிய வித்தியாசம் இருக்கும்.  அவ்வாறு அமைந்ததுதான் எமது முதல் சந்திப்பும்கூட.

முதலில் குறிப்பிட்டதுபோல, சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இசைத்தொகுப்பு ஒன்றிற்காக பாடல்களை கோர்க்கும் பணியில் பயங்கர பிஸியாக ஓடித்திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் நண்பன் ஒருவன், “படலைக்கு படலை சாரு மியூஸிக் செய்யிறவன் என்று கேள்விப்பட்டனான். எதுக்கும் கேட்டுப்பாரன்” என்றான். அதற்குப்பிறகு, சாருவை சந்தித்து நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு பாட்டு தருவதாக முடிவு செய்யப்பட்டது.

இறுவட்டுக்கான பாடல்கள் எல்லாம் நிறைவடைந்துவிட்டது. சாருவின் பாடல் ஒன்றுதான் பாக்கி. சிட்னியில் இளங்கோ அண்ணன் வீட்டு Recording தியேட்டரில், ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு சாருவின் பாட்டு Recording ஆரம்பிக்கிறது. பாட்டு ரெடியானதும் அதை எடுத்துக்கொண்டு, மற்றைய பாடல்களையும் சேர்த்து final mixing and mastering தரப்படுத்தலுக்காக ஜோர்ஜ் என்பவரிடம் கொண்டுசெல்வதற்கு இளங்கோ அண்ணனுடன் பேசிக்கொண்டு நான் வெளியே காத்திருந்தேன்.

9…10…11...12…1... அதிகாலை 2 மணியிருக்கும். வெறித்த பார்வையுடன் Recording தியேட்டரைவிட்டு வெளியே வந்தான் சாரு. ஐந்து மணித்தியாலங்கள் ஒரே இடத்திலிருந்து Composing வேலை பார்த்தது களைப்பாகத்தானே இருக்கும் என்று நினைத்துக்கொண்டு, எப்படியும் பாட்டு ரெடிதானே என்ற சந்தோஷத்துடன் எழும்பிய எனக்கு சாருவின் பதிலோ என்னை மீண்டும் கதிரையில் தொப் என்று போட்டுவிட்டது.

“என்ன இழவு பிடிச்சவங்களடா..!! சொல்லிக்குடுக்கிறத பாடத்தெரியாமல் வந்துநிண்டு கொக்கரிச்சுக்கொண்டு நிக்கிறாங்கள். ஒண்டு மாறி ஒண்டு என்று ரெண்டு பேரை வச்து Try பண்ணீட்டன் மச்சி, சுதி மருந்துக்கும் சேருதில்லை. நேரம் போகுது. ஓன்றில் நீ பாடு. அல்லது, இந்தப்பாட்டை Drop பண்ணுவம். மற்ற பாட்டுகளை நீ Masteringகுக்கு கொண்டு போ” என்றான்.

இவ்வளவு கஸ்டப்பட்ட பிறகு பாட்டை கைவிடுவது என்பது சரியென்று எனக்குப்படவில்லை. “சரி உள்ளே நட” என்றுவிட்டு Recording தியேட்டருக்குள் இருவரும் சென்றோம்.

சரியாக நான்கு மணிக்கு Recording முடிந்தது. அதுவரை அந்தப்பாட்டு பற்றி எந்த தகவலும் தெரியாத எனக்கு, பாடி முடித்தப்பின்னர்தான் புரிந்தது, நல்லகாலம் அந்த பாடல் என்னைவிட்டுப்போகவில்லை என்று. அப்படி ஒரு பாடல். இன்றுவரை, எனது Paly Listல் அகற்ற முடியாத மெட்டாகவே குந்திக்கொண்டிருக்கிறது. இந்தப்பாடலில் வரும் எந்த இசைக்கருவியும் Manualலாக வாசிக்கப்பட்டதல்ல. ஆனால், அந்த பாடலை கேட்கும் எவரும் அதை நம்பமாட்டார்கள். அப்படியொரு instrumental arrangement.

பாட்டு முடிந்து மறுநாள், எல்லா பாடல்களையும் ஜோர்ஜிடம் கொண்டு சென்றேன். ஜோர்ஜ் என்பவர் Greek நாட்டு இசைவிற்பனர். Final version பாடல் வெளிவரும் முன்னர், ஸி.டி. ஒன்றில் எல்லா பாடல்களும் சமமான Volume ல் கேட்க வைப்பது உட்பட நுணுக்குமான சத்தச்சேதாரங்களை கழிவு செய்வது போன்ற இறுதிப்படுத்தும் வேலைகளில் கைதேர்ந்தவர்.

நான் கொண்டு சென்ற பாடல்கள் எல்லவாற்றையும் தனது கணனியில் ஏற்றிவிட்டு ஒன்றொன்றாக கேட்டுக்கொண்டுவந்தார். “கார்த்திகை பூக்களே” என்ற பாடலைக்கேட்டதும், கண்கள் விரிந்து ஆச்சரியம் முகத்தில் பூரிக்க “இந்த பாடல் யார் arrangementnசெய்தது” என்றார். நானும் சாருவைப்பற்றிக்கூறினேன். ஒரு பத்துநிமிடங்களுக்கு ஓயாது wonderful, marvelous, fantastic என்று துதி பாடிக்கொண்டே இருந்தார். சாருவுடன் பேசலாமா என்றார். Call பண்ணிக்கொடுத்தேன். அவரால் ஆங்கிலத்தில் அதிகமாக சாருவை தொலைபேசியில் பாராட்ட முடியவில்லை. ஆனால், அவர் அருகில் நின்று பார்த்த எனக்கு, அவரது முகபாவனைகளிலிருந், அவர் சாருவை எவ்வளவுக்கு பாராட்ட முயற்சித்தார் என்பது அப்படியே தெரிந்தது.

அப்போதுதான் புரிந்தது, சாருவின் இன்னொரு திறமை. இசையமைப்பில் மிக முக்கிய Post Production காரியமான Mastering / Balancing வேலையில் சாரு அப்படி ஒரு பாண்டித்தியம் நிறைந்தவன். அவனது sound mixing எப்போதும் எனக்கு இசையமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்களிலுள்ள நேர்த்தியை ஞாபகமூட்டும்.

இந்த சம்பவம் அவனது இசை ஆழத்தை ஒரே தடவையில் எனக்கு அறிமுகம் செய்த நிகழ்வு எனலாம். அதன் பின்னர், அவனுடன் செய்துகொண்ட எத்தனையோ Recording நிகழ்வுகள். எல்லாம் பரவசம்.

சாரு இசையமைந்த “லக்ஷ்மி நாதம்” பக்தி பாடல்கள் இசைப்பேழை அண்மையில் வெளியிடப்பட்டது. சாருவின் இசையில் தென்னிந்திய பாடகர்கள் பிரசன்னா, மது பாலகிருஷ்ணன், கிருணஷ்ராஜ் மற்றும் பலர் பாடியது.

சாரு இசையமைத்த பல தாயக பாடல்கள் மற்றும் எழுச்சி பாடல்கள் ஆகியவை இன்றும் மாவீர்ர் நிகழ்வுகளில் மறக்கமால் இடம்பிடிக்கும் இதயத்தை பிழியும் உணர்வுபூர்வமான ராகங்கள்.

பிரான்ஸில் வருடா வருடம் நடைபெறும் குறும்பட போட்டி நிகழ்வில் மூன்று வருடங்கள் தொடர்ச்சிய சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதைப்பெற்றுக்கொண்டவன் சாரு.

இவ்வாறு அவன் இசைப்பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், நாம் இப்படியான – சாரு போன்ற – கலைஞர்களை எவ்வளவுக்கு அங்கீகரித்துள்ளோம். அவன் போன்ற கலைஞர்களை எத்தனை தடவைகள் முன்னிறுத்தியுள்ளோம். அதற்கு எவ்வளவுதூரம் எமது மக்கள் தயாராக உள்ளார்கள்.

இதுவே என் கவலை.

"காற்றுக்கு ஓய்வென்பதேது - அட
கலைக்கொரு தோல்வி கிடையாது"



Friday, November 14, 2014

"இசை இளவரசன்" டி.இமான்


டி.இமான் என்றழைக்கப்படும் தினகரன் இமானுவேலின் இசை சிருஷ்டிப்பில் உருவான “கயல்” திரைப்படம் வெளிவந்திருக்கிறது. பிரபுசாலமோனும் இமானும் கைகோர்க்கும் மூன்றாவது திரைச்சித்திரம்தான் கயல். ஏற்கனவே, மைனாவும் கும்கியும் கதையில் மாத்திரமல்ல இசையிலும் ரசிகர்களை கட்டிப்போட்ட வெற்றிப்படங்களாகி இன்னும் ரிங் டோன்களாக ஒலித்துக்கொண்டிருக்கும்வேளையில், "கயல்" பாடல்கள் வெளிவந்து தென்றலாய் தடவ ஆரம்பித்திருக்கின்றன.

சிறுவயதிலிருந்து இசைக்கு அடிமையாகி, குறிப்பாக திரையிசைப்போதைக்கு தீராத அடிமையான எனக்கு இமானின் ஆரம்ப காலப்பாடல்கள், அவர் மீது ஒருவித வித்தியாசமான ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தன. ஏனெனில், இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பகாலப்பகுதியில் திரையிசைக்கு அறிமுகமான இமானின் பாடல்கள் அநேகமானவற்றில் நல்ல மெட்டு இருக்கும்: அநேகமான பாடல்களுக்கு பொருத்தமான குரல்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கும்: ஆனால், ஆர்ப்பரிக்கும் இசைக்கருவிகள் - தேவையற்றமுறையில் பயன்படுத்தப்பட்டு - பாடல்களின் உயிர்ப்பை அவ்வப்போது வெகுவாக பாதிக்கும்: விளைவு - அந்த பாடல்கள் ரசிகர்களிடம் அடையவேண்டிய உண்மையான வீச்சை பெறத்தவறியிருக்கும்.

அத்துடன், இமானின் ஆரம்பகால பாடல்களில் இன்னொரு குறைபாடாக காணப்பட்ட விடயம். அவரது பாடல்கள், mixing & mastering செய்யப்பட்ட விதம். முதலில் குறிப்பிட்டதுபோலவே, ஆர்ப்பரிக்கும் தேவையற்ற இசைக்கருவிகளின் ஆக்கிரமிப்பு அநேக தருணங்களின் பாடகர்களின் குரல்களை விழுங்கிவிடும். அதை நேர்த்தி செய்யக்கூடிய arrangement வாய்ப்பும்கூட அநேக தருணங்களில் தவறவிடப்பட்டிருக்கும்.

ஆனால், இவையெல்லாவற்றையும் தாண்டியும், அவ்வப்போது சில பாடல்கள் இமானின் பெயர் சொல்லும் மெட்டுக்களாக தமிழ் திரையிசைவெளியில் கோலோச்சிக்கொண்டிருக்கத்தவறவில்லை.

குறிப்பிடத்தக்க பாடல்களாக,

"சேனா" படத்தில் "தீராதது காதல் தீராதது"

"விசில்" படத்தில் "அழகிய அசுரா"

"கிரி" படத்தில் "கிசு கிசு மனுசா"

"ஆணை" படத்தில் "அழகிய தரிசனம்"

"நெஞ்சில் ஜில் ஜில்" படத்தில் "கண்ணுக்குள் கலவரம்"

"லீ" படத்தில் "ஒரு களவாணி பயலே"

போன்ற பாடல்களை எனக்கு நெஞ்சு நெருக்கமான மெட்டுக்களாக எப்பொழுதும் முணுமுணுத்துக்கொண்டிருந்துள்ளேன்.


எனது நண்பர் ஒருவர் ஒருமுறை வெள்ளந்தியாக “இந்த இமான் என்றொரு இசையமைப்பாளர் இருக்கிறாரே. அவர் அர்ஜூன் படத்துக்கு மட்டும்தான் இசையமைப்பாரா?” என்று கேட்டார். அவர் கேட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், அர்ஜுன் படத்துக்கு இமான் இசையமைத்தது அதிகம் என்று கூறலாம். "ஆணை", "வாத்தியார்", "சின்னா", "துரை", "மருதமலை" ஆகியவை இதில் அடங்கும்

இப்படி அவ்வப்போது, அதிரடிகளை கொடுத்து தன் இசையை பேசிவந்த இமான், ஒரு சரவெடியாக கிளம்பி, தன் இசையை மற்றவர்கள் பேசவைத்த படமாக மைனாவை கூறலாம். "மைனா" என்பது இயக்குனரின் பிரபுசாலமானின் ஒரு அற்புத திரைக்காவியமாக - யதார்த்த வாழ்வியலின் பிரதிபலிப்பாக - சமானிய ரசிகனின் ரசனையில் ஆழமாக கோடு கீறிச்சென்ற திரைமொழி. அந்த ஆழமான திரைக்கதைக்கு இதமாக இசைவார்த்து திரையில் அந்த படைப்பை இரட்டிப்பாக தூக்கி நிறுத்தியவர் இமான்.

அதன் பிறகு வந்த சில படங்களில், அப்பிடி இப்பிடி இசைக்கபடி ஆடிய இமான், கும்கி, ரம்மி, ஜில்லா போன்ற படங்களில் அடித்த சிக்ஸரில் தொலைந்த கோடான கோடி ரசிகர்களின் இதயப்பந்துகளை இன்னும் தேடிக்கண்டுபிடிக்கவில்லை. அப்பிடி ஒரு இமாலயப்பாய்ச்சல். அத்தனை பாடல்களும் அருமருந்து. ரசிகர்களுக்கு கிடைத்த புதுவிருந்து.

“கூட மேல கூட வச்சு” பாடல் கிட்டத்தட்ட உலக தமிழ் திரையிசை ரசிகர்களின் தேசிய கீதமாகவே முணுமுணுக்கப்பட்டது. 2013 – 2014 ஆம் ஆண்டு இமான் எனும் இசைச்சாகரம் ஏற்படுத்திய அதிர்வு தமிழ் திரையிசை சரித்திரத்திரத்தில் பதிவுசெய்யப்படவேண்டிய சாதனை என்றுகூறினால் மிகையில்லை.

இமானின் இன்னும் சில சைலன்ட் சாதனைகளாக என் நெஞ்சில் அவரை உயரத்தில் வைத்திருக்கும் விடயங்கள் இங்கு கோடிட்டுக்காட்டப்படவேண்டியவை.

2011 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் கதை ஒன்றை மையமாக வைத்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எடுத்த திரைப்படம் “உச்சிதனை முகர்ந்தால்” ஈழத்தமிழர் பற்றிய கதை – சோகம் ததும்பும் திரைமொழி, இப்படியான படத்திற்குள் காலைவைத்து ஏன் சர்ச்சைகளை சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்று பல இசையமைப்பாளர்கள் இந்தப்படத்தைவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். பெரிய பெரிய இசையமைப்பாளர்களையெல்லாம் வைத்து படத்தை இயக்குவதற்கு தயாரிப்பு செலவு ஒன்றும் புகழேந்தி தங்கராஜூக்கு அவ்வளவாக உதவிசெய்யவில்லை.



இந்த இடத்தில்தான், அணுகியவுடன் ஆதரவுக்கரம் நீட்டியவர் இமான். ஒரு தமிழனாக தன் கடமையை செய்யவேண்டும் என்ற உணர்வோடு இமான் வடித்த பாடல்கள் “உச்சிதனை முகர்ந்தால்” படத்துக்கு எப்படி அமைந்தன என்பதற்கு, படத்தின் கிளைமக்ஸை பார்ப்பவர்களின் கடைக்கண்ணில் சொட்டும் கண்ணீர்த்துளியே சாட்சி. பலராமும் மாதங்கியும் பாடிய “உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி” வெளிவந்த காலப்பகுதியில் சித்தம் கிறங்கடித்த பாடல் எனலாம். இன்று மீண்டும் கேட்டாலும், ஓடிவந்து இதயத்தில் உட்கார்ந்துகொள்ளும் இதமான மெட்டு.

இதேபோன்ற இமானின் இதயத்தை வருடும் இன்னொரு இசைச்சாதனைதான், கண் பார்வையற்ற – கணீர் குரல் - வைகோம் விஜயலக்ஷ்மியை “என்னமோ ஏதோ” படத்தில் “புதிய உலகில் புதிய உலகில்” என்ற பாடலுக்காக உள்வாங்கியது. அந்த பாடலை அன்றல்ல இன்றல்ல என்று கேட்டாலும் மூளைக்குள் ஏதோ கிறுகிறுக்கும். இதயம் காற்றுவெளியில் எழுந்து பறக்கும். இந்த வாழ்வின் அத்தனை ஆசா பாசங்களையும் துறந்துவிடவேண்டும் என்றொரு அத்வைத நிலைக்குள் அரவணைத்துவிடும். அப்படியொரு இசை. ஆந்த இசையில் அப்படியொரு ஆழம். அப்படியொரு பாரம்.



இவ்வாறான இமானின் இசைப்பயணத்தில் அவர் இணைத்துக்கொள்ளும் புதிய பாடகர் பட்டியலும் அவரது பாடல்கள் தற்போது வெற்றி பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்று கூறலாம். “எயார்டெல் சுப்பர் சிங்கர்” எனப்படும் உலகையே கட்டிப்போட்டுள்ள reality show இலிருந்து இமான் தனது பாடல்களுக்கு பாடகர்களை தெரிவுசெய்வது, அவரது பாடல்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்குவது மட்டுமல்லாமல், எயார்டெல் சுப்பர் சிங்கரில் அந்த பாடகர்களுக்கு உளகளாவிய ரீதியில் உள்ள ரசிகர்களை அப்படியே இமானின் பாடல்களுக்கு  இடம்பெயர்த்துவிடுகிறது. இது இமானுக்கும் இந்த பாடர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பரஸ்பர வெற்றியே ஆகும்.

இந்த பட்டியலில், ஹரிஹரசுதன், சாய்சரண், சந்தோஷ், பூஜா, மாளவிகா என்று பலர் அடங்குவர். இதில், என்ன விசேடமெனில், இவர்கள் அனைவருக்கும் மிகக்குறுகிய காலத்தில் - அருமையான – முத்துமுத்தான - ஹிட் பாடல்களை கொடுத்து அவர்களது இசைப்பயணத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்திவிட்டிருக்கிறார் இமான். ஹரிஹரசுதனின், “ஊதாக்கலரு ரிப்பன்”, சந்தோஷ் - பூஜா பாடிய “எதுக்காக என்ன நீயும் பார்த்தா” சாய்சரண் - மாளவிகா பாடிய “டங் டங் டக டக டங் டங்” ஆகிய பாடல்கள் அவர்களை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த இசையமைப்பாளர்களிடமும் அவர்களை கொண்டுசேர்த்துவிட்டுள்ளன.

இவ்வாறான இசைச்சாதனைகளுடன் நாளுக்கு நாள் புதிய முயற்சிகளுடன் பயணிக்கும் இமானின் இசை ஊர்வலம் தொடரவேண்டும். மெட்டுக்களில் காதல் கொண்ட இசையமைப்பாளர்கள்தான் நீண்டகாலம் ரசிகர்களின் மனதில் நின்றுநிலைக்க முடியும். இமான் கடந்துவந்த காலப்பகுதி சுலபமானதல்ல. கடந்த 15 வருடங்களில், தமிழ்திரையிசை தளத்தில் எத்தனையோ புதிய புதிய இசையமைப்பாளர், அவர்களின் எத்தனையோ புதிய புதிய முயற்சிகள், புதிய தொழில்நுட்ப அறிமுகங்கள், இவர்கள் எல்லோரையும்விட தொடர்ந்து இசைச்சிங்கங்களாக கோலோச்சும் ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா – யுவன், இப்போது புதிதாக அனிருத் போன்றோரின் அசைக்கமுடியாத மார்க்கெட். அவர்கள் கொடுக்கும் ஹிட் என கழுத்தை இறுக்கும் போட்டிகளுக்கு நடுவில் தன் திறமையாலும் அதன் மேலுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையாலும் தனது இசை சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பி, எல்லா புகழுக்கும் தகுதியான இசை இளவரசனாக ரசிகர்களின் மனதுக்குள் மகுடி வாசிக்கிறார் இமான்.

சுகல இசைககளிலும் தனது படங்களில் புகுந்துவிளையாடும இமான், இதுவரை பாரம்பரிய இசையை மட்டும் அடிப்படையாக எந்தப்பாடல்களையும் உருவாக்கவில்லை என்பது என் மனதில் நெடுநாளாக இருக்கும் ஒரு குறை. (தன்னுடைய பாடல்கள், பிற மொழி பாடல்கள் என்று அங்கு கொத்தி இங்கே வெட்டி இசை கோர்க்கும் ஹரிஸ் ஜெயராஜே அந்நியன் படத்தில் முழுப்பாடல் இல்லாவிட்டாலும் பாடலின் ஆரம்ப இசையாக தனது சாஸ்திரிய இசைஞானத்தை பதிவுசெய்ய முயற்சியாவது பண்ணியிருக்கிறார்) அதை எப்போது இமான் நிறைவேற்றுப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். ஏனெனில், அதற்குரிய சகல ஆற்றலும் தகுதியும் அவருக்கு நிறையவே உள்ளது. அதை வித்தியாசமாக தரக்கூடிய படைப்பாற்றலும் அவருக்குண்டு.

அதுவரை, ஷ்ரேயா கோஷலின் “கயல்” பாடலுக்கு மீண்டும் செல்கிறேன்.

“என் ஆளை பார்க்கப்போறன்”



Thursday, November 6, 2014

நாதம் என் ஜீவனே....



'எயார்டெல் சுப்பர் சிங்கர்', 'சண் சிங்கர்', 'கேடி Boys கில்லாடி Girls' என்று புதிது புதிதாக முளைத்த Reality Showக்களினால், தமிழ் இசை எனப்படுவது உலகளாவிய ரீதியில் இன்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு பரிணாமங்களை எட்டிவிட்டது. 
ஒரு காலத்தில் திரையிசைப்பாடல்கள் எந்தப்படத்தில் வெளியானவை என்ற தகவலை அல்லது யார் பாடினார்கள் என்ற தகவலை மட்டும் தெரிந்திருந்த சாமானிய ரசிகர்கள், இன்று அந்த பாடலின் ராகம் முதற்கொண்டு இசையமைப்பு நுணுக்கங்களைக்கூட சர்வசாதாரணமாக பிரித்து மேய்ந்து விமர்சிக்கும் ஆரோக்கியமான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் - 
அதற்கு காரணம் தலைமுறைகள் தாண்டிய பரந்த இசை அறிவும் அதற்கு ஏற்ற தரத்துடன் வளர்ந்துள்ள ஆராக்கியமான இசைநிகழ்ச்சிகளும்தான்.
ஆனால், தொண்ணூறுகளின் ஆரம்பம் முதல் திரைஇசை என்பது என் போன்றவர்களுக்கு கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான பாடல்கள், தூத்துக்குடி வானொலியில் முக்கியமாக இரவு 08.45 ற்கு ஒலிபரப்பாகும் பாடல்கள், பலாலி வானொலியில் ஒலிபரப்பான பாடல்கள் என்பவற்றின் ஊடான அறிமுகமாகவே இருந்தது. 
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ராஜன், கண்ணன், சாந்தன் மற்றும் அருணா இசைக்குழுக்கள் எமக்கெல்லாம் பெரும்பேறு அளித்த இசை நிகழ்ச்சிகள் எனலாம். ராஜன் இசைக்குழுவில் சத்தியசீலன் பெண்குரலில் பாடும் "பூங்குயில் ராகமே", ஸ்டனிஸ் சிவானந்தனின் 'பட்டத்து ராஜாவும் பட்டாளச்சிப்பாயும்" மற்றும் "தேவனே என்னை பாருங்கள்" பாடல்கள், அருணா இசைக்குழுவின் "புதுச்சேரி கச்சேரி" என்ற சிங்காரவேலன் படப்பாடல் எஸ்.ஜி.சாந்தனின் "கனலில் கருவாகி" போன்றறைதான் எமக்கெல்லாம் விசிலடிக்கும் வித்தையை காட்டித்தந்த அந்தக்கால அற்புதங்கள்.'அண்டர்வெயார்' இல்லாமல் வேட்டியை இறுக்கக்கட்டி அங்கப்பிரதஷ்டணை அடித்து சாதனை செய்து காண்பிப்பதற்கான திருவீதிகளாக ஆலயங்களை நாங்கள் அப்போது பயன்படுத்திக்கொண்டாலும், இந்த இசைக்கச்சேரிகளும் எங்களை ஆலயங்கள் நோக்கி வாரி அணைத்துக்கொண்டன. 
தண்ணீர்பந்தல், கம்பன் கழக பேச்சாளர்களின் சொற்பொழிவு, இசைக்கச்சேரிகள் என்றெல்லாம் ஆலயங்கள் எங்களுக்கு 'எயார்டெல் சுப்பர் சிங்கர்' தரும் போதையை அள்ளித்தந்துகொண்டிருந்த அந்த காலப்பகுதியில் - பிரபல்யமான நாதஸ்வர - தவில் வித்துவான்களின் வருகைகள் ஆலயங்களுக்கு எப்போதுமே ஒருவித பரவச உணர்வை ஏற்படுத்திவிடும். 
அன்று அந்த பரவசநிலையை அளித்த நாதஸ்வர இசையை நேற்று நண்பன் visakan முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட காணொலியில் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பெற்றுக்கொண்டேன். அதற்கு காரணமான நாதஸ்வர வித்துவான் வேறு யாருமல்ல. 33 வருடங்களாக யாழ் மண்ணை தங்கள் இசையால் கட்டிப்போட்ட நாதஸ்வர சக்கரவர்த்திகள் கானமூர்த்தி - பஞ்சமூர்த்தி சகோதரர்களில், பஞ்சமூர்த்தியின் மகன் குமரன். என்ன ஒரு இசைஞானம்?
கரவெட்டி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கச்சேரியில் அவர் வாசித்துள்ள "உயிரே உயிரே" பாடலை பார்த்ததிலிருந்து, அந்த பாடல் மாறுவேடத்தில் உடலுக்குள் புகுந்து இசைக்கலகம் செய்தவண்ணமுள்ளது. இந்தப்பாடல் இல்லாமல் ஏ.ஆர். ரகுமானின் நிகழ்ச்சிகளோ, ஹரிஹரன் மற்றும் சித்ராவின் இசைநிகழச்சிகளோ எங்கும் இடம்பெற்றதில்லை. அந்த பாடலை ஒவ்வொருமுறை பாடும்போதும் ஹரிஹரன் புதிது புதிதாக சங்கதிகள் வைத்து பாடுவதும் அந்தப்பாடலினால் எவ்வாறெல்லாம் ரசிகர்களின் ஆன்மாவை அர்ச்சனை செய்யமுடியுமோ அவ்வாறெல்லாம் பல ஸ்தாயிகளிலும் சென்று இசைப்போரே நடத்தி மெய்மறக்கச்செய்பவர் பாடகர் ஹரிஹரன். ஒரு குரல் தேர்ந்த கசல் பாடகராக அவருக்கு அந்த முயற்சி என்றுமே கடினமாக இருந்ததில்லை. அந்த பாடல் பல வருடங்கள் கடந்து இன்றும் புதிதாக இருப்பதற்கு மூல காரணம் அதனை சிருஷ்டித்த ஏ.ஆர்.ரகுமான்.
ஆனால், அந்த பாடலை தனது நாதஸ்வரத்தால் அநாயசமாக வாசித்து ஹரிஹரன் தன் குரலால் காண்பிக்கும் இசை ஜாலத்தை குமரன் தன் குழலால் காண்பித்திருக்கும் அழகு இருக்கிறதே...இந்த காணொலியை எத்தனை தடவைகள் பார்த்தாலும் போதாது. 
ஒரு பாடலை improvise பண்ணி பாடுவது என்பது தேர்ந்த பாடகருக்கு பெரிய சிக்கலான விடயமில்லை. ஆனால், அவ்வாறு தன் வாத்தியத்தால் improvise பண்ணி இசைப்பது என்பது எல்லா இசைக்கலைஞரும் செய்யக்கூடிய விடயமே அல்ல. என்னதான், improvise பண்ணி இசைப்பதற்கு எம் இசைஞானம் எத்தனித்தாலும் அதனை ஒலியிலே வெளிக்கொணர்வதற்கு எந்த இசைக்கலைஞனுக்கும் அவனது வாத்தியத்தில் கைதேர்ந்த ஞானமும் சரளமான இசைப்புலமையும் ஒருங்கே தேவைப்படுகின்றது. இசைக்கருவி எனப்படுவது அவனது உடலின் ஒரு அங்கம் போல இணைந்துகொள்ளும் அர்த்தநாரீஸ்வர நிலையில்தான் இது சாத்தியம். அவன் போடும் இசைக்கட்டளைகள் அனைத்தையும் அப்படியே ஒலியாக்கும் வாத்தியத்தை தன்னக்தே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் உச்சம்தான் ஆத்மார்த்தமான இசையை ரசிகனிடம் கொண்டு சேர்க்கிறது. அவ்வாறான நிலையில், இசைக்கலைஞனதும் ரசிகனதும் ஆன்மாக்கள் பேசத்தொடங்கி விடுகின்றன. அந்த அத்வைத வெளியில்தான் மனித மனம் தன்னிலை மறந்து தன் எல்லா உணர்வுகளுடனும் இசையிடம் சரணடைந்துவிடுகிறது.
இந்தக்காணொலியில் அந்த பரவச நிலையை நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் தந்திருக்கிறான் குமரன். 
'உயிரே உயிரே' பாடலின் சரணத்தை வாசித்துவிட்டு ஒவ்வொரு முறை பல்லவிக்கு வரும்போது அவன் போடும் வித்தியாசமான சங்கதிகள், இதுவரை ஹரிஹரனின் குரலிலும் கேட்டதில்லை. அதுபோக, அந்த பாடலில் வரும் இரண்டாவது interlude இசைக்கலைஞர்கள் - பாடர்கள் என்று எவருமே தொட்டுக்கொள்ள அச்சப்படும் பகுதி. அதனை பாடுவதற்கோ - வாத்தியங்களில் வாசிப்பதற்கோ சரியான தாளக்கட்டுமானம் வேண்டும். அப்படியான தாளக்கட்டுமானத்துக்குள் நின்றுகொள்வதற்கு சரியான மூச்சுப்பிடிப்பு வேண்டும். இவையெல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு பாடலில் கோர்க்கப்பட்டுள்ள ஸ்வரங்களுடன் இழுபட்டபடி உச்ச ஸ்தாயிக்கு செல்லவேண்டும். அசாத்தியமான இந்த முயற்சியை எந்தப்பிசிறும் இல்லாமல் குமரன் வாசிக்கும்போது கடைக்கண்ணில் ஒரு கண்ணீர்த்துளியே எட்டிப்பார்த்துவிட்டது.
குமரன். இவன் போன்றவர்கள் நாங்கள் கொண்டாடவேண்டிய கலைஞர்கள். அவனது திறமையும் அவன் போன்றவர்களின் ஆற்றலும் எங்களால் ஆராதிக்கப்படவேண்டியவை. அவனது தந்தையின் திறமை எங்களின் கை தட்டல்களுடனும் ஒரு சில பட்டங்களுடனும் சில வெளிநாட்டுப்பயணங்களுடனும் முடிந்து போயிற்று. ஆனால், இசையில் பெரு வீச்சுடன் இறங்கியுள்ள குமரன் போன்ற அடுத்த தலைமுறையின் வீரியத்தை உலகளாவிய ரீதியில் எம் இனத்தின் ஆற்றலாக பிரகடனப்படுத்துவதும் அதை எமது சாதனைகளின் அடையாளமாக எடுத்துச்செல்வதும் எங்களின் கைகளில்தான் உள்ளது.

நந்திக்கடல் நண்டு

ஆடு, மாடு, பன்றி போன்ற பெரும் மாமிசங்களை அறவே உண்ணாத எனக்கு கடலுணவுகளில் எப்போதுமே அலாதி பிரியம். அவற்றை யார் சமைத்தாலும் அவை சமைக்கப்படும் வித்தியாசங்களை ஏகாந்தமாக ரசித்து உண்வதில் உள்ள இன்பமே தனி. அந்த வகையில் சிறுவயதிலிருந்தே இறாலுக்கு அடிமையான எனக்கு நண்டு என்றால் அதை சொல்லும்போதே வாயூறும். அதை உடைத்து உண்ணுவதற்கு பொறுமையில்லாமல் சிரமப்பட்ட சிறுவயதில் பக்குவமாக உடைத்து சதையை தனியாக கோப்பையில் போட்டுவிடும் அம்மா, நண்டுக்காலை உடைத்து அதை 'ஐஸ் கிறீம்' என்று ஊட்டிவிட்ட காலங்கள் இன்னமும் மனதில் பசுமையாக உள்ளன.
எனக்கும் கடலுணவுகளுக்குமான சகவாசம் இவ்வாறான ஒரு நெருக்கத்தில் இருக்க, கடந்த வாரம் நண்பன் ஒருவன் கேட்ட கடலுணவினால் நான் பட்ட பாடு எனது இத்தனை வருட 'சாப்பாட்டு வாழ்க்கையில்' பெரிய பங்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதாவது, சந்தைக்கு சென்று நந்திக்கடல் நண்டு என்ற ஒருவகை நண்டினத்தை வாங்கிவரச்சொன்னதே இந்த சிக்கலுக்கு காரணம். அவன் என்னை முதலில் கேட்டபோது ஏதோ கவிதை தலைப்புப்போல இருந்ததால் பேசாமல் நண்பன் தமிழ்பொடியன் இருக்கிறான்தானே, அவனை அழைத்து கேட்போமே என்று எண்ணிய எனக்கு, அவன் சீரியஸாகவே நந்திக்கடல நண்டு பற்றி விவரணம் ஒன்றைக்கொடுத்தபோது சற்று சினமேறிவிட்டது.
'அட உலகமெல்லாம் பிரபலமான நந்திக்கடலில், இவ்வளவு காலமும் நமக்கு தெரியாமல் ஒரு நண்டுக்குடும்பம் இருந்திருக்கிறதே என்று எண்ணியபோது ஒரு வேதனை, 2009 ஆம் ஆண்டுக்குப்பினர்தான் இந்த நண்டு பிரபலமானதா இல்லை முன்னமே இந்த நண்டு இதே பெயருடன்தான் உலாவியதா என்று எண்ணியபோது அதை விட இன்னும்பெரிய வேதனை, இந்த நண்டைப்போய் ஆஸ்திரேலியாவிலுள்ள சந்தையில் வாங்கி வரச்சொல்கிறானே இதை கறிக்கடையில்போய் எப்படி புரியவைக்கப்போகிறேன் என்று எண்ணியபோது முடியை பிய்த்துக்கொள்ளலாம் போன்ற பயங்கர வேதனை.
உடனயாக பொறிதட்டிய ஆள் எங்கள் Siriharan Kana தான். மஞ்சள்பொடி தொடக்கம் மாலு பணிஸ் வரை நளபாகத்தில் நாட்டியமாடும் இவருக்கு இதெல்லம் வெறும் ஜுஜுபியாக இருக்கும் என்ற புளுகத்தில் அழைத்தேன். 'அண்ணா இந்த நந்திக்கடல் நண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா" என்று கேடடேன். அதற்கு அவர் 'ம்ம்ம்...என்ன புத்தகமோ" என்றார். நான் நந்திக்கடல் நண்டு என்று முதலில் கேள்விப்பட்டபோது கவிதையின் தலைப்பு என்று நினைத்ததுக்கு அவர் எவ்வளவோ பரவாயில்லை என்றே எனக்கு தோன்றியது. இருந்தாலும் அழாதகுறையாக, 'இல்லை அண்ண, இது ஒரு நண்டு வகையினமாம்...." என்று தொடங்கி என்னுடைய பிரச்சினைகளை விளங்கப்படுத்தினேன். அவரும் தன்பங்குக்கும் எங்களது அடுத்த ஆஸ்தான நளபாக மன்னன் Sriganeshwaran Rajaratnam எங்கிருக்கிறார் என்று தேடிப்பிடித்து கேட்டால், அவருக்கும் அதே கதிதான். இதிலென்ன வேடிக்கையென்றால், நாமெல்லாம் பட்ட பாட்டை பார்த்திருந்தால் அந்த நந்திக்கடல் நண்டே கைகொட்டி..ச்சீ...கால்கொட்டி சிரித்திருக்கும்.
இறுதியில், மீண்டும் என்னிடம் நண்டு கேட்ட நண்பனை அழைத்து, "என்டா ராஜா, அந்த நண்டு எப்படிடா இருக்கும்" என்று விலாவாரியா விசாரித்து அங்க லட்சணங்கள் எல்லாவற்றையும் அப்படியோ மனப்பாடம் செய்தபடி சந்தைக்குள் நுளைந்து, ஏதோ அடையாள அணிவகுப்பில் திருடனை பிடிப்பதுபோலவே நண்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிகளை தாவி தாவி சென்றேன். இறுதியில், எல்லா நண்டுகளுக்கும் அப்பால் தனியே ஒரு பெட்டியில் நூலால் இழுத்து கால்களை கட்டியபடி மாட்டுச்சாணத்துக்கு கால்முளைத்ததுபோல கரும்பச்சை நிறத்தில் எதோ எனக்காக காத்துக்கிடந்ததுபோல என்னை கண்டதும் கால்களால் திமிறி எழும்புவதற்கு முயற்சித்தபடி 10-15 நண்டுகள் கிடந்தன. ஏதோ ஒரு பக்கத்தால் நுரை தள்ளியது. எனக்கல்ல நண்டுக்கு. ஓரளவுக்கு நான் தேடிவந்த ராசாத்தி இவள்தான் என்று முடிவாயிற்று. என் நண்பன் சொன்ன எல்லா அம்சங்களும் பொருத்தமாக இருந்தன. என்ன..இவையெல்லாம் உயிரோடு இருக்கும் என்றுதான் அவன் சொல்லவில்லை. எச்சிலை கொஞ்சம் விழுங்கியபடி இப்போவாவது இந்த நண்டின் உண்மையான பெயர் என்ன என்று அருகே சென்று அங்கிருந்த அட்டையை வாசித்தேன். அதன் பெயர் Queensland Mud Crab என்று கிடந்தது. 
அந்த நண்டு பற்றி, அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் கேட்போமென்று திரும்பினால், அந்தாளுக்கு இரண்டு கண்களையும் காணோம். என்னடா இந்த நண்டுதான் புடுங்கி தின்றுவிட்டதோ என்று அவரை அருகில் சென்று அழைத்தால், அவருக்கு மாத்திரமல்ல அந்த சந்தையில் வேலை செய்துகொண்டிருந்த அரைவாசிப்பேருக்கு அந்தளவுதான் கண்கள். (இவ்வளவுக்கு நான் யாரை சொல்கிறேன் என்று மட்டுமல்ல மெல்பேர்ன் வாசிகளுக்கு நான் எந்த சந்தைக்கு போனேன் என்றுகூட விளங்கியிருக்கும்). அந்த அண்ணாச்சி கூறியதன்படி, இந்த நண்டு உயிரோடுதானிருக்குமாம். உடைக்கும்போதுதான் சாகுமாம். உடைக்கும் முன் செத்தாலும் ஓரிரு மணிநேரத்தில் சமைத்துவிடவேண்டுமாம். இல்லாவிட்டால், அவை இறந்தவுடன் சதைகள் அனைத்து கரைந்து ஒழுகிவிடுமாம். அதற்குப்பிறகு, அம்மா எனக்கு உடைத்து தந்த சதையும் இருக்காது, ஐஸ்கிறீமும் இருக்காதாம்.
அவர் கூறியதெல்லாம் சரி. ஆனால், இந்த உயிர் நண்டை வாங்கிக்கொண்டு வீடு போவதற்குள் எனக்கு ஈரக்குலை கரைந்து உருகிஓடிவிடும் போல கிடந்தது. ஆழ்ந்து யோசித்துவிட்டு, நந்திக்கடல் என்றாலே நமக்கு ஆகாதுபோலகிடக்கு, கலியாணமான புதிதில் போயும் போயும் ஒரு நண்டிடம் கடிவாங்கினான் என்று வரலாறு என்னை பழிக்கக்கூடாது என்ற முடிவுடன் கார்ச்சாவியை கையில் எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கிவிட்டேன்.

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...