Monday, September 4, 2017

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது மௌனம் காத்த காரணத்தினால் இந்த நாட்டின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கைதாகி சிறைசென்று சித்திரவதைகளை அனுபவித்து படுகொலையாகி, ஏன் இன்னமும் பலர் அந்த சட்டத்தின் சரித்திரத் தவறினால் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்களே…

'அந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முடிவெடுக்க வேண்டும். அவர்களின் விடிவுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினையே நீக்க வேண்டும் என்றெல்லம் வீர முழக்கமிட்டுக்கொண்டு, இது போதாதென்று அந்தக் கைதிகளை நேரில் சென்று சந்தித்தும் அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவேன் என்று உறுதியளித்துவிட்டு -

'இவற்றுக்கெல்லாம் முழுமுதற் காரணமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் 89 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஒரு சிறந்த தலைவர் என்றும் அவரது அரசியல், தமிழர்களது மீட்சிக்கு வழிகோலியது என்றும் அப்படிப்பட்ட ஒரு தலைவரை தமிழினம் இழந்துவிட்டமை துரதிஷ்டவசமானது என்றும் பேசுவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு எவ்வாறு மனசாட்சி இடமளித்தது'

- என்று கேள்வியெழுப்பும் கடிதம் ஒன்று அண்மையில் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்த தின ஞாபகார்த்த நிகழ்வில் பேசிய பின்னர் முதலமைச்சர் அவர்களிடம் ஊடகவியலாளர் ந. பரமேஸ்வரனால் கையளிக்கப்பட்டது.

புளொட் தலைவர் சித்தார்த்தன் ஊடாக இந்தக் கடிதத்தை வாங்கிப்படித்த முதலமைச்சரின் முகம் கறுத்துப்போனது. அந்தக் கேள்விக்குத் தான் பதிலளிக்கப் போவதில்லை என்று மறுத்துவிட்டார்.

அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்த தின ஞாபகார்த்த நிகழ்வினையொட்டி நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.


தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை அவர்களின் பிழை சரிகளுக்கு அப்பால் நினைவு கூருவது என்பது வரலாற்று ரீதியிலான தேவை என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அவ்வாறான ஓர் அரசியல் பண்பினை தமிழர் அரசியல் இன்று பெற்றுவருகிறது என்றால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

இது ஒரு புறமிருக்க‚ இந்த ஞாபகார்த்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள இன்னொரு விடயம்தான் இங்கு விரிவாக பேசப்படவேண்டியது.

அதாவது, காலஞ்சென்ற தமிழ் அரசியல் தலைவர்களின் நினைவுப்பகிர்வை தற்போதைய அரசியல்வாதிகள் எப்படியான ஒரு வியூகத்துக்குள் உட்படுத்துகிறார்கள் என்பதுதான் இங்கு மிகுந்த விமர்சனத்துக்கும் விசனத்துக்கும் உள்ளாகும் விடயமாக கருதவேண்டியுள்ளது.

இம்முறை அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்ததினத்தை நினைவு கூரும் நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேச்சுப்போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு ஞாபகார்த்த நிகழ்வில் பரிசில் வழங்கப்பட்டது. அன்றைய நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் தமது பேச்சினை மீண்டும் மேடையில் பேசிக் காட்டினார்கள். இம்முறை வெற்றிபெற்ற மாணவி அப்படியே அந்தக்காலத்தில மங்கையற்கரசி பேசியதுபோலவே அச்சொட்டாகப் பேசினார் என்று நிகழ்வுக்குப் போனவர் ஒருவர் கூறிச் சிலாகித்தார்.

அரசியல் தலைவரின் ஞாபகார்த்த நிகழ்வினையொட்டி பேச்சுப்போட்டி நடத்துவது என்பது அமிர்தலிங்கம் காலத்து நடைமுறை. ஆனால், இன்றைக்கும் நாங்கள் அவ்வாறான ஒரு வழிமுறையைத்தான் பின்பற்றவேண்டுமா? இப்படியான பேச்சுப்போட்டி மூலமான நினைவுகூரல்களின் ஊடாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சாதித்திருப்பது என்ன?

அமிர்தலிங்கம் அவர்களது பெயரால் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை முழுமையாக பொறுப்பெடுத்து அதன் அபிவிருத்தியை நடத்திக் காண்பிக்க முடியாதா?

அமிர்தலிங்கம் அவர்களின் பெயரால் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளை ஒன்று சேர்த்து 'மாதிரி தொழிற்பேட்டை' ஒன்றை நடத்த முடியாதா?

அமிர்தலிங்கத்தின் பெயரால் போரினால் அநாதையான குழந்தைகள் வாழும் ஓர் இல்லத்தை முழுமையாகப் பொறுப்பெடுத்து நடத்த முடியாதா?

அமிர்தலிங்கத்தின் பெயரால் மாவீரர் குடும்பங்களுக்கு நலத்திட்டம் ஒன்றை உருவாக்க முடியாதா?

அமிர்தலிங்கத்தின் பெயரால் முதலீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதிலிருந்து பெறும்பயனை சுழற்சி முறையில் விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கு உதவமுடியாதா?

இதனைச் சிந்திப்பதற்கு இந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களுக்கு ஏன் முடியாமல்போனது?

நீலன் திருச்செல்வம் ஞாபகார்த்த இன்ஸிரியூட் என்று கொழும்பிலேயே செயற்பாட்டு மையம் ஒன்று இயங்கிவருகின்றபோது யாழ்ப்பாணத்தில் மாத்திரம் ஏன் நாங்கள் தலைவர்களின் நினைவு கூரல்களை பேச்சுப்போட்டிகளுக்குள் வைத்திருக்க விரும்புகிறோம்?

அமி;ர்தலிங்கம் அவர்களது நினைவு நிகழ்வை மாத்திரம் இங்கு குறிப்பிடவில்லை. எல்லா தமிழ் அரசியல் - முன்னாள் போராளிக் குழுக்களின் உறுப்பினர்களும் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் மீதான பொதுவிமர்சனம்தான் இது.

பேச்சுப்போட்டி நடத்தி நான்கு மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதும், தலைவர்களின் படங்களுக்கும் உருவச்சிலைகளுக்கும் மாலை அணிவிப்பதும்தான் இந்தத் தலைவர்களிற்கு தாங்கள் செலுத்தும் உயரிய மரியாதை என்று இவர்கள் எண்ணுகிறார்களா? அல்லது அப்படியான ஓர் அரசியலைத்தான் இந்தத் தலைவர்கள் தங்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றதாக இவர்கள் நினைவுகூருகிறார்களா?

போர் முடிவுற்றபின்னர் வடக்கில் ஏட்டிக்குப்போட்டியாக நடைபெறும் சகல அரசியல் நினைவு நிகழ்வுகளையும் அவதானித்தால் ஒன்றை மட்டும் தெளிவாகக் காணலாம்.

அதாவது, முன்னாள் தலைவர்களது பெயரிலும் அவர்களது சர்ச்சைகள் மிகுந்த போராட்ட பாதையிலும் இப்போதைய தலைவர்கள் குளிர்காய்வதற்குத்தான் அதிகம் விரும்புகிறார்கள். அந்தப் பாதையில் பயணம் செய்வதாகக் கூறிக்கொண்டு அதன் நிழலில் எவ்வாறு அரசியல் செய்வது என்ற சூ
ட்சுமத்தை கண்டறிவதிலேயே சிரத்தையுடன் செயற்படுகிறார்கள். அந்தத் தலைவர்களின் போராட்ட நிழலில் தங்களது அரசியலை எவ்வளவு செறிவோடு முதலீடு செய்யலாம் என்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள்.

தலைவர்களை துதிபாடும் இந்த நினைவுகூரல்கள் அவர்கள் மீதான அபிமானத்தின் நேர்த்திகளை பறைசாற்றும் உணர்வு வெளிப்பாடாக அமையுமே தவிர, அவர்களின் போராட்ட வாழ்க்கை முறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பயனுள்ள படிமுறையாக அமையாது. இப்படியான வழிபாட்டு முறைகள் இந்த தலைமுறையுடன் அவர்களது செயற்றின்களை குழிதோண்டி புதைத்துவிடும். அநேகமாக அடுத்த தலைமுறையுடன் அவர்களின் பெயரையும் மறக்க செய்துவிடும்.

அரசியல் தலைவர்களை நினைவு கூருவது என்பது அமைச்சுப் பணத்தில் கூடிக்கோலாகலம் செய்யும் 'வழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும்' ரக நிகழ்வாக அமையாது அவற்றை அர்த்தபூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பார்த்தால், முன்னாள் போர் வீரர்கள், மறைந்த அரசியல் தலைவர்கள் ஆகியோரை விசாலமான மண்டபங்களிலும் பொதுவெளிகளிலும் அல்லது அவர்களின் தூபிகளுக்கு முன்னால் சென்றும் ஒரு சில மணிநேரம் நினைவுகூர்ந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அது ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வு அவ்வளவே.

ஆனால், தமிழினம் அவ்வாறான 'சல்யூட்' அடித்துவிட்டு செல்லும் நினைவுகூரல் முறைக்கு இன்னமும் பழக்கப்பட்டுவிடவுமில்லை. பருவமடையவுமில்லை. வரலாற்றின் ஒவ்வொரு சம்பவங்களையும் தலைமுறைகளின் வழியாக எடுத்துச் செல்லவேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் வாழ்த்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், இந்த நினைவு கூரல்களுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய சக்தி ஒன்றுக்கு எதிராகவும் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறது. இத்தனை ஆயுதக்குழுக்கள் தங்கள் தலைவர்களையும் போராளிகளையும் நினைவுகூரும்போது பொங்காத சமூக பிரக்ஞை இப்போது எங்கிருந்து வந்தது என்று கேட்கலாம்.

முதலமைச்சர் என்பவர் வடக்கு மக்களின் ஏகபோக ஆணையுடன் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர். தமிழினத்தின் பெரும்பான்மை ஆணையுடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெருந்தலைர்களில் ஒருவர். ஆகவே, வரலாற்றின் முக்கிய திருப்பங்களுக்கான சிக்னல்களை அவரது விரலிடுக்குகளில் தேடுவதுதான் பொருத்தமாக இருக்கும். அவரது வழியில் ஏனையோர் பயணப்படுவதற்கும் அது பெருந்துணையாக இருக்கும்.

(30-08-2016)

Sunday, December 20, 2015

ஒரு ஆளுமையின் அஸ்தமனம்!


காலக்காற்று அன்று மட்டும் ஏனோ
கருகிய நாற்றத்துடன் திடீரென மூச்சிரைத்தது.

நீண்ட அமைதிகளுக்குள் நெட்டி முறித்துக்கிடந்த 
வெறுமையான மயான கிடங்குகள்
திடீரென்று இரைகேட்டு பசியோடு அலறத்தொடங்கின

முறிந்து விழுந்த பேனாவின் பாரத்தால்
தாங்கியிருந்த கடைசி ஒற்றையும் 
குறை மையினால் எழுதிய
கடைசி வரிகளை சுமந்துகொண்டு
படைத்தவளின் பின்னால் பறந்து சென்றது

ஊழிக்கூத்தின் கடைசி காட்சியிலிருந்து
வேடம் உரிந்த பாவி பாத்திரங்கள்
காலனின் கழுமரத்தை நோக்கிய
நீண்ட வரிசையில் இணைந்துகொண்டனர்

வரிசையின் கடைசியில் குட்டையாக 
ஒரு தாய் - 

அவர்தான் அருண் விஜயராணி.

Monday, July 13, 2015

சிலுவையில் சிதறிய இரத்தம்!


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் எதிர்வரும் தேர்தலில் குதிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை களமிறக்கும் யோசனைகளை தீவிராமாக ஆராய்ந்து வருவதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன.

மகிந்தவின் அரசியல் பிரவேசத்திற்கு அனுமதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் முடிவு தொடர்பாக வெளிப்படையாக அதிருப்தி வெளியிட்டிருந்த சந்திரிகா அம்மையார், தான் அரசியலுக்கு மீண்டும் வருவது தொடர்பாக கோடி காட்டிவிட்டு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் புறப்பட்டுள்ளார். அங்கிருந்து வந்து தனது அரசியல் செல்நெறி குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

சந்திரிகா அம்மையாரின் அரசியல் இருப்பு என்பது காலாவதியாகிட்டபோதும் அது எவ்வாறு புதிய மூலப்பொருளாக மைத்திரியை ஜனாதிபதியாக கொண்டுவரும் உற்பத்தி முறையில் பயன்படுத்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். மகிந்தவை ஆட்சிக்கட்டிலிருந்து கலைப்பதற்கு மைத்திரியுடன் கைகோர்த்துக்கொண்ட அம்மையார் தனது புதிய அவதாரத்தின்போது வெளியிட்ட கருத்துக்கள் எவ்வளவு சுவாரஸியமானவை என்பதை அவரது பேச்சுக்களை கேட்டவர்கள் அவதானித்திருப்பர். அதாவது, புலிகளுக்கு எதிரான போரை வென்றுவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் மகிந்தவின் வெற்றி முழக்கத்தை நிராகரித்த சந்திரிகா அம்மையார், தனது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 75 சதவீதமான நிலப்பரப்புக்கள் சிறிலங்கா படையினரால் வெற்றிகொள்ளப்பட்டதாகவும் மீதியைத்தான் மகிந்தவின் படைகள் வென்றதாகவும் கூறியிருந்தார்.

சந்திரிகா அம்மையார் கூறிய அவரது படைகள் மேற்கொண்ட போரின்;போது தமிழ்மக்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நிகழ்வொன்றின் 20 ஆண்டு நிறைவு தினம் கடந்த ஜூலை 9 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டது.

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலய படுகொலை!

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி..

தமிழர் பிரதேசங்களை விழுங்கும் “முன்னேறிப்பாய்தல்” என்ற புதிய படை நடவடிக்கையுடன் சிறிலங்கா படைகள் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பிரதேசம் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அனுராதபுர தளத்திலிருந்து பலாலியில் வந்திறங்கிய மேலதிக வான்படை கலங்கள் என்று பெரும்படை பலத்துடன் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ரொஹான் தளுவத்தையின் துல்லியமான இராணுவத்திட்டத்துடன் வலிகாமத்தை நோக்கி படையணிகள் ஆக்ரோஷமாக நகர்ந்தன

வலிகாமம் பிரதேச மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் செல்லுமிடம் தெரியாது வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது கட்டடங்களில் வந்து தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு, அராலி, வட்டுக்கோட்டை பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் காரைநகர் வீதியூடாக நவாலியில் வந்து தஞ்சமடைந்த இடம்தான் சென் பீற்றர்ஸ் தேவாலயம்.

அடுத்த நாள் 9 ஆம் திகதி…

கூட்டு குடும்பங்களாக நெருக்கமாக வாழும் அந்த கிராமமே மிகுந்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த பெயர் தெரியாத தமது சொந்தங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஒட்டுமொத்த நவாலி மக்களும் இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். தேவாலயத்தின் பின்புற வளவினுள் பெரிய பாத்திரங்கள் வைத்து சமையல் நடந்துகொண்டிருந்தது. மூலைக்காணியில், கழிவிடங்களுக்கான குழிகளை வெட்டுவதில் ஆண்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தனர். தேவாலயத்தை கடந்து ஆனைக்கோட்டை நோக்கி செல்லும் காரைநகர் வீதியால் இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு இளைஞர்களும் யுவதிகளும் குளிர்பானங்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

சரியாக மாலை 5 மணி…

அப்பிரதேசத்தை கடந்து சென்றுகொண்டிருந்த “புக்காரா” வானூர்தி ஒன்று திடீரென வழமைக்கு மாறாக தாழப்பறந்தது. தேவாலயத்தினுள்ளும் தேவாலயத்தின் அருகாமையில் நின்றுகொண்டிருந்தவர்கள் எவருமே அந்த புக்காராவில் அப்போது சந்தேகப்படவில்லை. ஏனெனில், அவர்கள் தஞ்சமடைந்திருந்த இடம் தேவாலாயம். அத்துடன், தேவாலயத்தின் அருகிலிருந்த உயரமான மரத்தில் செஞ்சிலுவை கொடி கட்டப்பட்டிருந்தது. எந்த கல்நெஞ்சக்காரனுக்கும் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த தங்களின் மீது கண்மூடித்தனமாக குண்டுவீச மனம் வராது என்ற நம்பிக்கையுடன் அந்த அப்பாவி மக்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாகவிருந்தனர்.

ஆனால், எல்லோரையும் கதி கலங்க வைக்கும் பேரிரைச்சலுடன் வானிலிருந்து எட்டுக்குண்டுகளை தள்ளிவிட்டது அந்த இரக்கமே இல்லாத இரும்பு பறவை.

நவாலி முருகமூர்த்தி கோயிலிலுக்கு செல்லும் வீதிக்கு எதிர்புறமாக – காரைநகர் வீதியிலுள்ள – வீட்டில் ஆரம்பித்து எட்டு குண்டுகளும் வீழ்ந்து வெடித்து அந்த பிரதேசத்தை ஒரே கணத்தில் மயானமாக்கியது அந்த புக்காரா.

நவாலி மரியதாஸ் மாஸ்டரின் வழமையான டியூசன் வகுப்புக்கள் அன்றைய தினம் நடக்கவில்லை. முதல் நாள் படை நடவடிக்கை ஆரம்பித்து வலிகாமத்தை சங்காரம் செய்துகொண்டிருந்த காரணத்தினால் காலை நேர வகுப்புக்கள் மாத்திரமே நடைபெற்றது. மாலை நேர வகுப்புக்களுக்கு சென்ற மாணவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டதால் அப்போதுதான் நானும் வீடு திரும்பியிருந்தேன்.

வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்தபோது, பேரிரைச்சலுடன் வீழ்ந்த குண்டுகளின் சன்னங்கள் தேவாலயத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள எங்களது வீட்டின் கூரையில் சல்லிக்கல்லுகள் போல வந்து வீழ்ந்தன. விழுந்து படுத்துவிட்டு எழுந்து பார்த்தபோது  நவாலி பிரதேசத்துக்கு மேலாக புகைமண்டலம் கிளம்பிக்கொண்டிருந்தது. சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சென் பீற்றர்ஸ் தேவாலாயம் நோக்கி பறந்தேன். அங்குதான் குண்டு விழுந்தது என்று அப்போது தெரியாதபோதும் புகைமண்டலம் எழுந்த திசை நோக்கி சைக்கிளில் விரைந்தேன். ஒரே வகுப்பில் படித்த சகபாடிகள் முதல் ஏராளம் பேரை பால்ய வயதில் நவாலி எனக்கு அறிமுகம் செய்திருந்தது. வேகமாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த எனக்கு, தெரிந்த் முகங்கள் எல்லாம் மனக்கண்ணின் முன் வந்து வந்து போனார்கள். “சீ..அவனுக்கு அப்படி நடந்திருக்காது.. அவளும் தப்பியிருப்பாள்” என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு சைக்களை வேகமாக மிதித்தேன்.

மாகாண கல்வித்துறை அதிகாரி திருமதி இருதயநாதர் வீட்டுக்கு அப்பால், என்னால் போகமுடியவில்லை. ஏனெனில், சென்பீற்றர்ஸ் தேவாலயப்பக்கமிருந்து “ஓ..” வென்று குழறிக்கொண்டு அலையென வந்த சனத்திரள் என்னை அப்படியே அடித்து வீழ்த்திவிடும் போலிருந்தது. கால்களில் செருப்பில்லாமல் பிள்ளைகளை இடுப்பில் சுமந்துகொண்டு தாய்மாரும் கால்களில் ஒட்டிய மண்ணுடனும் மேற்சட்டை இல்லாமல் ஆண்களும் என்ன நடக்குதென்று எதுவும் தெரியாமல் சிறுவர் சிறுமியர்கள் குழறியழுது கொண்டு தெரிந்தவர்களின் பின்னாலும் நூற்றுக்கணக்கான மக்கள் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அதில் பலரின் முகங்களில் காயமில்லாமல் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அது யாரின் இரத்தமோ தெரியவில்லை. வேகமாக ஓடி வந்த சிலர் அந்த கிறவல் வீதியில் இடறி விழுந்தார்கள்..

நான் சைக்கிளை வேலியோரமாக விட்டு பூட்டிவிட்டு, “எங்க விழுந்தது” என்றேன். “தம்பி உங்கால போகத..கோயிலடியில சனம் சாரி சாரியா செத்துக்கிடக்கு” என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு சனம் ஓடிக்கொண்டிருந்தது. ஓரளவுக்கு சனத்தை விலத்திக்கொண்டு போன நான், தூரத்தில் தேவாலயம் தெரியுமளவுக்கு சென்றுவிட்டேன்.

தேவாலாய பிரதேசத்திலிருந்து மக்கள் எழுப்பிய மரண ஓலமும் அலறலும் அந்த பிரதேசத்தையே அதிர வைத்துக்கொண்டிருந்தது. ஈரக்குலையை நடுங்கவைக்கும் பயமும் அந்த பகுதி முழுதும் குப்பென அடித்த கந்தக வாடையும் என்னை மேற்கொண்டு செல்லவிடவில்லை. வந்த திசையை நோக்கி திரும்பி ஓடினேன். செருப்பு அறுந்து விட்டதைக்கூட கவனிக்கவில்லை. நின்று எடுப்பதற்கு மூளை பணித்தாலும் கால்கள் நிற்பதாக இல்லை. விட்ட இடத்தில் சைக்கிள் நின்றது. எடுத்துக்கொண்டு விடை தெரியாத பல வினாக்களோடு பதபதைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டில் சைக்கிளை விட்டுவிட்டு, மடத்தடி வீதிக்கு போனேன். சனம் சாரி சாரியாக குழறிக்கொண்டு தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. குண்டு விழுந்தவுடன் தங்களை காப்பாற்றுவதற்கு அங்கிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், தங்கள் பிள்ளைகளை சொந்தங்களை தவறவிட்டுவிட்டு வழி நெடுகிலும் நின்று அழுதுகொண்டு நின்றார்கள். தாய்மார்கள், வீதியோரத்தில் விழுந்துகிடந்து தரையில் அடித்து அடித்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். யார் இறந்தார்கள், யார் தப்பினார்கள், யாருக்கு காயம் எதுவுமே எவருக்கும் தெரியாது.

இருள் மெல்ல மெல்ல கவிழத்தொடங்கியது. ஆனாலும், தேவாலாய பிரதேசத்திலிருந்து அழுகுரலும் ஒப்பாரியும் ஒய்ந்தபாடில்லை. இரவு பதினொரு மணியளவில்தான் சத்தங்கள் அடங்க தொடங்கியது. சுற்றுவட்டாரமே மயான அமைதியில் மௌனமாக கிடந்தது.

அடுத்தநாள், விடிந்தது. வெளிச்சம் பரவ தொடங்கியவுடனேயே தேவாலயத்தை நோக்கி விரைந்தேன்.

தேவாலயத்தின் கூரையில் ஒரு ஓடுகூட கிடையாது. தேவாலயத்தின் மீது குண்டு விழாதபோதும், அருகில் விழுந்துவெடித்த அதிர்வில் அத்தனை ஓடுகளும் வீழ்ந்துநொருங்கி, தேவாலயத்தின் தீராந்திகள் மாத்திரம் அந்த மண்டபத்தை எலும்புக்கூடுகள் போல தாங்கிக்கொண்டிருந்தன. கதவுகள் எல்லாம் பிளந்து விழுந்து கிடந்தன. 

நாவூறு படாமல் பிஞ்சுக்கன்னத்தில் கறுத்தப்பொட்டு வைத்த பச்சிளம் குழந்தையின் தலை ஒன்று தேவாலயத்தின் முன்பாகவிருந்த பூத்தொட்டியில் கிடந்தது.  

தேவாலயத்தின் முன் பரந்த நிழலைக் கொடுத்துக்கொண்டிருந்த வாகை மரத்தின் கிளையொன்றின் மீது சடலம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

தேவாலய சுவர்கள், மதில்கள், மரங்கள் எல்லாம் வெடித்துச்சிதறிய குண்டின் சன்னங்கள் சல்லடை போட்டுக்கிடந்தன. அவற்றின் மீது இரத்தம் தெறித்து சதைகள் ஒட்டிப்போய் கசாப்புக் கடைக்குள் நுழைந்தது போல ஒரு நாற்றம் தலையை சுற்றியது. 


எனது வகுப்பு நண்பர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்பதற்கு அங்கு யாருமே இல்லையா என்று கண்களை அலையவிட்டுக் கொண்டிருந்தபோது தெரிந்த அண்ணா ஒருவர் வந்தார். பெயர்களை சொல்லி கேட்டேன். முதல்நாள் ராத்திரி அங்கிருந்து இடம்பெயர்ந்து போனபோது தான் கண்ட சில பெயர்கள் ஒவ்வொன்னறாக சொன்னபோது, எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ஆனால், எனது வகுப்பு தோழன் ஒருவனின் தங்கை குண்டடிபட்ட மரம் விழுந்து மரத்துக்கு அடியில் சிக்குண்டு இறந்துவிட்டாள் என்று கேட்ட செய்தி மின்சாரம் தாக்கியது போலிருந்தது.

குண்டு விழுகின்றபோது சக்கர நாற்காலியிலிருந்து பைபிள் வாசித்துக்கொண்டிருந்த நடக்கமுடியாத வயோதிபர் ஒருவர் குண்டடிபட்டு அந்த பைபிளின் மீதே சடலமாக விழுந்தார் என்றும் அவரது சடலத்தை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் விழுந்த குண்டின் சன்னங்கள் பாய்ந்து அந்த இடத்திலேயே சடலங்களாக சரிந்தார்கள் என்றும் எல்லோரையும் ட்ரக்டர்களில் ஏற்றி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியதாகவும் அவர் சொன்னார்.

அந்த இடத்தில் நிற்க நிற்க எனக்கு தலைசுற்ற தொடங்கியது. இரத்தவாடை வயிற்றை குமட்டியது. சைக்கிளையும் எடுத்துக்கொண்டு, நவாலி சந்தியால், முருகமூர்த்தி கோயிலுக்கு போகும் வீதிக்கு அருகாமையில் சென்றபோது, தலையில் இடிவிழுந்தது போல இருந்தது. இரண்டு வீடுகள் புல்டோசர் போட்டு இடித்தது போல தரைமட்டமாக கிடந்தன. அதிலிருந்தவர்கள் எங்கேயென்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.

அங்கிருந்த ஒரு இளைஞன் அணியும் உருத்தராச்சம் மாலை மாத்திரம் மரம் ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்ததை யாரோ கண்டெடுத்திருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் திரண்ட மக்கள், இடிபாடுகளுக்குள் நடந்து சென்று கற்களையும் மெதுவாக விலத்தி தேடத்தொடங்கினார்கள்.

இரண்டு நாட்களுக்கு பின்னர், அந்த இடிபாடுகளுக்குள்ளிருந்து கணவன், மனைவி மற்றும் ஆறுமாத குழந்தையின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வீட்டுக்கு முன்பாக, எனது வகுப்புத்தோழி சுஜீவா, குண்டு விழுந்தபோது வீழ்ந்து படுத்தாள் என்றும் சில செக்கன்களில் நிமிர்ந்து பார்த்தபோது பின்னாலிருந்து வந்து பிடரியை தாக்கிய குண்டுத்துகள் ஒன்று அவளின் மண்டையை பிளந்துவிட்டது என்றும் சொன்னார்கள். இரட்டை பின்னலுடன் குனிந்த தலைநிமிராமல் டியூஷனுக்கு வந்து, ஏழாம் வாங்கில் இருக்கும் அவளின் முகமும் ஒருமுறை வகுப்பில் தந்த கணக்கை செய்து முடித்தபின் கொப்பி மாத்தி திருத்துமாறு ஆசிரியிர் சொன்னவுடன், எனது கொப்பியை திருத்திய அவளின் கையெழுத்தை பார்த்துவிட்டு நான் எட்டிப்பார்த்து சிரித்தபோது வெட்கத்துடன் சிரித்துவிட்டு திரும்பிய அவள் முகமும் என் கண்களில் கண்ணீரை பொலபொலவென தள்ளியது.

தேவாலாயத்திலும் அந்த சுற்றுவட்டாரத்திலும் இப்படி சடலங்களாக விழுந்த எத்தனையோ பேரினது செய்திகள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் வரத்தொடங்கின.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பொங்கி எழுந்தது. சர்வதேசம் முழுக்க செய்தி பரவத்தொடங்கியது. செய்தியை பரப்பிய செஞ்சிலுவை சங்கத்தின் மீது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சீறிவிழுந்தார். தமது படைகள் விடுதலைப்புலிகளைத்தான் இலக்கு வைத்து தாக்கியதாகவும் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தொடர்ந்து பறையடித்து படுகொலைகளை மறுத்தார்.

ஆனால், செஞ்சிலுவை சங்கத்தின் முழுமையான அறிக்கைகள் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றால் சீற்றமடைந்த போப்பாண்டவர், தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதலும் விளக்கம் தருமாறு சந்திரிகா அரசிடன் கோரினார்.

அப்போதும்கூட, அப்பாவி பொதுமக்களின் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று சம்பவத்தை அடியோடு மறுத்த சந்திரிகா அம்மையார் “படையினரின் தாக்குதலினால் தேவாலயம் சேதமடைந்திருந்தால், உடைந்த ஓடுகளை எண்ணி சொல்லுங்கள். அதற்கு நட்டஈடு செலுத்துவதில் தங்களுக்கு சிக்கல் இல்லை” என்றார்.

இந்தப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை வெளி ஊடகங்கள் அனைத்திலும் தவறான தகவல்களே வெளிவந்துகொண்டிருப்பது வருந்தத்தக்க விடயம். சம்;பவத்தின் பின்னர் வெளியான கத்தோலிக்க வாரப்பத்திரிகையான “பாதுகாவலன்” கொல்லப்பட்ட 210 பேரின் விவரங்களை வெளியிட்டிருந்தது. அத்துடன், வருடாவருடம் சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெறும் படுகொலை நினைவு தினத்திலும் 210 பேருக்கான பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த படுகொலைக்கு காரணமான புக்காரா விமானத்தை ஓட்டிய விமானி, பின்னாளில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார் என்ற தகவலொன்று வெளியானபோதும் அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

இதயத்தை பிழியும் - இரத்தவாடை வீசும் - இந்த சம்பவத்தை இன்று குறிப்பிடுவதன் நோக்கம் இந்த சம்பவம் இடம்பெற்றதன் இருபதாம் ஆண்டு நிறைவை நினைவுபடுத்துவது மட்டுமல்ல.

இவ்வாறு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கு காரணமானவர்கள் பலர் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னணியில் ஒழிந்து விடுகிறார்கள். மக்களாலும் மறக்கப்பட்டு விடுகிறார்கள். யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்காவிற்கு வந்து பிரபாகரன் பற்றி பேசி கைதட்டல் வாங்கி செல்கிறார்கள். தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மறுசீரமைத்துக்கொண்டு, தாங்கள் படுகொலை செய்த அதே இனத்திற்கு முன்னால் வந்து நின்றுகொண்டு - கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் - எமது மக்களுக்கு தீர்வு பெற்றுத்தருவது பற்றியெல்லாம் பேசிச்செல்கிறார்கள்.

அதை ஜீரணித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் அப்படிப்பட்ட தலைவர்களை மன்னித்து கைகுலுக்கும் எமது அரசியல் தலைவர்களை நம்பித்தான் தமக்கொரு விடிவை பெற்றுக்கொள்ள வேண்டிய தலைவிதியுடனும் தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.


இன்று (14.07.2015) "தமிழ் மிரர்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரையின் விரிவான பதிவு இதுவாகும். 

Wednesday, July 1, 2015

பற்றை வெட்டித்திரிந்த கழகம் பல விருதுகளை அள்ளிய கதை


இலங்கை கல்வித்திட்டத்தின் பிரகாரம் பரீட்சைகள் பலவிதம். அவற்றில் கல்வி பொதுத்தராதர உயர் கல்வி பரீட்சை என்பது எம்மை சகல தளைகளிலுமிருந்து விடுதலை செய்வது போன்ற உணர்வை தருகின்ற சோதனை. அதிலும் அந்த பரீட்சை முடிவடைந்தவுடன் ஏற்படுகின்ற உணர்வு இருக்கிறதே, பரீட்சையை எப்படி செய்தோமோ இல்லையோ, அதையெல்லாம் மறந்து ஏகாந்த பெருவெளியில் பறப்பது போன்ற மிதப்பை தருவது. ‘என்னடா செய்யலாம்’ என்று நினைத்து நினைத்து என்னென்னவோ எல்லாம் செய்யத்தோன்றும் காலப்பகுதி அது. எல்லாம் அந்த தேர்வு முடிவுகள் வருமட்டும்தான் என்ற யதார்த்தநிலை எல்லோருக்கும் தெரிவதால், இயலுமானவரை அந்த குறுகிய சுதந்திரத்தை அப்படியே அனுபவித்துவிடவேண்டும் என்ற வெறி எல்லோரையும் பற்றிக்கொள்ளும்.

அப்போது யாழ் இந்துக்கல்லூரிக்கு பின் ஒழுங்கையிலிருந்த சந்திரன் அண்ணாவின் மினி சினிமா என்பது பலருக்கு சுதந்திரக்குடிசையாக விளங்கியபோதும், பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே போய் படம் பார்த்துவந்த பொழுதுபோக்கிடம் என்பதால், எமக்கு அது புதிதாக எந்த புரட்சிகரமான சுதந்திர உணர்வையும் தரவில்லை.

அப்போதுதான் நாங்கள் - கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் - தற்செயலாக இடறிவிழுந்த இடம் யாழ் நகர் மைய றோட்டரக்ட் கழகம். எமக்கு அப்போது றோட்டரக்ட் கழகத்துக்கும் றோட்டறிக்கழகத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாது. ஒருநாள் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்திலுள்ள மண்டபத்தில் கூட்டம். 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் “றோட்டரக்ட்ஸ்” (Rotaracts) என்று அழைக்கப்படுவர். அதன் பின்னர், அவர்கள் கழகத்தில் தொடர்ந்து அங்கம் வகித்தால் “றொட்டரியன்ஸ்” (Rotarians)எனப்படுவர் என்ற அரும்பொருள் விளக்கத்துடன் இந்த கழக செயற்பாட்டில் காலடி எடுத்துவைத்தோம்.

சயன்ஸ் ஹோலில் ஏ.எல் வகுப்புக்களுக்கு டாட்டா காட்டிய கையோடு நாங்கள் அழகிகளாக வளர்த்துவிட்ட எம் வகுப்பு தோழிகள் எல்லோரும் பரீட்சை முடிந்தவுடன் வீட்டுக்குள் போய் ஒழிந்துகொள்ள, “எங்கடா இவளவய காணலாம்” என்று வறட்சியாக திரிந்த எங்களுக்கு இந்த றோட்டரக்ட் கழகம் சின்ன வடிகாலாக அமைந்தது என்று இப்போது கூறுவதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது என்று நம்புகிறேன். இருந்தாலும் எமக்கு சேவை நோக்கமும் தொண்டர் பணியும்தான் மூச்சிலும் பேச்சிலும் நிறைந்து கிடந்தது. (கொஞ்சம் நெளிவு எடுபட்டிருக்கும் எண்டு நினைக்கிறன்)

அப்போது தளபதி அனுராஜ் தலைமையில் இந்த றோட்டரக்ட் கழக செயற்பாடுகள் ஆரம்பித்தன. அவனும் இந்த கூத்துக்கு புதுசுதான். ஆனால், அதை வெளிக்காட்டமாட்டான். ஏதோ, தனக்கும் இந்த றோட்டரக்ட் கழகத்துக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல பக்தி பரவசத்துடன் கூட்டங்களை நடத்துவான். புறொஜக்ட்ஸ் எண்ட பெயரில் ஒவ்வொரு இடமாக தொண்டர் சேவை செய்வதற்கு எங்களை மேய்த்துக்கொண்டு போவான். அதில் எனக்கு செயலாளர் பதவி வேறு. அது வேறொன்றும் இல்லை. அப்போது, ஒவ்வொரு கூட்டத்துக்கும் மினிட்ஸ் எடுத்து எழுதவேணும். ஒரு பயலும் முன்வரமாட்டன் எண்டவுடன், அடியேன் அப்போது உதயனில் வேலை செய்த காரணத்தால், “இவன் எழுதுவான்” - என்று வழங்கப்பட்ட வரம்தான் அது.

கழகம் அமைத்துவிட்டோம் என்பதற்காகவே புறொஜெக்ட் தேடி திரிந்து பிடித்து அவற்றை எப்படியாவது முடித்து அறிக்கை எல்லாம் தயாரிப்பதுதான் அப்போது எங்களது வேலை. சனசமூக நிலையங்கள் மற்றும் பாடசாலைகளிடம் போய் புறொஜெக்ட் கேட்டால், பேசிக்கொண்டிருக்கும்போதே “உந்தா கிடக்கு வெறும் வளவு. கனநாளா பத்தையா கிடக்கு. அதை வெட்டி கிட்டி துப்பரவாக்கினா ஏதாவது செய்யலாம் எண்டுறத பற்றி யோசிக்கலாம்” – எண்டு பக்கத்து வளவுகளை காட்டுவார்கள். சொல்லி முடிப்பதற்குள் அனுராஜின் முகத்தில் தமிழீழமே கிடைத்தது போல சந்தோஷம் பிறக்கும்.

பிறகென்ன, கொடி குடை ஆலவட்டங்கள் தரித்த மன்னர் ஊர்வலம் போல, மண்வெட்டி, கடப்பாறைகள் சகிதம் சைக்கிளில் கட்டிக்கொண்டு எங்களது படையணி நகரும். குறித்த இடத்தில் போய் இறங்கி நின்று சங்காரம் செய்து சரித்திரம் படைக்கும். அதில் ஓரிருவர் “பற்றை கடிக்குது. கல்லா கிடக்கு அலவாங்கு போடமுடியாம கிடக்கு” என்று பின்னடிக்க முயற்சித்தாலும் திரிவேணி, வானதி தலைமையில் பெண்கள் அணி நாங்கள் வேலை செய்வதை பார்க்குது என்றால், வெளியில் தள்ளும் நாக்கை உள்ளே இழுத்துப்போட்டு தம் பிடித்து கொத்துவார்கள். தாங்கள் எவ்வளவு பெரிய புஜ பல பராக்கிரமபாகுகள் என்பதை  கடைக்கண்ணால் பார்த்து பார்த்து மண்ணை கொத்திக்காட்டுவார்கள். அரைமணி நேரம் வேலை செய்துவிட்டு “திருவேணி  அக்கா தேத்தண்ணி போடுங்கோவன்” எண்ட சாக்கில் அவர்களுடன் போய்நின்று கடலைபோடுவதில் மப்பி மன்னாதி மன்னன்.

இந்த கழகத்தின் ஏற்பாட்டில், யாழ் வேம்படியில் நடத்திய “கானரசாவின் காதல் கீதங்கள்” நாங்கள் அப்போது படைத்த மிகப்பெரிய இசைச்சரித்திரம். வேம்படி மகளிர் கல்லூரியில் மண்டம் எடுத்து நடத்திய இந்த ரிக்கெட் ஷோ. பெரிய பட்ஜட். நான் எல்லாம் அப்போதுதான் முதல் முதலாக, சிற்றி போய்ஸ் தையல் கடையில் ப்ளீட்ஸ் வைத்த ஜீன்ஸ் தைத்து போட்ட சாதனை படைத்தநாள். அன்றைய காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் சிற்றி போய்ஸ் தையல்கடையில் தைக்கும் ஜீன்ஸ் மற்றும் காற்சட்டைகள் மிகவும் பிரபலம். அங்கு தைத்த ஜீன்ஸ் காற்சட்டை போட்டு போனாலே, பள்ளிக்கூட இன்டர்வேலில் அதை பார்ப்பதற்கு என்று அணிந்தவனை சூழ ஒரு கூட்டம் நிற்கும். இந்த பிரபலத்தன்மை காரணமாக, அங்கு தைப்பதற்கு விலையும் கூட, தைப்பதற்கு என ஓடர் கொடுக்கவேண்டிய காலப்பகுதியும் அதிகம். நமக்கெல்லாம் அது கொடுப்பினை இல்லாத காலம். மானிப்பாய்  அந்தோனியார் கோவிலுக்கு முன்னாலிருந்த “ஜெகபதி டெய்லர்ஸ்”தான் நமக்கு அளவெடுத்து அடிக்கும் 'All in All அழகுராஜா'

சரி விஷயத்துக்கு வருவோம்.

இப்படியாக ஆல் போல் வளர்ந்து அறுகுபோல் வேரூன்றி தொடர்ச்சியாக பயணித்த யாழ் றோட்டரக்ட் பின்னர் றோட்டறிக்கழகத்துக்குள் காலடி எடுத்துவைத்தபோதும், அதில் முன்னர் பயணித்த முக்கால்வாசிப்பேர் பரீட்சை பெறுபேறுகளுடனும் கொழும்பு – வெளிநாடு என்று சென்றுவிட -

கழகத்தை கொண்டு இழுத்த ஒரே தலைமகன் தளபதி அனுராஜ். போனவர்கள் போக புதிதாக பலரை சேர்த்து றோட்டரக்ட் கழகத்தையும் அதேவேளை மூத்த அங்கத்தவர்களின் ஆலோசகனைகளுடனும் ஆசீர்வாதத்துடனும் றோட்டறிக்கழகத்தையும் கொண்டு நடத்தி –

இன்று ROTARY DISTRICT 3220 AWARDING NIGHT விருதுவழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணம் றோட்டறிக்கழகம் சிறந்த மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் விருது உட்பட 14 விருதுகளை அள்ளிக்குவித்திருக்கிறது. நண்பர்களும் முன்னாள் அங்கத்தவர்களும் (முக்கியமாக முன்னாள் செயலாளரும்!) மாவட்ட நலன்விரும்பிகளும் எல்லோரும் பெருமையடையும் தருணம்.

அப்படியானால், இவ்வளவு காலமும் இந்த றோட்டறிக்கழகம் என்னதான் செய்தது என்று புருவம் குவிப்பவர்கள் யாழ்ப்பாணம் றோட்டறிக்கழக முகப்புத்தக பக்கத்தை சொடுக்கினால் தெரியும்.

மக்களுக்கு நம்பிக்கையான இப்படிப்பட்ட அமைப்புக்கள் சமூக மட்டத்தில் பலமான பாலத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டவை. மக்களுக்கு நெருக்கமான அரசியல் தெரிவுகளும்கூட இப்படியான சேவை அமைப்புக்களின் பாதையிலிருந்து தெரிவு செய்யப்படும்போதுதான் ஆரோக்கியம் மிக்கதாக அமையும். மக்களுக்கும் தலைவர்களுக்குமான அந்நியோன்யம் இவ்வாறான ஆழமான புரிதல் உறவுகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படுகின்றபோது, அது பலமானதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல், அதுதான் உண்மையிலேயே மக்கள் பிரதிநிதிகள் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தத்தை கொடுக்கிறது. இந்த வெறுமை நிலை அண்மையில், புங்குடுதீவு சம்பவத்தில் பல தரப்புக்களால் எதிரொலிக்கப்பட்டது.

அந்த வகையில், இளைஞர்களின் தலைமைத்துவ ஆற்றல் மிக்க இவ்வாறான அமைப்புசார் நடவடிக்கைள் நிச்சயம் பரந்த அளவில் வளர்க்கப்படவேண்டியவை. அவர்களின் வளர்ச்சி பாராட்டப்படவேண்டியது. அது கட்டாயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாவிட்டாலும்கூட சிவில் அமைப்புக்களாக செயற்படவல்ல வெளிப்படையான தளமாக செயற்படுவது அவசியமானதும் ஆரோக்கியமானதும் ஆகும்.

யாழ் றோட்டறிக்கழகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆரம்பகால சாதனைகள் காட்சிகள் - 


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற றோட்டரக்ட் கழக மாநாடு ஒன்றுக்கும் எங்களது யாழ். படையணியினர் கட்டளைத்தளபதி அனுராஜ் தலைமையில் விஜயம் செய்திருந்தபோது எடுக்கப்பட்ட படம். ஒருத்தன் நம்மை படம் எடுக்கும்போது சாதுவாக சிரிக்கலாம் என்கிற சராசரி புத்திகூட இல்லாமல் விறைத்த கட்டைகளாக தெரிபவர்கள் எல்லோரும் யாழ். அணியினர். 


மாநாட்டுக்கு வந்த எங்களை மதித்து மாநாடு முடிந்தவுடன் பத்தரமுல்லவில் after party ஒன்றுக்கு அழைத்து சென்ற எம்மை அவிழ்த்துவிட்டவுடன் நாங்கள் எமது சுயரூபத்தை காண்பிக்க முற்பட்ட கணங்கள்.

Thursday, June 4, 2015

மனதில் மகுடிவாசிக்கும் மலையமாருதம்!


கலை உலகின் சாதனை மன்னர்கள் என்றைக்கும் பிரகாசமான நட்சத்திரங்களாக ஒளி வீசிக்கொண்டிருக்கும்போது சில வித்தியாசமான நட்சத்திரங்கள் சாமானிய ரசிகனின் கவனத்தை தனி ஒளிவரிசையில் ஈர்த்துவிடும் தந்திரங்கள் நிறைந்தவையாக காணப்படுவது வழக்கம்.

தமிழ் சினிமாவில் இவ்வாறான தனி சிறப்புடைய நடிகர்கள் பலரை குறிப்பிடலாம். அவர்களில் என்றுமே என் நெஞ்சம் கவர்ந்தவர் நடிகர் ரகுவரன்.

அண்மையில், இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு எனது விருப்பத்துக்குரிய இளையராஜாவின் பாடல்கள் நிறைந்த playlistஐ தட்டிக்கொண்டு போனபோது, விழியில் வழுந்து இதயம் நுழைந்து உயிரை உலுப்பிய பாடல் “தென்றல் என்னை முத்தமிட்டது” கிருஷ்ணசந்தர் - சசிரேகா குரல்களில் ராஜா அசத்திய அற்புதபான பாடல்.

“அன்டனி…மார்க் அன்டனி” என்று கர கர குரலில் மிரட்டிய வில்லன் ரகுவரன், ஒரு காலத்தில் தனது இரண்டாவது படமான “ஒரு ஓடை நதியாகிறது” திரைப்படத்தில் எப்பிடி சிக்கி சின்னாபின்னப்பட்டிருக்கிறார் என்பதை அறிவதற்கு இந்த ஒரு பாடல் போதும். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பாலையாவின் மகள் மனோசித்ராவின் அழகான அபிநயங்கள் பாடல் முழுவதும் பரவிக்கிடக்க, நம்ம ஆள் காதாநாயகியை பிடித்துக்கொண்டு காடு மேடெங்கும் இழுபட்டு படாதபாடு படுகிறார் பாவம். டான்ஸ் என்றால் அண்ணனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அது தெரிந்தும் இந்த பாடலில் அந்த மனுசனை போட்டு படுத்தியிருக்கிறார்கள்.

ரகுவரனைப்பற்றி எழுதுவதற்கு இங்கு எவ்வளவோ விஷயங்கள் கிடந்தாலும் இந்த இடத்தில் தென்றல் வந்து முத்தமிட்ட ராஜாவின் பாடலை பற்றிக்கொண்டு சற்று இசையில் நனைவோம்.

மலையமாருத ராகத்தில் ராஜா இசையமைத்த அற்புதமான பாடல்களில் தரமான பாடல் இதுவென்பேன்.

இந்த பாடல்தான் மலையமாருதத்தில் ராஜா இசையமைத்த முதல் பாடல் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், 1983 இல் இந்த பாடல் வெளிவருவதற்கு முன்னர் 1978 இல் “நெஞ்சில் ஆடும் பூ ஒன்று” என்ற திரைப்படத்தில் வெளியான பாடல்தான் இந்த ராகத்தில் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் என்று அறியப்படுகிறது. இந்த திரைப்படம் வெளிவரவேயில்லை என்பது வேறுகதை. இந்த திரைப்படத்திலிருந்து “ஒரு மூடன் கதை சொன்னான்” என்ற மலேசியா வாசுதேவன் பாடும் சோகப்பாடல் மிகவும் பிரபலமானது. அந்த பாடலில் வரும் “பெண்ணை படைக்காதே பிரம்மனே. பாவம் ஆண்களே” என்ற உலகப்பிரசித்தபெற்ற வரிகள் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூறப்படவேண்டிய கவிஞனின் வீரத்தை பறை சாற்றக்கூடியவை. (ராஜாவின் சார்பில் அடியேன் சொந்த செலவில் சூனியம் வைத்தாயிற்று)

சரி அதைவிடுவம். அந்த படத்திலருந்து எஸ்.பி.பியும் ஜானகியும் பாடிய “கோடி இன்பம் மேனி எங்கும்” என்ற பாடல்தான் இளையராஜா மலையமாருதம் ராகத்தில் இசையமைத்த முதலாவது பாடல்.

அதற்கு பின்னர், மலையமாருத ராகத்தில் ராஜா அள்ளிக்கொடுத்த  -

தீபன் சக்ரவர்த்திக்கு தமிழ்நாடு தேசிய விருதைப்பெற்றுக்கொடுத்த “பூஜைக்காக வாடும் பூவை” -

“மனிதனின் மறுபக்கம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊமை நெஞ்சின் சொந்தம். இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்” -

“தென்றலே என்னை தொடு” படத்திலிருந்து “கண்மணி நீ வர காத்திருந்தேன்” -

போன்றவை எப்படியான கிறக்கம் பிடித்த பாடல்கள் என்று சொல்லத்தேவையில்லை.

அப்பனுக்கு தப்பாமல் இசையமைப்பாளனாக உருவெடுத்த ராஜாவின் மூத்தமகன் கார்த்திக்ராஜாவும் மலையமாருத ராகத்தை அநாயாசமாக தனது “டும் டும் டும்” படத்தில் பயன்படுத்தியிருந்தார். மாதவனும் ஜோதிகாவும் லவ்வாலே நிறைந்திருந்து பாடும் “இரகசியமாய் இரகசிமாய்” பாடல் மலைய மாருத ராகத்தால் க்ளீன் போல்ட் செய்யப்பட்ட பாடல்.

சமீபத்தில் வெளிவந்த பாடல்களில், இன்றைய மெலடி உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இமான் “ரம்மி” திரைப்படத்தில் எயார் டெல் சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களான சந்தோஷ் மற்றும் பூஜா குரல்களால் பூஜித்த “எதுக்காக என்னையும் நீயும் பார்த்த” பக்கா மலையமாருத இசையில் வடிக்கப்பட்ட அருமையான இசைக்கோர்வை.

இந்த ராகத்தில் ஒருவித கிறக்கம் இருக்கம். அதை பயன்படுத்தும் எல்லா இசையமைப்பாளர்களும் அதில் வித்தியாசத்தை காண்பிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சி அவர்களது பாடல்களில் தெளிவாக தெரியும்.

கேட்டு ரசியுங்கள்!


"ஒரு ஓடை நதியாகிறது" திரைப்படத்திலிருந்து "தென்றல் என்னை முத்தமிட்டது"


“மனிதனின் மறுபக்கம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊமை நெஞ்சின் சொந்தம்"


“தென்றலே என்னை தொடு” படத்திலிருந்து “கண்மணி நீ வர காத்திருந்தேன்” 


"காதல் ஓவியம்" படத்திலிருந்து “பூஜைக்காக வாடும் பூவை”

Monday, June 1, 2015

சிறிலங்கா – விடுதலைப்புலிகள் - மரண தண்டனை!




புங்குடுதீவு பள்ளி மாணவி படுகொலை சம்பவம் இடம்பெற்ற கையோடு நாட்டில் தண்டனைகளை கடுமையாக்குவதற்கான கோரிக்கைகள் இலங்கையில் பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக, நாட்டில் மீண்டும் மரணதண்டனை முறையை அமுலுக்குக்கொண்டுவரவேண்டும் என்ற யோசனை மூர்க்கமாக முன்மொழியப்பட்டிருக்கிறது. இதனை அரச தரப்பினரும் தாங்கள் பரிசீலப்பதாக ஆங்காங்கே கோடிகாட்டியுள்ளனர்.

குற்றங்;களை முற்றாக ஒழிக்கமுடியாது என்று கருதினாலும் அவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதற்காக தண்டனைகளை கடுமையாக்குவது என்பது உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுகின்ற வழமையான சட்ட மரபு. அந்தவகையில், பாரதூரமான குற்றங்களாக கருதப்படும் கொலை, பாலியல் வன்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதை சில நாடுகள் இன்னமும் பின்பற்றிவருகின்றன. இவற்றைவிட தேசத்துரேகத்துக்கும் சில நாடுகள் மரணதண்டனை வழங்கிவருவது நடைமுறையில் உள்ளது.

ஆனால், இலங்கையில் மரணதண்டனை அமுலுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு செய்வதென்பது திருடர் கூட்டம் ஒன்று கூடி வங்கி திறப்பதற்கு விளம்பரம் செய்வது போன்றதாகும். அது ஏன் என்பதை இங்கு விரிவாக விளக்கவேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், மரணதண்டனை எனப்படுவது இலங்கை அரசினாலும் விடுதலைப்புலிகளாலும் எவ்வாறு கையாளப்பட்டுவந்தது என்பது குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் இந்த பதிவு ஆராயவிருக்கிறது.

இலங்கையில் காலனித்துவ காலத்திலிருந்து மரணதண்டனைமுறை அமுலில் இருந்தபோதும் 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த தண்டனை நிறைவேற்றம் என்பது முற்றாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால், 1999 இலும் 2004 இல் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அம்பேப்பிட்டியவின் படுகொலைக்கு பின்னரும்  மரணதண்டனைமுறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவதற்கு முன்னாள் அரச அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கள கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார்.

இதன்பிரகாரம், மரணதண்டனை நிறைவேற்றப்படுவதுதான் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, சட்டத்தின் பிரகாரம் மரணதண்டனை தீர்ப்பை நீதிமன்றங்கள் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன. இவ்வாறு மரணதண்டனை வழங்கப்பட்ட சுமார் 450 பேர்வரை தற்போது சிறைகளில் காலவரையறையின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைவிட, சுமார் 500 பேர் தமக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், திடீரென, மரணதண்டனை கைதிகளை தூக்கில் போடுவதற்கு ஆட்கள் இல்லை எனவும் அந்த வேலைக்காக ஆட்களை எடுப்பதாக சிங்கள பத்திரிகையில் அரசு விளம்பரம் ஒன்று வெளியானது. அவ்வளவுதான், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கு தூக்கிவாரிப்போட்டது.

சுமார் 178 பேர் இந்தவேலைக்கு விண்ணப்பத்திருந்தார்கள். அவர்களில் ஒரு கண் பார்வையுள்ளவர் ஒருவர்(…சுத்தம்), ஆட்டோ ஓட்டுனர், சிறைச்சாலை உத்தியோகத்தர், பல்கலைக்கழக பட்டதாரி, பல பெண்கள் என ஏகப்பட்ட சுவாரஸ்யமான கூட்டம். தெரிவுப்பரீட்சையில் பலர் நிரகரிக்கப்பட்டாலும் ஒரு பெண் இறுதித்தேர்வு மட்டம்வரை முன்னேறியிருந்தார். ஆனால், அவர் ஒரு பெண் என்ற காரணத்தினால், மரணதண்டனை விதிக்கப்படும் கணத்தில் உணர்ச்சிவசப்படக்கூடும் என்ற அடிப்படையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இருவர் பணிக்கு தெரிவுசெய்யப்பட்டனர்.

அவ்வளவுடன் இலங்கையின் மரணதண்டனை நோக்கிய பயணம் உள்ளது.

எல்லாவற்றுக்கும் சீனாவிடம் போய்நின்ற மகிந்த, உலகத்திலேயே அதிக மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடான சீனாவிடமிருந்து ஏன் இதைமட்டும் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை.

எது எப்படியோ தற்போது மீண்டும் இந்த மரண தண்டனை சொல்லாடல் இலங்கையின் நீதிவட்டாரங்களில் மீண்டும் அடிபடத்தொடங்கியுள்ளது.

தமிழ்மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு, இலங்கையின் நீதிக்கட்டமைப்புக்களில் கடந்த முப்பது வருட காலத்தில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. தமிழ்மக்களுக்கு எதிராக சிங்களப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல கொடூரமான குற்றங்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. அவ்வாறு, நீதி வழங்கப்படுவதுபோல இலங்கை நீதிக்கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட ஓரிரு முயற்சிகளும் அரசியல் தலையீடுகளால் நீர்த்துப்போனதுதூன் வரலாறு.

இதில் சுவாரஸியமான விடயம் ஒன்றை இங்கு குறிப்பிடவேண்டுமானால், பொதுமக்களுக்கு குண்டு வைத்தார்கள், அதை செய்தார்கள் - இதைச்செய்தார்கள் என்று முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலருக்கு தங்களது நீதிமன்றங்களில் மரண தண்டனை தீர்ப்பெழுதிய சிறிலங்கா அரசு –

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கவில்லை. 200 வருட சிறை தண்டனை வழங்குவதாகத்தான் தீர்ப்பெழுதியது. இந்த வழக்கு குறித்து அப்போது, விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, சிரித்துவிட்டு, “சிறிலங்கா நீதிமன்றம் செய்வதைப்போல, எமது மக்களுக் எதிரான கொடுமைகளை புரிந்த சிறிலங்கா அமைச்சர்களுக்கும் இராணுவ தளபதிகளுக்கும் எதிராக நாங்களும் தமிழீழ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டால், இதைவிட பல சுவாரஸியமான தீர்ப்புக்களை காணலாம்” – என்றார்.

இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகள் கட்டமைத்த நீதிபிரபாலனசபையானது அவர்களது நிழல் அரசில் எவ்வாறான காத்திரத்தை பேணியிருந்தது என்ற விடயத்தை ஆழமாக நோக்குவது முக்கியமாகிறது. இது குறித்து, அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களே ஒரு காலத்தில் வியந்து பாராட்டியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் சட்டம், நீதிநிர்வாகம் என்பது 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறுகிறது.

இந்த நீதிக்கட்டமைப்புக்கள் தோற்றுவாய் பெறும் முன்னரே, தண்டனை முறைமைகளில் கடுமையான போக்கினை கடைப்பிடித்து - ஒரு போராளிக்குழு என்ற போர்வையில் - மக்கள் நிர்வாகத்தை நடத்திவந்த விடுதலைப்புலிகள், 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர், மக்கள் அரசாக தங்களை தகவமைத்துக்கொள்ளும் படிமுறையின் ஒரு அங்கமாக நீதிக்கட்டமைப்புக்களின் உருவாக்கத்தை உள்வாங்கிக்கொள்கிறார்கள்.

இந்த நீதிக்கட்டமைப்பின் வளர்ச்சிநிலைக்கான பாதையில் அதன் வெளிநிலை ஆலோசகராக மிகப்பெரியளவில் பங்களித்தவர்களில் ஒருவர், தற்போது புங்குடுதீவு சம்பவ சிக்கலில் மாட்டியிருக்கும் வி.ரி.தமிழ்மாறன் அவர்கள்.

மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட தமிழீழ நீதி நிர்வாகத்துறையின் கீழ், தமிழீழ குடியரசுக்கான அனைத்து சட்டங்களும், தண்டனைகளும், நிவாரணங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு தமிழீழ சட்டக்கோவை என்ற ஆவணம் வெளியிடப்பட்டது.

இந்த ஆவணத்தில், பொதுமக்களுக்கான குற்றவியல் மற்றும் குடியியல் வழக்குகளுக்கான வசதிகளும் நீதிமன்ற உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன. இவற்றின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் விசாரணைகளும் தீர்ப்புக்களும் வழங்கப்பட்டன.

தற்போது, புங்குடுதீவு சம்பவம் இடம்பெற்றவுடன் “விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா” என்று எல்லோரும் தமக்குள் புறுபுறுத்துக்கொள்வதற்கு காரணம் என்ன என்பதை அறிவதற்கு, தமிழீழ சட்டக்கோவையின் - “தமிழீழ குற்றப்பொறுப்புக்களும் தண்டனைகளும்” என்ற சரத்தின் கீழ் பாலியல் வன்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றுக்கான தீர்ப்புக்களை நோக்குவது பொருத்தமாக இருக்கும்.





நான் கடந்தவாரம் எழுதிய பத்தி ஒன்றில் குறிப்பிட்டதை இங்கு மீளுரைக்க விரும்புகிறேன். அதாவது, சட்டமும் நீதியும் நடுநிலமையானது என்றாலும்கூட அதனை உருவாக்கும் அரசுக்கட்டுமானம் சூழ்ச்சிகள் நிறைந்த வலைகளினால் பின்னப்பட்டுள்ள வரை, அந்த நடுநிலைமை கேள்விக்குரியதாகவே அமையும்.

விடுதலைப்புலிகளின் ஆட்சியில், இது தலைகீழாக இருந்தது. அகவே மக்களுக்கு சட்டத்தின் மீது ஒரு நம்பிக்கையும் அதேநேரம் ஒரு தண்டனைகளின் மீது மாறாத அச்சத்தையும் தக்கவைத்திருந்தது.

குற்றங்களுக்கு அருகிலேயே அபாய சங்காக ஒலித்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தண்டனைகள் தற்போது அடங்கிப்போனதால் ஏற்பட்ட வெற்றிடம், குற்றவாளிகளுக்கு ஏகபோக சுதந்திரத்தை அள்ளி வழங்கியிருக்கிறது.

கட்டுப்பாட்டுடன் இருந்த மக்களுக்கு கிடைத்திருக்கும் தடையில்லா வளங்கள் பல வடிவங்களில் தாயகத்திற்குள் கால்வைத்திருக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவதற்கு பயனாளர்களும் தயாரில்லை. வழங்குனர்களுக்கு தேவையுமில்லை. இந்த ஒரு புள்ளியின் ஊடாக வெளித்தெறிக்கும் குற்றங்களின் விளைவுகளைத்தான் பொதுமக்கள் அனுபவித்துவருகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்சிக்குப்பின்னர், தாயகத்திற்குள் கட்டுடைத்து பாய்ந்திருக்கும் புதிய வடிவத்திலான வாழ்வியல்முறை என்பது தெளிந்த நிலைக்கு வந்தபின்னர் தண்டனை முறைகளை குறைத்துக்கொள்வது பற்றி பரிசீலுனை செய்யலாம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், அங்குள்ள நிலைவரத்தை கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்கு தண்டனைகளை இறுக்கிக்கொள்வது அவசியமாகிறது. இது பாகுபாடின்றி எல்லோருக்கும் பயனாக அமையும் என்பது இந்த பதிவின் நம்பிக்கை.

(இது "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை ஆகும்) 

Wednesday, May 27, 2015

பர்மா: போதிமரத்தடியில் இன்னொரு பலிபீடம்!


மியான்மார் எனப்படும் பர்மா!

பௌத்தம் கோலோச்சும் இன்னொரு நாடு.

கடந்த மூன்று வருடங்களாக நெஞ்சை பதறவைக்கும் கொலைப்படலம் அரங்கேறிவரும் வன்முறை பூமி. சில வாரங்களாக ஊடகங்களை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கும் இந்த நாட்டின் இனப்படுகொலை செய்திகளும் இரத்தத்தை உறையவைக்கும் படங்களும் சமூக வலைத்தளங்களில் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளன. அண்மையில் அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகளின் செய்தியுடன் ஊடகங்களில் பர்மா என்ற நாமம் சிறிது பரவலாகவே இடம்பிடித்ததுள்ளது என்று கூறலாம்.

அதாவது, பர்மாவிலிருந்து சாவுக்கு அஞ்சி வெளியேறிய பல நூற்றுக்கணக்கான மக்கள் இந்தோனேசியா – ஜாவா தீவுகளுக்கு அருகில் கப்பல்களில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக சிலவாரங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்திருந்தன. அவர்களை இந்தோனேசிய, மலேசிய, தாய்லாந்து நாடுகள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தன.  ஆனால் அதன்பின்னர், இந்த அகதிகள் எவ்வளவு பேர், எங்கு, எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்ற செய்திகள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

அவ்வாறான ஒரு காலப்பகுதியில்தான் - கடந்த வாரம், மலேசியாவிலிருந்து வெளியான பகீர் தகவல் ஒன்று பர்மா இனப்படுகொலை விவகாரத்தின் வேர்களை தேடி ஊடகங்களை விரட்டிவிட்டது.

அதாவது –

பர்மாவிலிருந்து வெளியேறிய பலநூற்றுக்கணக்கான அகதிகள் கொடிய ஆட்கடத்தல்காரர்களில் கைகளில் அகப்பட்டு, வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்டு, மலேசிய – தாய்லாந்து எல்லைப்பகுதிகளில் உள்ள காடுகளில் இரகசிய தடுத்துவைக்கப்பட்டு பணம்பறிக்கப்பட்டபின்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காடுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 இடங்களிலிருந்து பாரிய மனிதப்புதைகுழிகளை கண்டுபிடித்த மலேசிய காவல்துறையினர், இதுவரை சுமார் 140 சடலங்களின் எச்சங்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்கள்.  ஈரக்குலையை நடுங்கவைக்கும் இந்த வதைமுகாம் செய்திகள் இப்போதும்கூட பெரிய ஊடகங்களில் வெளிவர மறுக்கின்றன.



இந்த விதி வழிவந்த பர்மிய மக்களின் பிரச்சினைதான் என்ன?

1962 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட பர்மா, கடந்த 2010 ஆம் ஆண்டுதான் ஜனநாயக வழியிலான தொழிற்சங்க ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி கட்சி என்ற முன்னணியினால் வெற்றிகொள்ளப்பட்டு புதிய ஆட்சி நிறுவப்பட்டது. 48 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற இந்த ஆட்சியினால் நாட்டின் ஒட்டுமொத்த அரசு நிலையிலும் பாரியமாற்றம் ஏற்பட்டது. வெளிநாடுகளுடனான பரந்த உறவுகளும் உருவனது.

புதிய ஆட்சியில்

- பெருந்தொகையான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

- புதிய அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

- அரசுக்கு எதிராக போராடும் கரன்-ஷான் போராளிக்குழுவினருடனான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

- 50 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ விஜயம் பர்மாவுக்கு மேற்கொள்ளப்பட்டது.

- ஐ.நா.செயலாளர் நாயகம் உட்பட பிரித்தானிய பிரதமர் ஆகியோரின் அதிஉயர் விஜயங்களும் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன.

ஆனால், இலங்கையில் ஜே.ஆர் போய் பிரேமதாஸ வந்து, அவருக்கு பின்னர் சந்திரிகா என்று ஆட்சிகள் மாறியவுடன், கதிரைகளுக்கு குஞ்சரம் கட்டி வெளிஉலகுக்கு எவ்வளவுதான் அரிதாரம் பூசினாலும் சிறுபான்மை தமிழர்கள் விடயத்தில் தங்கள் இனவாத கொள்கைகளை அவை ஒருபோதும் மாற்ற முயற்சிக்காதது போல –

பர்மாவிலும் நூறாண்டுகளாக வாழ்ந்துவரும் ரோகிங்க சிறுபான்மை முஸ்லிம் மக்கள் விடயத்தில் பர்மாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த புதிய அரசானது ரோகிங்க மக்களை பொறுத்தவரை மோதகம் போய் கொழுக்கொட்டை வந்த கதைதான்.


ரோகிங்க முஸ்லிம்கள் எனப்படுபவர்கள் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பர்மாவில் வாழ்ந்துவரும் சிறுபான்மை இனத்தவர்கள். இவர்களை நாட்டிலிருந்து துரத்தவேண்டும் என்று காலம் காலமாக பாரிய அளவில் ஆளும் கட்சிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் 1942 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசின் ஆசீர்வாதத்துடனான நடவடிக்கையில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதேபோன்று 1978 ஆம் ஆண்டு இடமபெற்ற இன்னோர் பாரிய மனிதப்படுகொலை படலத்தின்போது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்களாதேஷ_க்கு தப்பிச்சென்றனர். ஆனால், அவர்களில் 60 வீதமானவர்களை மீண்டும் பர்மாவுக்கே துரத்திவிட்டது பங்களாதேஷ் அரசு.

இவ்வாறு காலம் காலமாக பெரும்பான்மை இன அரசாலும் சர்வதேசத்தின் பாராமுகத்தினாலும் பந்தாடப்பட்டுவருவதே ரோகிங்க முஸ்லிம் மக்களின் வழக்கமும் வரலாறும் ஆகிவிட்டது.
இனப்படுகொலை படலம் கட்டவிழ்த்துவிடப்படும்போதெல்லாம் பாலியல் வன்கொடுமை எனப்படுவது பௌத்த ஆதிக்க வெறிபிடித்த காடையர்களாலும் இராணுவத்தினராலும்; தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயுதமாகும்.

இதன்மூலம் அந்த நாட்டில் மிச்சம் சொச்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் வாரிசுகளும் பௌத்தர்களாகவே தோன்றவேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ளும் கறுப்புவரலாறாக இந்த பெருங்கொடூரம் அரங்கேற்றப்பட்டுவந்தது.

1983 ஆம் ஆண்டு பர்மாவில் ஆட்சியிலிருந்த அரசு, சிறுபான்மை இன முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பயங்கரமான இன அழிப்பின் உச்சத்தை வெளிக்காண்பித்திருந்தன.

அதாவது, ரோகிங்க முஸ்லிம் மக்களை அந்த ஆண்டு நடத்திய சனத்தொகை கணக்கெடுப்பில் முற்றாக ஒதுக்கப்பட்டனர்.

இதைவிட படுபயங்கரமான கொடுமைகளும் இந்த மக்களின் அன்றாட வாழ்வில் அரங்கேறின. அதாவது -

- ரோகிங்க முஸ்லிம்கள் பர்மாவில் நிலம் மற்றும் கட்டடங்கள் வாங்கமுடியரது.

- இவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது.

- ரோகிங்கர்கள் எவரும் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. மீறி செய்துகொண்டால் ஐந்து வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை.

- மசூதிகளோ முஸ்லிம் பாடசாலைகளோ தனியாக எங்கும் நிறுவப்படமுடியர்து.

மொத்தத்தில் ரோகிங்க இனத்திற்கு அந்த நாட்டில் எந்த விதமான உரிமையும் இல்லை என்பதே சாராம்சம்.

இப்படிப்பட்ட நரகமயமான சட்டங்களால் ஆளும் பௌத்த வெறியர்கள சமுதாயத்தில் ஒரு நடைபிணமான இனமாகவே ரோகிங்க முஸ்லிம்களை ஆட்சிசெய்துவந்தனர்.

ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றம் நாட்டிலுள்ள மக்களுக்கு பல சுபீட்சங்களை கொண்டு வந்தது. இவற்றில் அதி முக்கியமான மாற்றமாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவி ஆங் சாங்க் சுயி அவர்களின் விடுதலையை குறிப்பிடலாம். பர்மாவின் முகமாக உலக அரங்கில் அறியப்பட்ட அம்மணியின் விடுதலையும் அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணமும் அவ்வளவு தூரம் உலக மக்களால் போற்றி கொண்டாடப்பட்டது.

ஆங் சாங் சுயி இனிமேல் மலரப்போகும் சுபீட்சம் மிக்க பர்மாவின் மீட்பர் என்கிற ரீதியில் உலகமே கொண்டாடியது. ஆனால், இன்றுவரை, ரோகிங்க இன முஸ்லிம் மக்களை இவர்கூட பர்மாவின் தேசிய இனக்குழுமமாகவோ அல்லது பர்மாவில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக எங்கும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த வழமையான அரசியல் சித்து விளையாட்டுக்கள் தொடர்ந்துகொண்டிருந்தபோதுதான், தற்போது உச்சத்தை அடைந்திருக்கும் இரத்தக்களரிக்கு வித்திட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது
கடந்த 2012 ஆம் ஆண்டு பெரும்பான்மையின பௌத்த பெண் ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாள்.

இந்த சம்பவத்தை முஸ்லிம் இனத்தவர்களை சேர்ந்த மூவரே மேற்கொண்டதாக ஆளும் தரப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால், ரோகிங்க இன முஸ்லிம் மதத்தலைவர்களோ தமது இனத்தின்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார்கள். அந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஒருவர் தடுப்புக்காவலில் இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கொலைவாளுடன் திரிந்துகொண்டிருந்த பௌத்த இனவாதப்பேய்களுக்கு கேள்விப்பட்ட சம்பவம், அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாய்ந்துகொள்வதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

அன்று ஆரம்பித்ததுதான் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

பர்மாவின் கொடூர நிலைவரத்துக்கு இன்றுவரை உலக அரங்கில் சரமாரியாக சகல பாகங்களிலிருந்தும் மேற்கொள்ளப்படும் ஒரே ஒரு தடுப்பு நடவடிக்கை என்ன என்று கேட்டால், கண்டன அறிக்கைதான்.

ரோகிங்க இன முஸ்லிம்கள் பர்மாவில் சுமார் 8 லட்சம் பேரும் பங்களாதேஷில் சுமார் 3 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களைவிட மத்திய கிழக்கிலும் ஏனை நாடுகளிலும் சிறிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இவர்களுக்கென பலமான புலம்பெயர்ந்துவாழும் சமூகம் ஒன்றின் பங்களிப்பு இல்லாதது கவலைக்குரிய இன்னொரு விடயமாகும்.

அதனால், ரோகிங்க இன மக்களின் நியாயமான அபிலாஷைகளையும் அவர்களின் உரிமைகளையும் வெளிக்கொண்டுவருவதற்கான வாய்ப்பும் வளமும்கூட அவர்களுக்கு இருக்கவில்லை. அவற்றை வெளிக்கொண்டுவருவதற்கான பொறுப்புள்ளவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பௌத்த இனவெறித்தனத்தின் நேரடித்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருந்தவர்கள் அல்லது சாவின் விளிம்பில் இருந்துகொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள். பங்களாதேஷில் எஞ்சியிருந்தவர்களும் அங்கிருந்து எதையும் செய்துவிட்டால், மீண்டும் பர்மாவுக்கே திருப்பிஅனுப்பக்கூடிய ஆபத்துக்குள் இருந்தவர்கள்.

இதைவிட கொடிய தகவல் ஒன்றுள்ளது.

பர்மாவில் ரோகிங்க இன மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுள்ளமை குறித்து நேரடியாக விசாரிப்பதற்கும் இந்த விடயங்களை கண்காணிப்பதற்கும் ஐ.நாவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட தூதுவர் யார் தெரியுமா?

விஜய் நம்பியார்!

(இது "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்ட கட்டுரைஆகும்) 

Monday, May 25, 2015

வித்தியா – மயூரன் சந்திப்பு: நடந்தது என்ன?


வெறித்த கண்களுடன் அழுவதற்கும் ஆற்றலின்றி வந்திறங்கிய வித்தியாவை எங்கிருந்தோ அடையாளம் கண்டு ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் சரண்யா. என்ன நடந்தது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டவள், வித்தியாவை இறுக்கக்கட்டியணைத்துக்கொண்டு ஓவென்று அழுதாள். நாள் முழுதும் உடம்பெல்லாம் அனலாய் கொதித்துக்கொண்டிருந்த வித்தியாவுக்கு சரண்யாவின் அணைப்புத்தான் சிறிது ஆறுதலை கொடுத்தாலும் வந்திறங்கிய புதிய இடம்; பற்றி எதுவும் புரியாமல் சரண்யாவின் பிடியிலிருந்தபடியே சுற்று முற்றும் பார்த்து வழிகளை அலையவிட்டாள்.

எல்லாமே புதிதாய் கிடந்தது. சில முகங்கள் எங்கோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தியது. சிலரின் பார்வையில் கருணை தெரிந்தது. சிலரின் பார்வைகள், அங்கு வருவதற்கு முன் சற்று முன் பார்த்த கொடிய முகங்கள் போலவே காணப்பட்டன. சில சின்னஞ்சிறுசுகள் எதுவும் புரியாதவர்களாக வித்தியாவையும் சரண்யாவையும் அழுவுதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தன.

சரண்யாவின் கண்ணீரை துடைத்துவிட்டு கைகளை கோர்த்தபடி மெல்ல மெல்ல நடந்தாள் வித்தியா. சரண்யா ஓடி வந்த திசையில் ஆயிரக்கான மக்கள் கூட்டம் ஒன்று வித்தியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். அவர்களின் கண்களில் ஏதோ ஒரு தவிப்பு வழிந்தபடி கிடந்தது.

பயப்படாதே! இவர்கள் எல்லோரும் எனக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு முன் இங்கு வந்தவர்கள்” – என்று கூறிய சரண்யாவை வித்தியா ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க “ம்..எல்லாரும் எங்கட சனம்தான்” – என்றாள் சரண்யா.

அப்போது திடீரென ஏதோ புது தைரியம் வந்ததுபோல் உணர்ந்தாள் வித்தியா. இருந்தாலும் உடல் கொதித்தபடி கிடந்தது.

திரும்பி நேரே பார்த்தவள், தொலைதூரத்தில் ஒரு கொட்டகையில் எவரையும் திரும்பிப்பார்க்காமல் பெரிய பரந்த பலகை ஒன்றில் வர்ணங்களின் உதவியுடன் சித்திரம் வரைந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவனை கண்டாள். அவனின் தோற்றத்தில் தமிழன்தான என்பது தெரிந்தாலும், சின்ன சந்தேகமும் கூடவே அவனில் ஒட்டியிருந்தது.

யார் இந்த பெடியன்” என்று சரண்யாவின் காதுக்குள் மெதுவாக கேட்டாள் வித்தியா.

இவன்தான் மயூரன். போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அண்மையில் இந்தோனேஸியாவில் மரண தண்டனை கொடுக்கப்பட்டு போன மாதம் இங்கு வந்தவன்” என்றாள் சரண்யா.

சொல்லி முடிப்பதற்குள் கண்கள் சிவந்து உரு வந்தவள் போலாளாள் வித்தியா. நடப்பதற்கு உடம்பில் வலுவில்லாதபோதும் இயலுமானவரை வேகமாக அந்த கொட்டகையை நோக்கி நடந்தாள் வித்தியா. “எங்கடி போறா” என்று சரண்யா கூப்பிடிட்டது அவளின் காதுகளில் விளவேயில்லை. அவ்வளவு கோபத்துடன் நடந்தாள் வித்தியா.

நீயா மயூரன்

சற்றும் எதிர்பாராத கேள்வி என்றாலும் அமைதியாக திரும்பி பார்த்த மயூரன், தலையை மேலும் கீழும் அசைத்து “ஆம்” என்றான்.

சிறிது நேரத்திற்கு முன் தன்னை தலையில் அடித்து கொலைசெய்தவனை பார்த்தது போலவே பயங்கர சீற்றமடைந்த வித்தியா –

உன்னை போல ஓருத்தன் கடத்திய போதைப்பொருளினால் நாசமாகிப்போக நான்கு மிருகங்களினால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். அது தெரியுமா உனக்கு” என்றாள் வித்தியா.

மை காய்ந்த தூரிகையை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு எழுந்தான் மயூரன். வித்தியாவின் பின்னால் அவளை அழைத்தபடி ஓடிவந்த சரண்யா, வித்தியாவின் கைகளை பிடித்து இழுத்தாள்.

கைகளை உதறிவிட்டு தனது உக்கிரப்பார்வையால் மயூரனை சுட்டெரிப்பது போல பார்த்தாள் வித்தியா.

உன்னைப்போல கழிசடைகள் செய்யும் காரியத்தால் எத்தனை பெண்கள், எத்தனை குடும்பங்கள் சீரழியுது தெரியுமா? இந்த கறுமத்தை உனக்கு விரும்பமெண்டால் நீ புகைச்சு இங்க வந்திருக்கலாமே. ஏன்டா மற்றவங்களுக்கு கடத்தி மற்றவங்களை மிருகமாக்குறீங்கள்” – என்று வாய்க்கு வந்தபடி பொரிந்துதள்ளினாள் வித்தியா.

அவள் திட்டடியதிலிருந்து ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்ட மயூரன், பதில் எதுவும் சொல்லாமல், பதில் எதுவும் தெரியாமல், குற்ற உணர்வில் கூனிக்குறுகி நின்றான்.

மெல்லிய குரலில், “நான் செய்தது குற்றம்தான். அதற்காக பத்துவருடங்கள் சிறையிலிருந்து என் குற்றங்களை உணர்ந்து வருந்தி திருந்திவிட்டேன். இருந்தாலும் எனக்கு மரண தண்டனை விதித்ததை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு இங்கு வந்தேன்” – என்றான் மயூரன்.

அவனது ஒப்புதல் வாக்குமூலம் வித்தியாவை திருப்திப்படுத்தவில்லை.;

பின்னாலிருந்து அவளது கைகளை பிடித்து இழுத்த சரண்யா “வித்தியா! அவனை விட்டுவிடடி. அவன் மிகவும் நல்லவன். அவன் உண்மையில் இங்கு வந்திருக்கக்கூடாது. செய்த குற்றத்துக்காக பத்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தான். அவன் சிறையிலிருந்த காலத்தில், நன்றாக திருந்திவிட்டான். அவனுக்கு பிறகு சிறைக்கு வந்த கைதிகளை நல்லவர்களாக மனம் மாற்றி அவன்  விடுதலையாகும்போது நல்ல மனிதர்களாக வெளியில் செல்ல காரணமாயிருந்தவன் என்றுகேள்விப்பட்டிருக்கறன்” – என்று சொல்லி முடிப்பதற்குள் -

நிப்பாட்டடி உந்த கதையை” – என்றாள் வித்தியா.

நீ இப்ப என்னடி செல்ல வாறாய். என்னை சீரழித்த காட்டுமிராண்டிகளும் பத்து வருசம் ஜெயில்ல கிடந்து, பிழைய உணர்ந்திட்டம், இப்ப திருந்தீட்டம் எண்டு சொன்னா, செய்த பிழையெல்லாத்தையும் மறந்து மன்னிச்சிடுவியா. உன்ன சீரழிச்சவங்கள பற்றி நீயும் நினைச்சுப்பாத்து சொல்லு பார்ப்பம்” என்று சுளீர் என்று கேட்டாள்.

வித்தியாவும் சரண்யாவுக்கும் பேசிக்கொண்டுபோவது மயூரனுக்கு நன்றாகவே கேட்டது. வரைதலை அப்படியே இடையில் நிறுத்திவிட்டு அந்த இடத்திலிருந்து போய்விட்டான்.

தவறுகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் தவறுகள் இடம்பெற்ற காலத்துக்கு சமாந்தரமாகவே கொடுக்கப்படவேண்டுமே தவிர, பத்து வருடம் கழித்து இருபது வருடம் கழித்து தவறிழைத்தவர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு வழங்கப்படக்கூடாது. 

“தலைவர் மாமா இருக்கும்போது எப்பிடியெல்லாம், எங்கட அக்காமார் பாதுகாப்பா இருந்தார்கள் எண்டு அம்மா எனக்கு நெடுகலும் சொல்லுவா. இப்படி எத்தினையோ கதையள் அம்மா சொல்லுவா. நாங்கள் அதை அனுபவிக்கவிலையடி. வயது வந்து எங்களுக்கு விசயங்கள் தெரியுற நேரம் பார்த்து, காடையர்களத்தான் நாங்கள் பார்க்கவேண்டி வந்திட்டுது.

நாங்கள் பரவாயில்லை இங்க வந்திட்டம். அங்க இருக்கிற சனம் பாவமடி” – என்று ஆதங்கத்துடன் சொல்லிக்கொண்டே நடந்தாள் வித்தியா.

அவள் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டே வந்த சரண்யா –

கவலைப்படாதே. மாமா எங்களுடன்தான் இருக்கிறார்” என்று தீர்க்கமாக சொல்லிட்டு வித்தியாவின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு நடந்தாள்.

(முற்றும்)

Sunday, May 24, 2015

'பாலி 9 : பாகம் 6' : ஆஸ்திரேலியாவின் திமிரை அடக்கிய இந்தோனேஷியா!


ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலான உறவெனப்படுவது வெளிப்பார்வைக்கு நெருக்கமாக செயற்படுவது போன்ற தேரணையை ஏற்படுத்தினும் உள்ளே புகையும் பகையும் அது அவ்வப்போது வெளித்தள்ளிவிடும் சுவாலைகளும் மிகவும் பயங்கரமானவை. கொதிலைமிக்க இந்த உறவுப்பாலத்தின் மீதுதான் இரண்டு நாடுகளும் தங்களது கட்டாய அரசியல் - இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றன.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை –

உலகளாவிய பயங்கரவாதம் எனப்படுவது 25 கோடி மக்கள்தொகைகொண்ட முஸ்லிம் தேசமான இந்தோனேஷிய கதவுகளின் ஊடகத்தான் ஆஸ்திரேலியாவுக்குள் ஊடுருவப்போகிறது என்ற அச்சம் நித்தமும் அரித்தவாறுள்ளமை ஏதோ மறுக்கமுடியாத உண்மை. இன்றையநிலையில்,
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய அச்சம் இதுவாகும். இந்த காரணம் உட்பட அயல்நாடு என்ற அடிப்படையில் நட்பு பாராட்டவேண்டிய பாரம்பரிய கடமை போன்ற பல விடயங்களை முன்வைத்து இந்தோனேஷியாவை தன் கைக்குள் இறுக்கமாக பொத்திவைத்திருக்கவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் 'அரசமைப்பில் எழுதாத பொதுவிதி'

ஆஸ்திரேலியாவின் இந்த ஏக நட்புபாராட்டும் படலத்தை தனக்கு ஏற்றவாறு எங்கெங்கு பயன்டுத்தமுடியுமோ அங்கங்கெல்லாம் அநாயசமாக வாங்கி குவித்துக்கொள்வது இந்தோனேஷியாவின் வழமை. ஆஸ்திரேலியாவின் இந்த பரோபாகாரங்கள் - மானியங்கள், கடன்கள், மீளப்பெறாத நிதி உதவிகள் என்ற பல வடிவங்களில் இந்தோனேஷியாவுக்கு வழங்கப்பட்டுவந்திருக்கின்றன.

இவ்வாறெல்லாம் கொட்டிக்கொடுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு, தனது உத்தியோகப்பற்றற்ற காலனித்துவ தேசமாக இந்தோனேஷியா இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் இந்த சட்டம்பித்தனம் அவ்வப்போது இந்தோனேஷியாவை சீற்றத்தை உள்ளாக்குவதும் அதற்கு ஆஸ்திரேலியா எந்த பதிலும் வழங்காமல் அதிகாரப்போக்குடன் நடந்துகொள்வதும் காலகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஆகும். ஆனால், அகதிகள் விடயம் என்று வரும்போது ஆஸ்திரேலியாவின் இந்த இறுக்கமான போக்கு சற்று தணிந்தே காணப்படுவது வழக்கம்.

ஏனெனில், ஆஸ்திரேலியாவை நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு இந்தோனேஷியாதான் கடைசி இடைசித்தங்கல் தேசமாக இருந்துவருகிறது. இவ்வாறு இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குவியும் அகதிகளால் ஆஸ்திரேலிய அரசு கடந்த சில வருடங்களாக பட்டபாடு பெரும்பாடு. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக இந்தோனேஷியா உட்பட பல நாடுகளுக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் காலில் விழாத குறையாக சட்டவிரோத அகதிகள் வருகையை கட்டுப்படுத்துமாறு கைகூப்பி மன்றாடிவிட்டு வந்தார்.

ஆனால், கடந்த வருடம் இந்த விடயத்தில்கூட ஆஸ்திரேலிய காண்பித்த விட்டேந்தித்தனமான அணுகுமுறை இந்தோனேஷியாவை பயங்கரமாக சீற்றத்துக்குள்ளாக்கியது. அதாவது, “ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை கட்டுப்படுத்தும்படி இந்தோனேஷியாவை கோரியுள்ளோம். அதையும் மீறி, இனி இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் வந்தால், மீண்டும் இந்தோனேஷியாவுக்கே திருப்பி அனுப்புவோம்” என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து, இந்தோனேஷியாவை பொறுத்தவரை வலிய வந்து சண்டைக்கு
இழுத்தது போலவே இருந்தது.

அகதிகள் விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் காலகாலமாக எத்தனையோ உடன்படிக்கைகள், இணக்க வரைவுகள், ஒப்பந்தங்கள் என்று ஒருவித சமரச நிலையை பேணிவந்த பாரம்பரியத்தின் மீது ஆஸ்திரேலியா தடாலடியாக மேற்கொண்ட தாக்குதல் இரு நாட்டு உறவுக்கும் பங்கம் விளைவித்த நிகழ்வாகவே அமைந்தது.

இதேபோன்று, இந்தோனேஷியாவை கடும் சீற்றத்துக்கு உள்ளாக்கி அந்நாட்டு மக்கள் இந்தோனேஷியாவிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் வரை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வழிகோலிய சம்பவம், இந்தோனேஷிய அரச அதிபரின் கைத்தொலைபேசியை ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறையினர் ஒட்டுக்கேட்டதாக ஊடகங்கள் போட்டுடைத்த செய்தி.

இந்த செய்தியால் வெகுண்டெழுந்த இந்தோனேஷியா தங்கள் நாட்டின் இறையாண்மையின் மீது ஆஸ்திரேலியா வன்தாக்குதல் நடத்திவிட்டது என்று உறுமியது. நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொண்ட ஆஸ்திரேலியா, தனது தவறுக்கு மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் கூறியது.

ஆஸ்திரேலியாவோ, பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தோனேஷிய உட்பட தனக்கு அருகில் உள்ள எல்லா நாடுகளினதும் அமைதி நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்கள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த ஒட்டுக்கேட்பு இடம்பெற்றது என்று வியாக்கியானம் கூறி மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது என்று முகத்தில் அறைந்தது போல கூறிவிட்டது.

ஆஸ்திரேலியாவின் இந்த ஏதேட்சதிகாரமான இரட்டைத்தவறு இந்தோனேஷியாவுக்கு அரசியல் - இராஜதந்திர ரீதியாக ஆறாதவடுவை ஏற்படுத்தியது.

இவை எல்லாவற்றினதும் பின்னணியில்தான், பாலி 9 விவகாரம் 2005 ஆம் ஆண்டு முதல் பூதாகாரமாகி பூமராங் போல வந்து ஆஸ்திரேலியாவையே மடக்கிப்பிடித்தது. இம்முறை இந்தோனேஷியாவில் கால்களில் விழவேண்டிய கட்டாய நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது.

மயூரன் மற்றும் அன்ட்ரூவின் மரணதண்டனை எனப்படுவது முற்றிலும் சட்டம் மற்றும் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம். இதில், அரசியல் - இராஜதந்திர தலையீடுகளுக்கு இம்மியும் இடமில்லை. இது தெரிந்தும், இந்த மரணதண்டனை விவகாரத்தில் ஆஸ்திரேலிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டிய இக்கட்டானநிலைக்கு ஆஸ்திரேலிய அரசு தள்ளப்பட்டது. அதுதான் உண்மை. இதற்காக ஆஸ்திரேலிய அரசு இந்தோனேஷிய அரசுடன் பலவிதமான பேரப்பேச்சுக்களில் ஈடுபட்டது.

முதலில் மென்முறையை கடைப்பிடித்த ஆஸ்திரேலிய அரசு, "கடற்கோளால் பாதிக்கப்பட்டபோதெல்லாம் எவ்வளவோ உதவிகளை அள்ளித்தந்தோமே, அதற்கு நன்றிக்கடனாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட எங்கள் நாட்டின் பிரஜைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள்" என்று மன்றாடினார் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்.

அதற்கு இந்தோனேஷியா மசியாத காரணத்தினால், மிதவாத மென்முறைக்கு தன்னை நகர்த்திய ஆஸ்திரேலியா, கைதிகள் பரிமாற்றத்தின் ஊடாக ஏன் இந்த மரணதண்டனையை நிறுத்தக்கூடாது என்று யோசனையை முன்வைத்து "இந்தோனேஷிய கைதிகள் இருவரை நாங்கள் உங்களிடம் தருகிறோம். ஆனால், எங்கள் நாட்டின் பிரஜைகளை நீங்கள் எம்மிடம் தரவேண்டுமில்லை. மரணதண்டனை விதிக்காமல், ஆயுள்கைதிகளாக உங்கள் நாட்டு சிறையிலேயே வைத்திருங்கள்" - என்று கோரிக்கையை முன்வைத்தது.

மறுபேச்சுக்கே இடமில்லாமல், அந்த கோரிக்கையையும் இந்தோனேஷியா நிராகரிக்க வன்முறை மிக்க மிரட்டல் தொனியில் “எங்கள் வேண்டுதல்களை மீறி இந்த மரணதண்டனையை நீங்கள் நிறைவேற்றினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கான உதவிகளை குறைப்போம்” என்றெல்லாம் ஜூலி பிஷப் எச்சரிக்கை விடுத்தும் பார்த்தார்.

ஏதற்கும் அடிபணியாத இந்தோனேஷியா “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று சட்டத்தில் கட்டி சன்னங்களால் சல்லடை போட்ட ஆஸ்திரேலிய பிரஜைகள் இருவரதும் உடலங்களை பெட்டியில் போட்டு அனுப்பிவைத்தது.

ஏதோ பெரிதாக அறச்சீற்றம் கொண்டதுபோல, இந்தோனேஷியாவுக்கான ஆஸ்திரேலிய தூதுவரை மீள அழைத்ததுடன் ஆஸ்திரேலியா தீச்சட்டியை இறக்கிவைத்துவிட்டு, வரவு செலவு திட்ட வேலைகளில் மும்முரமாகிவிட்டது.

பாலி 9 விவகாரத்தில் இந்தோனேஷிய அரசு கொடுத்த தண்டனை மயூரன் மற்றும் அன்ட்ரூவுக்கு மட்டுமல்ல. ஆஸ்திரேலிய அரசுக்கும் சேர்த்துத்தான். இது ஆஸ்திரேலியாவுக்கும் தெரியும். ஆனாலும், இதில் ஆஸ்திரேலிய அரசு பெரிதாக பொங்கி ஆர்ப்பாட்டம் செய்யாதளவுக்கு “ஈரச்சாக்கு போட்டு அடித்தது போல” விஷயத்தை கையாண்டிருப்பதுதான் இந்தோனேஷியாவின் கெட்டித்தனம்.

சட்டமும் நீதியும் நடுநிலமையானவை என்றாலும்கூட அதை உருவாக்கும் அரசுக்கட்டுமானம் எனப்படுவது சூழ்ச்சிகள் நிறைந்த வலைகளால் பின்னப்பட்டுள்ளவரை அந்த நடுநிலமை என்பது கேள்விக்குரியாதாகவே அமையும்.

'பாலி 9: பாகம் 5' - "அண்ணா! உன்னை காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. மன்னித்துவிடு"


'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!



"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

Sunday, May 10, 2015

'பாலி 9: பாகம் 5' - "அண்ணா! உன்னை காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. மன்னித்துவிடு"


மரணம் என்பது மனிதனுக்கு ஒருபோதும் விருப்பத்துக்குரிய நிகழ்வாக இருந்ததில்லை. சமரசமற்ற அந்த சம்பவம் இயற்கையாக நிகழும்போதே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதன், செயற்கையாக இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி அராஜமாக அமுல்படுத்தப்படும் மரணங்கள், சாபவர்களைவிட சுற்றத்தாரைத்தான் தவணைமுறையிலான சித்திரைவதைக்கு உள்ளாக்கிவிடுகின்றன.

அதுபோன்ற ஒரு மரணத்தின் பிடியில் அகப்பட்ட மயூரன் மற்றும் அன்ட்ரூவினால் இரண்டு தேசங்கள், அவர்களின் அனுதாபிகள் மற்றும் அரசியல்தலைவர்கள் என எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்ட நாட்களை ஆறு துப்பாக்கி ரவைகள் அமைதியாக நிறைவுசெய்திருக்கின்றன.

எல்லா மரணதண்டனைகைளயும் போலவே, மயூரனின் மரணமும் அவனைவிட அவனது குடும்பத்தினரைத்தான் மிகப்பாரிய அளவில் தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.;; இந்தப்பொதுவான வேதனையை - மயூரனின் உறவுகள் கண்ணீருடன் விடைகொடுக்கும் காட்சியை - உலக ஊடகங்கள் அனைத்தும் பதிவுசெய்துகொண்ட அவனது இறுதிநிகழ்வுகள், சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னிலையில் சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த நான்கு மாதங்களாக மயூரனுடன் சேர்ந்து மரணத்துடன் போராடிய மயூரனின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க தமது பாசத்திற்குரியவனை வழியனுப்பிவைத்தனர்.

“சட்டம் என்ன சொல்கிறதோ மற்றையவர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்கு தெரியாது, என் அண்ணன் எனக்கு ஹீரோ. அண்ணா! நீ போய் எனக்காக சொர்க்கத்தில் ஒரு இடமொதுக்கு! அங்கு உன் வீட்டில் எனக்கொரு ஆசனமும் தயார் செய்! நான் வந்து அதிலிருந்து நீ கீறும் படங்களை பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்" என்று இறுதிநிகழ்வில் மயூரனின் தங்கை பிருந்தா பேசும்போது அங்கு திரண்டிருந்த அரங்கமே கண்ணீர் வடித்தது.

“அண்ணா! உன்னை மீட்பதற்கு நான் என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதற்காக நான் இழந்தது எவ்வளவோ. அது உனக்கும் தெரியும். இருந்தாலும், உன்னை என்னால் காப்பாற்றமுடியாவில்லை. என்னை மன்னித்துவிடு" என்று மயூரனின் தம்பி சிந்து தழுதழுத்த குரலில் பேசி முடிக்கும்போது அரங்கில் எவருமே தங்கள் உணர்வுகளைக்கட்டுப்படுத்தமுடியவில்லை. மயூரனின் தாயாரால் பேசமுடியவில்லை. சிந்துவின் தோள்களில் சாய்ந்தபடியே மயூரனின் உடலம் வைக்கப்பட்டிருந்த பேழையை பார்த்து விக்கி விக்கி அழுதார். அவ்வப்போது, பேசுவதற்கு எடுத்த முயற்சிகளையும் அவரது கண்ணீர் விழுங்கிக்கொண்டது. அதைப்பார்த்த அரங்கமும் கண்ணீரால் நிறைந்துகொண்டது. மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவனுக்கு இவ்வளவு பேர் திரண்டு கண்ணீர் வடித்தது ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இதுதான் முதல்தடவையாக இருக்கக்கூடும்.


மயூரனின் வரைதல்கலைக்கு கடைசி வரை உறுதுணையாகவிருந்த சித்திரக்கலைஞர் பென் மயூரனின் நினைவுகளை பகிர்ந்துகொள்கையில் -  சிறையிலிருந்து மயூரன் வரைந்த முப்பதுக்கும் மேற்பட்ட வரைபடங்களை மெல்பேர்னில் கண்காட்சியாக ஒழுங்குசெய்து நடத்தியபோது, அந்த படங்கள் அனைத்தும் சுமார் 14 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்களுக்கு விற்பனையாகின. அந்த பணத்தில் மயூரன் இந்தோனேஸியாவில் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறையில் வரைகலைக்கூடம் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது அவனது ஆசை. அங்கு சிறைவைக்கப்படும் கைதிகளுக்கு அந்த கலைக்கூடத்தில் வரைதல் சொல்லிக்கொடுத்து தாங்கள் குற்றவாளிகள் என்ற மனநிலையை மாற்றி அவர்களை வாழ்வில் நல்வழிப்படுத்தவேண்டும் என்ற மயூரனின்
விருப்பத்துக்கிணங்க இந்தப்பணம் சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது என்று பென் தனது இறுதி உரையில் நினைவுகூர்ந்தார்.

'மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு முன் நான் மயூரனுடன் பேசிய தொலைபேசி கலந்துரையாடல் இன்னமும் எனது நெஞ்சில் அழியாமல் உள்ளது. தொலைபேசி அழைத்தபோது, அந்த எண்ணை பார்த்தபோதே மயூதான் அழைக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். தொடர்பை ஏற்படுத்தியவுடன், “ஹலோ! நான் இங்கு மயூரன் பேசுகிறேன். நீங்கள் யார் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது சிறந்த சித்திரக்கலைஞரா பேசுகிறீர்கள்..” என்று தொடங்கிய மயூவின் வார்த்தைகள் இன்னமும் என் நெஞ்சில் ஆழமாக பதிந்துகிடக்கின்றன – என்று கூறியுள்ளார்.



உணர்வுபூர்வமான இந்த பதிவுகள் ஒருபுறமிருக்க -

“போயும் போயும் ஒரு போதைப்பொருட்கடத்தல்காரனுக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா? இவனால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ? இவனை கொன்றிருக்காவிட்டால் சீரழிந்திருக்கக்கூடிய குடும்பங்கள் எத்தனையோ? வாய் கூசாமல் இவர்களையெல்லாம்போய் ஏதோ சுதந்திரபோராட்ட வீரர்கள் கணக்கில் ஊடகங்கள் எழுதுவது அருவருப்பாக இருக்கிறது” – என்று மரணதண்டனைக்கு ஆதரவான தரப்பினரும் போதைப்பொருள் தடைக்கு ஆதரவானவர்களும் எதிர்வாதங்களை முன்வைத்துவருகிறார்கள்.

இதற்கு இந்தோனேஸிய அரச தரப்பினரும் நீதித்துறையினரும் நடந்து முடிந்த மரணதண்டனைக்கு முன்வைத்திருக்கும் வாதங்களை பார்ப்போம்.

இந்தோனேஸியா எனப்படுவது போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகின்ற தேசம். தாய்லாந்து, மலேசியாஇ சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளுடன் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலான போதைப்பொருட்கடத்தல் கும்பல்கள், இந்தோனேஸியாவைத்தான் தளமாக கொண்டு இயங்குகின்றன.

உள்நாட்டில் மலிந்துபோயுள்ள போதைப்பொருள் வியாபாரத்தால், சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட சனத்தொகையுள்ள இந்தோனேஸியாவில் 45 லட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 16 லட்சம் பேர் போதைப்பொருளுக்கு தீராத அடிமையாகி உயிர்தப்புவதற்கு மிகக்குறைந்த அளவு சந்தர்ப்பமே உள்ளதாக இந்தோனேஸிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக திடுக்கிடும் தகவல், அந்த நாட்டில் தினமும் 40 முதல் 50 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள்.

மயூரன் மற்றும் அன்ட்ரூ குழுவினர் இந்தோனேஸயாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சித்த சுமார் 4 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான போதைப்பொருள் சுமார் 8200 பேரின் வாழ்க்கையை சீரழித்திருக்கும் என்று இவர்களது வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் தேசிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்ட இந்த போதைப்பொருள் விவகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டத்தை நாட்டின் அரசமைப்பில் இணைத்துக்கொண்டது இந்தோனேஸியா. கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது இந்தோனேஸியாவில் மீண்டும் முனைப்படைந்திருந்தாலும் அதற்கு வேறு காரணம் ஒன்றும் ஆழமாக பொதிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அல்வா போல ஒரு சர்ச்சைக்குள்ள விவகாரம் ஆட்சியை பிடிப்பதற்கான பிரதான பேசுபொருளாக இருக்கும். அந்த பருப்பை சரியாக வேகவைப்பவர்கள் ஆட்சியை பிடித்துக்கொள்வார்கள். உதாரணமாக, அது இலங்கையை பொறுத்தவரை இனப்பிரச்சினை வடிவிலும், ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அகதிகள் பிரச்சினை வடிவிலும் இருப்பதைக்காணலாம். இந்த வரிசையில், இந்தோனேஸியாவை பொறுத்தவரை போதைப்பொருள் பிரச்சினையை கூறலாம்.

இந்தோனேஸியாவில் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பவர்களும் ஆட்சியை பிடித்ததும் தம்மை இறுக்கமான தலைவர்களாக மக்களுக்கு காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும் அண்மைக்காலமாக போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அம்பு வில்லோடு போர்க்கோலம் தரித்து தரிசனம் கொடுத்து மக்களின் வாக்குளை சுவீகரித்துக்கொள்வதற்கு வியூகம் அமைத்துக்கொள்வது வழமையாக தொடர்ந்துவருகிறது.

தற்போது ஆட்சியிலிருக்கும் ஆட்சியிருக்கும் ஜோக்கோ விடோடோவை பொறுத்தவரை இந்த பிரச்சினை அவர் ஆட்சிக்கு வந்தநாள் முதல் கழுத்தை வளைத்தபடியிருக்கும் விவகாரம் ஆகும். அதாவது, லஞ்ச – ஊழல் மலிந்து குற்றங்களால் பீடித்துப்போயிருந்த இந்தோனேஸிய அரச கட்டுமானத்தை மாற்றியமைத்து முற்றிலும் தூய்மையான மாண்புறு மக்களாட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆட்சித்தலைவராக மக்களால் கொண்டுவரப்பட்டவர்தான் தற்போதைய அரசுத்தலைவர் ஜோக்கோ விடோடோ. ஆனால், இவர் தனது நிர்வாகத்தில் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறார். பிரச்சினைகள் எழும்போது சண்டியன்போல களத்தில் இறங்கவேண்டாமா என்று எதிர்க்கட்சிகள் இவர் மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவந்திருந்தன.

அரசியல் பலிபீடத்தில் பலத்த எதிர்ப்புக்களை எதிர்நோக்கிவந்த ஜேகோ வுடோவுக்கு பாலி 9 விவகாரம் ஒரு பாசித்தாள் பரிசோதனையாகவே அமைந்தது. மயூரன், அன்ட்ரூ உட்பட எட்டுப்பேரின் மரணதண்டனை விவகாரத்தில் அவர் தயவு தாட்சண்யம் பார்க்க தயாராக இருந்தாலும் அவரது அரசியல் இருப்பும் அமைச்சரவையும் அவரை சூழ்நிலைக்கைதியாகவே பணயம்வைத்திருந்தார்கள். இவ்வாறான ஒரு பொறிக்குள் இருந்துகொண்டு “போட்டுத்தள்ளுங்கடா” என்ற உத்தரவைத்தவிர வேறெதையும் உச்சரிக்க அவருக்கு வழியில்லை. இதுபோன்ற உள்நாட்டு அரசியல்சிக்கல்களின் விளைவும்தான் மயூரன் மற்றும் அன்ட்ரூ ஆகியோரது மரணம் ஆகும்.

அப்படியானால், மிகவும் அதிகாரமும் ஆதரவும் மிக்க ஆஸ்திரேலிய அரசு இந்த சிக்கல்களை முன்பே உய்த்தறிந்து ஏன் இந்த மரணங்களை தடுக்கமுடியாமல்போனது? அடுத்த பத்தியில் பார்ப்போம்.

'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!

"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

Wednesday, May 6, 2015

'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


தமிழர்கள் சகல துறைகளிலும் திறமைவாய்ந்தவர்கள் என்ற விடயத்தில் நல்லது கெட்டது எல்லாமே அடங்கும் என்பதற்கு உலகின் எல்லா மூலையிலும் உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில், மயூரன் சுகுமாரனின் சாகச படலம் கடைசியில் அவனை எந்த முடிவுக்கு கொண்டுபோய் சேர்த்தது என்பதிலிருந்து அவனது பாதை எத்துணை கொடியது என்பதை தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அடித்தும் இடித்தும் சொல்லியிருக்கிறது.

ஆனால், அந்தவிதமான சட்டவிரோத பாதையிலும் - இது ஒன்றும் பெருமை தரக்கூடிய விடயம் இல்லை ஆயினும் - மயூரன் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டான் என்பதை அவனுடன் கைதுசெய்யப்பட்ட 'பாலி 9' கைதிகளில் ஒருவனான டான் டக் என்பவன் தனது முகநூலில் பதிவுசெய்திருக்கிறான்.

டான் டக் தற்போது போதைப்பொருட்கடத்தல் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக இந்தோனேஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஜாவா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளான். இவனது வழக்கு முதன் முதலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து மேன் முறையீடு செய்தபோது, நீதிமன்றம் இவனது தண்டனை காலத்தை 20 வருட சிறைத்தண்டனையாக குறைத்தது. அதனையும் எதிர்த்து மீண்டும் மேன் முறையீடு செய்தபோது, புதிய தகவல்களையெல்லாம் தோண்டி எடுத்து அரச தரப்பு சட்டத்தரணிகள் ஆழமாக ஆப்பு இறுக்க, நீதிமன்றம் டான் டக்கிற்கும் மரண தண்டனை வழங்குவது எனத்தீர்ப்பளித்தது. இது அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாகிப்போக, சுமார் இரண்டு வருடங்கள் போராடி அடுத்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, நீதிமன்றம் மீண்டும் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்து. இனி எந்த ஆணியும் புடுங்கவேண்டம் என்ற முடிவோடு உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு, பத்து வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கிறான் டான் டக்.

அன்ட்ரூ ஷானைவிட மயூரனுடன் நெருங்கிய பழகிய டான் டக், மயூரனின் இழப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளான். இதுவரை தான் எவருக்கும் கூறாத விடயம் என்று மயூரனுடனாக தனது அனுபவத்தினை பின்வருமாறு பதிவு செய்திருக்கிறான்.

"பத்து வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி,  பாலியின் பிரபல்யமான சுற்றுலா நகர் கூட்டாவிலுள்ள ஜப்பானிய உணவகம் ஒன்றில் நானும் மயூவும் உணவருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, போதைப்பொருட்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணமான எமது குழுவின் நான்கு பேர் இந்தோனேஸிய விமானநிலையத்தில்வைத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் மயூவுக்கு கிடைத்துவிடுகிறது. அந்த சமயம், மயூ நினைத்திருந்தால், மிகவும் பாதுகாப்பாக இந்தோனேஷியாவை விட்டு உடனடியாகவே தப்பியிருக்கலாம். ஆனால், மயூ அதைப்பற்றி கிஞ்சித்தும் எண்ணாமல், ஹோட்டலில் உள்ள எமது குழுவின் மீதி இருவரையும் வேறு இடத்துக்கு மாற்றி, அவர்களை பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என்ற முடிவுடனேயே செயற்பட்டான். அந்த நேரத்தில், மயூவின் முடிவு எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தை அளித்தது.

"உணவகத்திலிருந்து உடனடியாகவே ஹோட்டலுக்கு விரைந்த மயூ, அங்கிருந்து எமது குழுவின் இரண்டுபேரையும் துரிதமாக அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்கு புறப்பட தயாராகுமாறு கூறினான். அதற்கிடையில், மோப்பநாய்களுடன் ஹோட்டலை சு10ழ்ந்துகொண்ட இந்தோனேஷிய காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு படையினரும் எமது இருப்பிடத்தை கண்டுபிடித்து எமது அறைகளுக்குள் பாய்ந்துவிட்டனர்" - என்று டன் டக் கூறியுள்ளான்.

பாலி 9 விவகாரத்தை முழுமையாக கையாண்ட இந்தோனேஷிய அதிகாரி நீதிமன்றுக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கையில் - ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆஸ்திரேலிய காவல்துறையிடமிருந்து எமக்கு கிடைத்த தகவலில் ஆஸ்திரேலிய பிரஜைகளின் இந்த போதைப்பொருட் கடத்தல் குறித்த எல்லா தகவல்களும் துல்லியமாக இருந்தபோதும், மயூரனின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தோனேஷிய காவல்துறை இந்த ஆஸதிரேலிய போதைக்கட்டத்தில் குழுவை எட்டு நாட்களாக கண்காணித்துக்கொண்டிருந்தபோதுகூட மயூரன் இந்த கூட்டத்தில் என்ன பங்கு வகிக்கிறான் என்று தெரிந்திருக்கவில்லை. நாம்கூட, அன்ட்ரூ ஷானின் மெய்ப்பாதுகாவலன்தான் மயூரன் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.

“ஏப்ரல் 17 ஆம் திகதி, கூட்டாவில் மேற்கொண்ட கைது நடவடிக்கையின்போது, இந்த இளைஞர்கள் தங்கியிருந்த அறையின்வெளியேதான் மயூரன் நின்றுகொண்டிருந்தான். காவல்துறையினர்தான் அவனை உள்ளே தள்ளிச்சென்று எல்லோரையும் கூட்டமாக கைது செய்துகொண்டு வந்தனர். அவ்வளவுக்கு மயூரனின் பங்கு இந்த கூட்டத்தில் மிகவும் இரகசியமானதாகவும் மர்மமாகவும் இருந்தது" - என்று கூறியிருந்தார்.

தனது சகாக்களை இந்த கைது படலத்தில் கைவிட்டுவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் செயற்பட்ட மயூரனுக்கு எதிராக பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் மற்றும் பலத்த சாட்சியங்கள் சட்டத்தின் பாதையில் அவனை பாரதூரமான முடிவுக்கு அழைத்து சென்றுவிட்டதாக கூறும் டான், தனது வாழ்நாளில் மயூவை என்றைக்கும் மறக்கமுடியாது என்று கூறியுள்ளான்.

கடந்த 29 ஆம் திகதி, மயூரன் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை சிறையிலுள்ள தொலைக்காட்சியில் தான் நேரடியாக பார்த்ததாகவும் மயூவுக்கு ஏற்பட்ட முடிவால் அந்தக்கணம் தான் அதிர்ச்சியில் உறைந்துதுபோனதாகவும் தெரிவித்துள்ளான்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக தனித்தீவுக்கு மாற்றப்பட்ட மயூரன் தனது கடைசி நாட்களில் எவ்வாறான ஒரு மர்மம் நிறைந்த வாழ்க்கையை கழித்தான் என்பதை, மயூரன் வெளியே எழுதிய கடிதம் ஒன்று தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.



அந்த கடிதத்தில் மயூரன் எழுதுகையில் -

“இந்தோனேஷிய சிறையிலிருந்து இங்கு நாங்கள் மாற்றப்பட்டநாள் முதல் எல்லாமே ஓருவித மனக்குழப்பம் நிறைந்த நேரங்களாகவே கழிகின்றன. வெளியுலகில் என்ன நடக்கிறது என்று எமக்கு எதுவும் தெரியவில்லை. முன்பிருந்த சிறை எவ்வளவோ பரவாயில்லை. இங்கு நாம் பயங்கரமாக தனித்துவிடப்பட்டிருக்கிறோம்.

"சிறைக்கட்டுப்பாடுகள் அதிகம். ஆனாலும், இங்குள்ள காவலாளிகள் பரவாயில்லை. இயன்றளவு எமக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். ஏனைய கைதிகளுடன் நாங்கள் பேசுவது குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்குள்ள மிகச்சிறிய தேவாலயத்துக்கு நாங்கள் வாரம் ஒருமுறை சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளோம். இங்கு 17 பேர்தான் கிறீஸ்துவர்கள்.

"வெகுவிரைவில் எமக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

"சித்திரம் கீறுவதை இங்கும் நான் கைவிடவில்லை. வரைவதற்கான பொருட்கள் வாங்கித்தருமாறு சிறை நிர்வாகத்தினரை கேட்டிருக்கிறேன். அதேவேளை, இருக்கும் பொருட்களை வைத்து வரைதல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். என்னுடன் ஒன்றாக இருந்து எனது வரைதலை ஊக்குவிப்பதற்கு இங்கு பெரிய அளவில் ஆட்கள் யாரும் இல்லை. இருந்தாலும் இங்குள்ள சிறைக்காவலாளி ஒருவர் தனது நண்பர் ஒருவரின் ஐந்து படங்களை வரைந்துதருமாறு கோரியுள்ளார். அந்தப்பணியில் நான் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.

“ஆம்ஸ்ரடாம் சித்திரக்கண்காட்சியில் எமது வரைபடங்கள் வரவேற்பை பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. லண்டன் கண்காட்சியில் என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை. நான் இல்லாமல் எனது படங்கள் அரங்கேறும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவதை எண்ணும்போது மிகுந்த பொறாமையாக இருக்கிறது. ஆனால், நான் இல்லாமல் எனது படைப்புக்கள் பேசுவதில் எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.

“நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த கடிதம் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நம்புகிறேன்”

- என்று குறிப்பிட்டுள்ளான்.

“பாலி 9” என்ற தொடர் பற்றி, அண்மையில் வெளிநாடொன்றிலிருந்து பேசிய தோழி ஒருவர் -

“போதைப்பொருள் கடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு பேருக்காக உலகமே ஆதரவளித்தது என்றால் இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும். அவ்வளவுதூரம், இந்த இரண்டு இளைஞர்களும் தங்கள் நன்நடத்தையின் மூலம் குற்றத்தின் பின்னரான மனமாற்றத்தின் மூலம் முழு உலகினதும் மனசாட்சியை புரட்டிப்போட்டுவிட்டனர். இவர்களது இந்த சாதனையின் முன்னால், எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக எழுதிவைத்த சட்டங்கள், நீதிவாசகங்கள் எல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. ஆனாலும், ஒரு ஆளும் அதிகார வர்க்கத்தின் முரட்டு பிடிவாதத்தினாலும் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்கள் ஆகிவிட்ட துரதிஷ்டத்தாலும் இந்த இளைஞர்களின் உயிர் இன்று பறிக்கப்பட்டிருக்கிறது” – என்றாள்.

"Capital punishment is as fundamentally wrong as a cure for crime as charity is wrong as a cure for poverty" - Henry Ford

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)

"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!

"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...