Thursday, April 30, 2015

"பாலி 9: பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!


எண்மரும் சுட்டுக்கொல்லப்பட்ட மரணதண்டனை திடல்

உலகின் வழமையான இயல்பு ஒழுங்கிலிருந்து வித்தியாசமாக நடைபெறும் சம்பவங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். அண்மையில் பாலியில் இடம்பெற்ற மரண தண்டனையும் அவ்வாறான ஒரு விடயமே ஆகும். தனிமையான மரணத்தீவொன்றில் நடைபெற்று முடிந்த - ஈரக்குலையை நடுங்கவைக்கும் - எட்டு மரணங்களினதும் அதிர்வுகள் நாளுக்கு நாள் ஊடகங்களில் மிரட்டிக்கொண்டேயிருக்கின்றன.

கடந்த 29 ஆம் திகதி இந்தோனேஷிய நேரம் 1225 மணியளவில் இடம்பெற்ற இந்த மரணங்களின் கடைசி மணித்துளிகளில் இடம்பெற்ற சம்பவங்களை இந்தோனேஷிய, ஆஸ்திரேலிய ஊடகங்கள் இன்னும் விட்ட பாடில்லை. அது இனியும் ஓயப்போவதாகவும் தெரியவில்லை.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை வழங்குவது என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்பது பேரும் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாலித்தீவிலிருந்து உயர் பாதுகாப்பு மிக்க தீவொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மரண தண்டனை நிறைவேற்றுவேற்றுவதற்கென பயன்படுத்தப்படும் தனிமையான இந்த தீவில் பல கொடூரமான கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் வெளியுலகுக்கான தொடர்புகள் இவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்றும் இந்தோனேஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மரண தீவுக்கு கொண்டுசெல்லப்பட்ட மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ ஷான் உட்பட்ட ஒன்பது பேரும் பேசி என்ற சிறையில் தனித்தனி தடுப்பு அறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையிலான தொடர்புகள்கூட மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த தீவுக்கு இடமாற்றப்பட்டதிலிருந்து இன்றைக்கோ நாளைக்கோ என்று இழுபட்டுவந்த இவர்களின் மரணதண்டனை ஊடகங்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மறுபுறத்தில், சம்பந்தப்பட்ட அரசுகள் தங்களது குடிமக்களை கொலை செய்யவேண்டாம் என்று மாறி மாறி கோரிக்கை விடுத்தவண்ணமே இருந்தன.


கடந்த ஏப்ரல் 17 அன்று பேசி சிறையில் மயூரன் - இறப்பதற்கு 12 நாட்களுக்கு முன்னர் - கொண்டாடிய கடைசி பிறந்ததினம்

இந்த மரண தீவுக்கு இவர்கள் இடமாற்றப்பட்டதிலிருந்து நடந்த  ஒரேயொரு நல்ல சம்பவம் என்றால், மயூரன் தனது 34 பிறந்ததினத்தை உயிரோடு இருக்கும்போதே கொண்டாடியதுதான். சாவின் நிழல் அவனை தொடர்ந்துகொண்டே வந்தபோதும், சகோதரன் சிந்துஜன் சிறைக்கு அனுப்பிய கேக்கினை வெட்டி தனது சிறை சகாக்களுடன் பிறந்தநானை கொண்டாடினான். அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இன்னும் 12 நாட்களில் இறக்கப்போகிறோமே என்ற சிறு அச்சம்கூட அவன் முகத்தில் தெரியவில்லை.

கடந்த 26 ஆம் திகதி, இந்தோனேஷிய அரசு ஒன்பது பேருக்குமான மரணதண்டனையை உறுதி செய்து 72 மணி நேர காலக்கெடு வழங்கியதுடன் இவர்களது வாழ்வின் எஞ்சியிருந்த மணித்துளிகளை உலகமே எண்ணத்தொடங்கியது. ஆனாலும், இவர்களுக்கு கடைசி நேர வாய்ப்பு ஏதாவது கிட்டதா என்று உள்ளுக்குள் தீராத அங்கலாய்ப்பும் இருந்தது.

இந்தவேளை, அன்ட்ரூ ஷான் தான் தான் காதலித்த இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்ய முடிவுசெய்தான். அன்ட்ரூ ஷானை அடிக்கடி சிறையில் சென்று பார்வையிட்ட பெபி என்ற இந்தப்பெண் காலப்போக்கில் காதல் வீழ இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயமாகியிருந்தனர். ஆனால், கடந்த 26 ஆம் திகதி பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். சாவை அணைக்கும் முன்னர் தன் காதலியை அணைத்துக்கொண்ட அன்ட்ரூ, சிறையில் சிம்பிளாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் அப்படி ஒரு சந்தோஷத்தில் திளைத்திருந்தான்.


பாதிரியாரின் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெற்ற அன்ட்ரூ - பெபி திருமணம்

நாட்கள் ஒன்றொன்றான நகர்ந்தன. ஓன்பது பேரும் சாவை நோக்கி ஒவ்வொரு மணித்துளியாக நகர்ந்தனர். இந்த உலகம் அவர்களையும் அவர்கள் இந்த உலகையும் பார்க்கும் நிமிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கின.

ஏப்ரல் 28 ஆம் திகதியும் வந்தது. அன்றிரவு 12 மணிக்கு ஒன்பது பேரையும் துப்பாக்கிகள் தின்ற பின்னர் இறுதிநிகழ்வுகள் செய்வதற்கான சவப்பெட்டிகள் மரண தண்டனை வழங்குமிடத்தை நோக்கி வாகனங்களில் பறந்தன.

கைதிகள் அனைவரும் தங்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்களை பார்வையிடுவதற்கான கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சோகமும் அழுகையும் பிரிவின் உச்சமும் நிறைந்த அந்த சந்திப்பை எந்த மொழியிலும் வர்ணித்துவிட முடியாது. “பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த உன் பிள்ளையை இழுத்துச்சென்று கட்டிவைத்து சுட்டுக்கொல்லப்போகிறார்கள். இதுதான் உன் கடைசி சந்திப்பு, சிரித்து பேசிவிட்டு போ” என்று கூறினால், எந்த கல்நெஞ்சக்காரிதான் பொறுத்துக்கொள்வாள். சட்டம், நீதி, தண்டனை, அரசியல் என்ற சமரசம் இல்லாத சொற்களுக்கெல்லாம் அப்பால், மனிதாபிமானம், பாசம், காதல் போன்ற ஆன்மாவுடன் பின்னிப்பிணைந்த உணர்வுகளை சாமாதானப்படுத்துவது என்பது எந்த நீதிபதியாலும் முடியாத காரியம். அதுதான் அன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருந்து. தமது கடைசி சந்திப்பில் மயூரன் உட்பட பலரும் தமது உறவுகளுடன் கே.எவ்.ஸி. சாப்பிட்டனர். சந்திப்புக்கான நேரம் முடிவடைந்த பின்னர், உறவுகள் கதற கதற கைதிகளை உள்ளே அழைத்து சென்றனர் காவல்துறையினர்.

இதி;ல் மிகக்கொடுமையான தண்;டனை கிடைத்தது பிறேசில் நாட்டை சேர்ந்த றொட்ரிக்கோ என்பவனுக்குத்தான். 42 வயதான றொட்ரிக்கோ கடந்த 2004 ஆம் ஆண்டு ஜகார்த்தா விமானநிலையத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவன். கைது செய்யப்பட்ட பின்னர் மிகக்கடுமையான உளவள சிக்கல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்த நோயின் பாரதூரம் குறித்து இந்தோனேஷிய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உத்தரவி;ன் பேரில் முதலாவது மருத்துவ சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது மருத்துவ சோதனைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் அவனுக்கு எதிரான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


மரணதண்டனை திடலுக்கு உளவள ஆலோசகராக சென்று கலந்துகொண்ட ஐரிஷ் கிறிஸ்தவ மதப்பெரியார் சார்லி பரோஸ்

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், சாவினை எதிர்கொள்வதற்கு இயன்றளது தெம்பினை - மத ரீதியான ஆலோசனைகள் மூலம் - வழங்குவதற்கு பாதிரியார் சார்வி பரோஸ் மரணத்தீவுக்கு சென்றிருந்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர் தெரிவித்துள்ள செவ்வியில் -

“மிக மோசமாக மனநிலை பாதிக்கப்பட்ட றொட்ரிக்கோவுக்கு அவன் கொலை செய்யப்படப்போகிறான் என்ற விடயம் கடைசி நிமிடம்வரை தெரிந்திருக்கவில்லை” – என்று கூறியுள்ளார்.

“சுமார் ஒன்றரை மணிநேரம் உளவள ஆலோசனை வழங்கி மரண தண்டனை விதிக்கப்படவிருந்த இடத்துக்கு கூட்டி செல்லும்போது, ‘என்னை கொல்லப்போகிறார்களா’ என்று றொட்ரிக்கோ கேட்டான். நானும் ‘ஆம்! நான் உனக்கு முதலே விளங்கப்படுத்தியிருந்தேன் அல்லவா’ என்று கூறினேன். அதற்கு அவன் ‘என்னை கொல்வதற்கு வெளியே சினேப்பருடன் யாரும் காத்திருக்கிறார்களா’ என்று கேட்டான். நான் ‘இல்லை’ என்றேன். ‘அப்படியானால், காரில் வைத்து என்னை சுடப்போகிறார்களா’ என்று றொட்ரிக்கோ கேட்டான். அதற்கு நான் ‘இல்லை’ என்றேன். அதன் பின்னர், ‘எனக்கு இப்போது 72 வயது. இன்னும் கொஞ்சக்காலத்தில் நானும் நீ போகவுள்ள சொர்க்கத்துக்கு வந்துவிடுவேன். நீ எனக்கு ஒரு வீடொன்றை கண்டுபிடித்து அதில் பூங்கா எல்லாம் தயார் செய்து வை. நான் வெகுவிரைவில் வந்துவிடுவேன்’ என்று நான் கூறினேன்.

றொட்ரிக்கோ மிகவும் மென்மையானவன். மெதுவாக பேசுபவன். மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த கடைசி நேரத்தில், மிகக்கடுமையான உளவளச்சிக்கலுக்கு உள்ளாகி சாவு என்ற சொல் கேட்டு குழப்பமடைய தொடங்கிவிட்டான். அதனால், அவனை சாந்தப்படுத்தி சிக்கலில்லாமல் சாவை சந்திக்க தயார்படுத்துவதற்காக, அவன் கம்பத்தில் கேபிளால் கட்டிவைக்கப்பட்டிருந்த நேரத்திலும் என்னை மீண்டும் பார்வையிட்டு பேச அனுமதித்தனர்.

அப்போது, ‘நான் முன்பொரு காலத்தில் ஒரு சிறிய தவறு செய்தேன். அதற்குப்போய் இப்படி என்னை கொல்லக்கூடாது. இது சரியில்லை’ என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே, சட்டமும் சன்னங்களும் தங்கள் கடமையை செவ்வனே செய்து உயிரற்ற அவனது உடலத்தையும் பெட்டிக்குள் கிடத்திவிட்டன.

மரணதண்டனை வழங்கப்பட்ட இடம் ஒன்பது பேருக்கும் முதலில் தயார் செய்யப்பட்டிருந்தது. காட்டின் நடுவில் வெளியாக்கப்பட்ட பிரதேசத்தில், அகன்ற கொட்டில் அமைக்கப்பட்டு நான்கு மீற்றர் இடைவெளியில் ஒன்பது கம்பங்கள் நாட்டப்பட்டன. இந்த கம்பங்களை சிலுவை வடிவில் அமைக்கப்பட்டு, தனித்தனி தடுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் அங்கு கொண்டுவரப்பட்டு கம்பங்களில் கேபிளால் கட்டப்பட்டனர். துப்பாக்கி பிரயோகத்துக்கு அஞ்சுபவர்கள் முதலிலேயே கூறினால் அவர்களின் முகத்தை கறுப்பு துணியால் மூடிவிடுவதற்கான வாய்ப்பு கைதிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஒருவரும் அதற்கு உடன்படவில்லை. உயிர்வாழும் கடைசிக்கணம் வரை இந்த உலகை பார்த்துக்கொண்டே சாகவேண்டும் என்று அனைவரும் கூறிவிட்டனர்.


மனநிலை பாதிக்கப்பட்டவனாக உயிரிழந்த பிரேஸிலை சேர்ந்த றொட்ரிக்கோ

மரணவீடுகளில் சாவினை தழுவிக்கொண்டவர்கள் சொர்க்கத்துக்கு சுகமாக போய் சேரவேண்டும் என்ற பிரார்த்தனைக்காக பாடப்படும் கிறீஸ்தவ பாடலை பாடிக்கொண்டே கைதிகள் அனைவரும் மரணதண்டனை திடலுக்கு வந்தனர். அனைவரிலும் மயூரனும் அன்ட்ரூவும்தான் அந்த பாடலை உரத்துப்பாடிக்கொண்டு வந்ததாக மதப்பெரியார் கூறியுள்ளார்.

மரண தண்டனை வழங்கப்படுவதற்கு சரியாக ஒரு மணிநேரத்திற்கு முன்னர், தண்டனை நிறைவேற்றப்படவிருந்த பிலிப்பீன்ஸை சேர்ந்த பெண்ணின் மரணதண்டனையை பிற்போடுவதாக சட்ட மா அதிபர் அறிவித்ததை அடுத்து மீதி எட்டுப்பேர் மாத்திரமே திடலுக்கு அழைத்துவரப்பட்டனர்.

1225 மணிக்கு மரணதண்டனை திடலுக்கு அழைத்து வந்து கம்பங்களுடன் கட்டப்பட்ட கைதிகள் அனைவரின் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு சகல ஆயத்தங்களும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கைதியும் கடைசியாக மூச்சிழுத்து தம்மை முயன்றளவு அமைதிகொள்ள மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டது.

1235 மணிக்கு படபடவென வெடித்த எம்.16. துப்பாக்கி சன்னங்கள் எட்டுப்பேரினதும் நெஞ்சுகளை துளைத்தன. ஏதையும் துணிச்சலுடன் செய்தால் வெற்றியே. அதில் எல்லாமே அடங்கும் என்று ஆயிரம் ஆயிரம் உயிர்களை கொல்லும் போதைப்பொருளை துச்சமென சுமந்த அந்த மேனிகள் சுருண்டு வீழந்தன.

0102 மணிக்கு எட்டு உடலங்களையும் சோதனை செய்த மருத்துவர், எட்டுப்பேரும் உயிரிழந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்தார். இந்த மரண தண்டனை தீவிலிருந்து மிக அருகிலுள்ள தீவில் நின்றுகொண்டிருந்த கைதிகளின் உறவுகளுக்கு இந்த துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டதாக பின்னொரு தகவல் தெரிவித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து போல, எல்லாமே நடந்து முடிந்தது.


கைதிகள் கட்டிவைத்து சுடப்பட்ட சிலுவைக்கம்பம்

உடலங்களை கழுவி தூய்மைப்படுத்திய பின்னர், ஏற்கனவே தயார்நிலையிலிருந்த சவப்பெட்டிகளில் எண் வரிசைப்படி அவை வைக்கப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தோனேஷியர் ஒருவரின் சடலம் அந்த தீவுக்கு அருகாமையிலிருந்த தீவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய, நைஜீரிய, பிரேஸில் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுபேரினதும் உடலங்கள் பத்து மணிநேர பயணம் மூலம் தரைவழியாக தலைநகர் ஜகார்த்தாவுக்கு கொண்டுவரப்பட்டு, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)

பாலி - 9 ; பாகம் - 1: பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

Tuesday, April 28, 2015

பாலி - 9 ; பாகம் - 1: பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


இந்தோனேஷியா தான் நினைத்தது போலவே காரியத்தை நிறைவேற்றிவிட்டது.

ஆம்! போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்த எட்டுப்பேரின் உயிர்களை காவுகொண்டு தனது நாட்டின் "நீதியை" நிலைநாட்டியிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு தண்டனையா என்று உலகமே உறைந்துபோயிருக்கிறது.

"பாலி 9" எனப்படும் விஸ்தீருணம் மிக்க இந்த வழக்கு, குற்றச்சாட்டு, அதில் நடந்த இழுபறிகள் போன்ற பல விடயங்களை "பாலி 9" என்ற இந்த பத்தி தொடரச்சியாக பேசவிருக்கிறது. அதன் முதல் அங்கமாக இன்று இடம்பெற்ற மரணதண்டனையிலிருந்து ஆரம்பிப்போம்.

மயூரன் சுகுமாரன் - அன்ட்ரூ ஷான்.

கடந்த இரண்டு மாதங்களாகவே உலகின் அனைத்து ஊடகங்களையும் ஆழமாக ஆக்கிரமித்துக்கொண்ட பெயர்கள். கடந்த மூன்று நாட்களாக சமூகவலைத்தளங்களில் பிரதான பேசுபொருளாகிவிட்ட பிரபலங்கள். இவ்வளவுக்கும் இவர்கள் யார் என்று கேட்டால், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகள். ஆனால், இரண்டு குற்றவாளிகளுக்காக உலகமே அணி திரண்டு அவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கக்கோரி குரல் கொடுப்பது உண்மையிலேயே விந்தையிலும் விந்தை. இந்த பொதுஉளவியலுக்கு அப்பால், இவர்கள் செய்தது என்ன? ஏன் இவர்கள் இந்த நிலைக்கு ஆளானார்கள்?


2005 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், சிட்னியில் 21 ஆவது பிறந்ததின நிகழ்வொன்று நடைபெறுகிறது. இதற்கு பிறிஸ்பன் மாநிலத்திலிந்து வந்த இளைஞர்கள் குழு ஒன்று வந்து கலந்துகொண்டு சிட்னி இளைஞர்கள் சிலரை சந்தித்து இரகசிய திட்டம் ஒன்று பற்றி கலந்துரையாடுகிறது. இந்த பிறந்ததின நிகழ்வு முடிந்து ஆளாளாளுக்கு வீடு சென்ற பின்னர், மீண்டும் இந்த இளைஞர்களின் இரகசிய ஏஜென்டுகளின் மினி சந்திப்பு ஒன்று சிட்னியில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் பிரகாரம், சிட்னியிலிருந்தும் பிறிஸ்பனிலிருந்தும் தனித்தனியாக இரண்டு குழுவினர் இந்தோனேஷியாவின் சுற்றுலாத்தலைநகரமான பாலிக்கு செல்கின்றனர். அங்கு ஏற்கனவே சென்றிருந்த மயூரன் சுகுமாரனும் அன்ட்ரூ ஷானும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஏழு பேரையும் வரவேற்று ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கின்றனர். தனிதனி சிம் அட்டைகளை கொடுத்து தம்மோடு தொடர்பிலிருக்குமாறும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் தெரியப்படுத்துவதாகும் மயூரனும் ஷானும் கூறுகிறார்கள்.

போனவர்களில் சிலர், தாங்கள் செய்யப்போகும் திருக்கூத்தை எண்ணி மிகுந்த பரபரப்புடன் ஹோட்டலுக்குள்ளேயே கிடக்க, இன்னொரு கூட்டம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பாலி கடற்கரைகளில் ஒய்யாரமாக களியாட்டங்களில் திளைத்திருந்திருக்கிறது.

திட்டத்தை நிறைவேற்றும் நாள் வந்தது. நடந்தது என்ன என்பதை "அலைபாயுதே" படம் போல பின்னோக்கி சென்றுதான் பார்க்கவேண்டும். ஏனெனில், பிடிபட்ட ஒவ்வொருவரும் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அனைத்தையும் ஒன்றசேர்த்து இந்தோனேஷிய நீதித்துறை கூறும் கதை இதுதான்.

அதாவது -

கிட்டத்தட்ட 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவிலிருந்து பாலிக்கு சென்று தொடர்ச்சியாக போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திவந்து கொண்டிருந்த மயூரன் சுகுமாரன் உட்பட ஒரு குழுவினரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கையும் களவுமாக பிடிப்பதற்கு நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய காவல்துறையின் நெடுநாள் கண்காணிப்பின் பயனாக, இந்த ஒன்பது பேரும் பாலியிலிருந்து பெருமளவில் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டிடுவரவிருந்த திட்டம் - அனைத்து விவரங்களுடனும் - புலனாய்வுத்தகவல்கள் மூலம் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

இதன்பிரகாரம், இந்த ஒட்டுமொத்தக்குழுவினரையும் கூட்டத்தின் தலைவர்களுடன் சேர்த்து அமுக்குவதற்கு முடிவெடுத்த ஆஸ்திரேலிய காவல்துறையினர், இந்தோனேஷிய காவல்துறையினரை தொடர்புகொண்டனர். மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தகவல்பரிமாற்றத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து பாலிக்கு வந்துள்ள ஒன்பது பேரினது பெயர் விவரம், அவர்களது கடவுச்சீட்டு விவரம், அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் விவரம், அவர்கள் கொண்டுவரவிருந்து போதைப்பொருள் மற்றும் அவர்கள் எவ்வாறு மறைத்து கொண்டுவரப்போகிறார்கள் என்பது உட்பட அனைத்தையும் இந்தோனேஷிய காவல்துறையிடம் அள்ளிக்கொடுத்தது.

தனது நாட்டில் புரையோடிப்போயுள்ள போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை ஒழிப்பதற்கு இதில் பிடிபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்குமளவுக்கு சட்டத்தை நெருக்கிவைத்திருக்கும் இந்தோனேஷியாவுக்கு ஆஸ்திரேலிய காவல்துறை கொடுத்த தகவல்கள், பொரிகடலை போலானது. தனது பங்குக்கு இந்த ஒன்பது பேரையும் தானும் வேவு பார்த்து சட்டத்தின் எந்த ஓட்டைக்குள்ளாலும் தப்பமுடியாதளவுக்கு அப்படியே அமுக்குவதற்கு திட்டங்களை தயாரித்துவிட்டு, தயாராகவிருந்தது.

2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி...

இந்தோனேஷியாவின் விமான நிலையம் ஒன்றின் ஊடாக ஆஸ்திரேலியா புறப்படவிருந்த - பாலி9 குழுவில் - நால்வரை உடம்பில் மறைத்துவைத்திருந்த போதைப்பொருள் பொட்டலங்களுடன் இந்தோனேஷிய காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதேநாள், இவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் பாய்ந்த இந்தோனேஷியாவில் காவல்துறையினர் அங்கிருந்த மயூரனுடன் மேலும் மூவரையும் போதைப்பொருள் பொட்டலங்கள் மற்றும் அவற்றை உடம்பில் ஒட்டும் கருவிகள் என்பவற்றுடன் கையும் களவுமாக கைது செய்கின்றனர். அன்றைய தினம் மாலை, தனியாக ஆஸ்திரேலியா புறப்படவிருந்த அன்ட்ரூ ஷான் விமானநிலையத்தில் வைத்து பல கைத்தொலைபேசிகளுடன் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுகிறார்.



நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் நடந்து முடித்த இந்த நடவடிக்கை, ஆஸ்திரேலிய காவல்துறையினரின் "புண்ணியத்தில்" இந்தோனேஷிய காவல்துறையினர் அரங்கேற்றிய திருவிழா. ஊடகங்கள் எல்லாம் செய்தியை கேள்விப்பட்டவுடன் உச்ச ஸ்தாயியில் கதற தொடங்கின. ஆஸ்திரேலியர்களின் மானத்தை நார் நாரக கிழித்து உலக ஊடகங்கள் எல்லாம் தோரணம் கட்டி தொங்கவிட்டன. "இந்த விஷயம் ஆஸ்திரேலிய காவல்துறைக்கு முதலே தெரிந்திருந்தால், அவர்கள் ஆஸ்திரேலியாவில் இறங்க விட்டு கைது செய்திருக்கலாமே, போயும் போயும் இந்தோனேஷிய காவல்துறையின் கைகளில் ஏன் பிடித்துக்கொடுத்தார்கள். போதைப்பொருள் கடத்தலுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று தெரிந்தும் ஆஸ்திரேலியா ஏன் இப்படி மொக்குத்தனமாக நடந்து கொண்டது" என்றெல்லம் ஆய்வு வாய்வு என்று ஊர்கூடி ஒப்பாரி வைத்தது.

இந்தோனேஷிய அரசு விசாரணைகளை ஆரம்பித்தது. ஒன்பது பேரையம் தனித்தனியாக உருவ ஆரம்பித்தது. பிடிபட்ட கலக்கத்தில், ஆளாளுக்கு தான் தப்பவேண்டும் என்ற ஆதங்கத்தில் நடந்தது ஏல்லாவற்றையும் உளறிக்கொட்டினர். இதிலிருந்து நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்தது.

அதாவது, அன்ட்ரூ ஹானும் மயூரன் சுகுமாரனும்தான் இந்தக்கூட்டத்தின் தலைவர்கள். விமான நிலையத்தில் பிடிபட்ட நால்வருக்கும் ஹோட்டலில் வைத்து அவர்களின் உடம்பில் போதைப்பொருள் பொட்டலங்களை கட்டி ஒளித்து வைத்து அனுப்பியது மயூரன் சுகுமாரன். இந்தோனேஷியா நடவடிக்கையை கச்சிதாமாக கையாளுவதற்கு மயூரனும் இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா வந்தடைந்தவுடன் அங்கு மீதி விஷயங்களை டீல் பண்ணுவதற்கான வியூகங்களை வகுப்பதற்கு பொறுப்பாக அன்ட்ரூ ஹானும் இருந்தார்கள் என்ற உண்மை தெரியவந்தது. மீதிப்பேர், இதில் குருவிகளாக செயற்பட்டாலும் அவர்கள் ஒன்றும் தெரியாத குழந்தைகள் இல்லை. விளைவுகளின் விபரீதங்கள் எல்லாம் தெரிந்துதான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் நீதிமன்றுக்கு தெரியவந்தது.

பிடிபட்ட ஒவ்வொருவரும், தனித்தனியே சட்டத்தரணிகளை வைத்து தமக்கு எதிரான வழக்கை எதிர்த்து வாதாடினர். தோல்வி. மேன் முறையீடு செய்தனர். தோல்வி. என்னென்ன சாதகமான சட்ட வழிகள் உள்ளனவோ  வற்றையும் தோண்டி பார்த்தனர். தோல்வி. வருடக்கணக்கில் இந்த இழுபறி நடந்தது. இவர்களில் ஒருவருக்கு மட்டும் 21 வருட சிறையும் ஆற பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் வழங்க்கப்பட்டது. மயூரனுக்கும் ஷானுக்கும் மரண தண்டனை வழங்குவது என்று அறிவிக்கப்பட்டது.

இதில் தொடங்கியது பரபரப்பு. இந்த தண்டனைக்கு எதிராக போடாத மேன்முறையீடுகள் இல்லை. போராடாத வழக்கறிஞர்கள் இல்லை. எல்லாமே தோல்வியில் முடிய, ஈற்றில் மரண தண்டனைதான் இருவருக்கும் வழங்குவது என்று முடிவானது. ஆஸ்திரேலியாவின் நான்கு முன்னாள் பிரதமர்கள் உட்பட தற்போதைய அரசும் இந்தோனேஷிய அரசிடம் காலில் விழாத குறையாக மன்றாடியது. அவர்களை விடுதலை செய்யவெல்லாம் நாங்கள் கோரவில்லை. பத்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இரண்டு இளைஞர்களும் எவ்வளவோ நல்வழிப்படுத்தப்பட்டுவிட்டார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது நியாயமில்லை. தண்டனை என்பது ஒரு மனிதனை நல்நெறிப்படுத்துவதாக இருக்கவேண்டும். அந்த வகையில், இந்த இரு இளைஞர்களும் தங்கள் தவறுகளை நன்றாகவே உணர்ந்துவிட்டார்கள். இந்த நிலையில், இவர்களை தண்டனை என்ற பெயரில் கொலை செய்வதால், சட்டமும் நீதியும் எதையும் சாதித்துவிடப்போவதில்லை" என்று இறைஞ்சினார்கள்.

இதற்கு பிறகு எனன நடந்தது என்பதற்கு அப்பால், படுகொலை செய்யப்பட்ட மயூரன் பற்றி சிறு தகவல் குறிப்பை பார்ப்போம்.


இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட மயூரனின் பெற்றோர் எழுபதுகளின் இறுதியில் லண்டனுக்கு குடியெர்ந்து செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு முதலாவது குழந்தையாக மயூரன் பிறக்கிறான். 1985 ஆம் ஆண்டளவில், லண்டனிலிந்து சிட்னிக்கு நிரந்தரமாக வரும் மயூரனின் பெற்றோர், மயூரனை சிட்னி ஹோம் புஷ் பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்பித்தனர்.. மயூரனுக்கு கராட்டி உட்பட பிற கலைகளில் நாட்டம் இருந்தாலும், சித்திரம் வரைவதில்தான் மிகவும் அலாதியான பிரியம் காணப்பட்டது. 2005 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நாள் முதல் சிறையில் வரைந்த மயூரனின் ஓவியங்கள் அவனது திறமைகளை பிரதிபலிப்பவை ஆகும். அண்மையில் - கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் - ஆஸ்திரேலியாவின் பேர்த் மாநில கேர்ட்டின் பல்கலைக்கழகத்தில் தபால் மூல பட்டப்படிப்பை முடித்திருந்தான்.

சிறுவயதிலிருந்தே பெற்றோரைவிட தனது அம்மம்மாவிடம் செல்லமாக வளர்ந்தவன் மயூரன். ஆனால், இன்று எவருக்கும் பதிலளிக்க முடியாத சடலமாக பெட்டிக்குள் தூங்குகிறான் .

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)

(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

Monday, April 27, 2015

சிவராம்: ஊடக ஆளுமையின் ஒப்பற்ற உறைவிடம்


2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி..பிற்பகல் 3 மணியிருக்கும்..
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் உடலம் நெல்லியடி மாயானத்தில் தீயிலே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்த உற்றார், உறவினர், நண்பர்கள், தமிழ் தேசிய செயற்பட்டாளர்கள், பத்திரிகை நண்பர்கள் என அனைவரும் வெறித்த பார்வையுடன் மனமெங்கும் வெறுமை நிறைந்தவர்களாக அந்த மயானத்தின் சுற்றாடலில் நின்றுகொண்டிருந்தார்கள்.
மயானத்தின் மூலையிலிருந்த வேப்பமரத்திற்கு கீழே என்னுடன் கொழும்பிலிருந்து கிளிநொச்சியூடாக வந்த பத்திரிகை நண்பர்களும் லண்டனிலிருந்து வந்த அனஸ் அண்ணாவும் மட்டக்களப்பிலிருந்து நடேசன் அண்ணாவின் உடலத்தோடு வந்திருந்த ஊடகவியலாளர்கள் சண். தவராசா மற்றும் துரைரட்ண ஆகியோரும் நின்றுகொண்டிருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத மௌனம். "அடுத்தது யாரோ" என்று மனதுக்குள் மரண ஓலமிடும் கிழக்கின் தொடர்கொலைகளின் ஒப்பாரிகள் மண்டைக்குள் தனி அலைவரிசையில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நேரம்.
"சண்ணும் துரையும் இனிக்கொஞ்சம் யோசிக்க வேணும் திரும்பி அங்க போறத பற்றி. அவன் போற போக்க பாத்தா ஒண்டொண்டா போட்டுத்தள்ளப்போறான் போல கிடக்கு. உதயகுமாருக்கும் பாதுகாப்பு இல்ல. எல்லாரையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வாறதுதான் புத்திசாலித்தனம்" என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் தளதளத்த குரலில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மெதுவான குரலில் ஆலோசனை கூறினர். சண் அண்ணையும் துரையண்ணையும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு எதுவமே பேச முடியாதவர்களாக கனத்த நெஞ்சத்துடன் நின்றுகொண்டிருந்தனர். "குடும்பத்த கூட்டிக்கொண்டு வாறதுக்காவது போகவேணுமடா" என்று சண் அண்ணை சொல்ல, என்ன செய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாதவர்களாக - கொஞ்சம் கொஞ்சமாக - அங்கிருந்து கிளம்புகிறோம்.
நடேசன் அண்ணையின் இழப்பு எமக்கெல்லாம் பாரிய இடியாக விழுந்திருந்தாலும் அடுத்தது யாரை கருணா குழு போட்டத்தள்ளப்போகிறார்கள் என்று எண்ணிப்பார்க்கையில் அப்போதைக்கு மனதுக்கு நிம்மதி தந்த ஒரே விடயம், அந்த நேரம் சிவராம் அண்ணா வெளிநாட்டு பயணம் ஒன்றுக்கு சென்றிருந்ததாகும். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த நாள் முதல் அடுக்கடுக்காக ஒவ்வொரு நாளும் கிழக்கில் மூலைக்கு மூலை துப்பாக்கி சன்னங்கள் சல்லடை போட்ட சடலங்கள் வீசிக்கிடந்தாலும் ஊடகவியலாளர்களின் தலைகளின் மீது இவ்வளவு சர்வ சாதரணமாக துப்பாக்கி குண்டை இறக்குவார்கள் என்று எவரும் நம்பவில்லை. ஏனெனில், கிழக்கு ஊடகவியாளர்கள் பலரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா இயங்கிய காலத்தில், கருணாவுடன் மிக நெருக்கமாக அந்நியோன்யமாக பழகியவர்கள்.
ஆனால், நடேசன் அண்ணையின் படுகொலையுடன் சிவராம் அண்ணனின் மீதுதான் அனைவரின் கவனமும் திரும்பியது. வெளிநாட்டில் இருந்த சிவராம் அண்ணைக்கு எத்தனையோ தொலைபேசி அழைப்புக்கள். அவரது தமிழ் நண்பர்கள் மாத்திரமல்ல. கொழும்பிலிருந்த அவரது சிங்கள நண்பர்கள், பத்திரிகை சகாக்கள் என பலர் சிவராம் அண்ணாவை தொடர்புகொண்டு, "தயவுசெய்து இங்கே திரும்பி வரவேண்டாம். நிலமை படுமோசமாக உள்ளது. நடேசன் அண்ணையை போட்டுத்தள்ளினவங்களுக்கு உங்கள போடுறதுக்கு கன நேரமாகாது. பார்த்து, நிதானமாக கொஞ்சம் தணிஞ்சா பிறகு வாறதுதான் நல்லம்" என்று கெஞ்சாத குறையாக விண்ணப்பம் போட்டனர்.
ஆனால், சிவராம் அண்ணையோ அவருக்கே உரித்தான சிங்கக்குரலில் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, அங்கிருந்தே வீடியோ வடிவில் ஊடகமொன்றுக்கு செவ்வியளித்தார். அதாவது "என்னையோ நடேசனையோ போட்டுத்தள்ளுவதன் மூலம் மட்டக்களப்பு மக்களுக்காக போராடப்புறப்பட்டுவிட்டதாக கூறி புலிகள் அமைப்புடன் முரண்பட்டுக்கொண்ட கருணா எதையும் சாதிக்கப்போவதில்லை" என்று முகத்திலடித்தாற்போல கூறினார். அது மட்டுமல்ல. அடுத்த வாரமே கொழும்பில் வந்திறங்கினார்.
எனக்கு இன்றும் அந்த நாள் பசுமரத்தாணி போல நெஞ்சில் நிற்கிறது. வீரகேசரியின் ஆசிரியர்பீடத்திலிருந்து விளம்பர பிரிவின் ஊடாக வெளியே வந்த நான், பிரதான வாயிலின் ஊடாக உள்ளே வந்த சிவராம் அண்ணையை பார்த்து அப்படியே உறைந்துபோய்நின்றேன். எக்காள சிரிப்புடன் "என்ன நான் வரமாட்டன். இனி கட்டுரை எழுதுற வேலையில்லை எண்டு நினைச்சீராக்கும். இண்டைக்கு இரவுக்கு வெடி இருக்கு பாரும்" என்று சொல்லிட்டு உள்ளே வந்தார். எனக்கு மட்டுமல்ல அலுவலகத்தில் அவரை பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.
அன்று இரவு, தலையங்கம் போடச்சொன்ன கட்டுரையின் பெயரே, "நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி" அவர் சொல்ல சொல்ல நான் எழுதிய அன்றைய கட்டுரையும் அடுத்தவாரம் எழுதிய "கருணா ஓடியது எதற்காக" என்ற கட்டுரையும் கிட்டத்தட்ட - என்னைப்பொறுத்தவரை - அவரது ஆயுளை தீர்மானித்துவிட்டன. தனது உற்ற நண்பன் நடேசனை இழந்த வேதனையும் அவர் உயிருக்கு உயிராக நேசித்த கிழக்கு மண் மீதான கொலைப்படலமும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே அவரைக்கொண்டு சென்றிருந்தாலும் மிக நிதானமாக பொறுப்பான சொற் பிரயோகங்களினால் கருணாவின் நடவடிக்கைகளை தனது கனதியான கட்டுரையின் மூலம் தீர்த்துக்கட்டினார். அது மட்டுமல்லாமல், கருணாவின் முட்டாள்தனத்தையும் முரட்டுப்போக்கையும் மக்களுக்கு தோலுரித்துக்காட்டினார். இவையெல்லாம், சிவராம் அண்ணையை பகையாளியாக பார்த்த கொலையாளிகளுக்கு மேலும் மேலும் இரத்தத்தை சூடேற்றியிருக்கும். உண்மையின் பக்கமிருந்து கிழக்கு மக்களுக்கு தெளிவேற்படமுனைந்த சிவராம் அண்ணையின் எழுத்துக்கள் நிச்சயம் அவர்களின் குறிக்கோளுக்கு குழிதோண்டியிருக்கும்.
கடைசியில் முடிவு என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தேசியத்தின் மீது தீராத பற்றுறுதியையும் தமிழனுக்கே உரித்தான வீரத்தையும் கொள்கைகளாக கொண்டவர்கள் எல்லோரையும் மரணம்தான் அதிகம் காதலித்திருக்கிறது. இதில் சிவராம் அண்ணையும் விதிவிலக்கில்லாத கொள்கைவாதியாக இணைந்துகொண்டுவிட்டார்.
இன்று , 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி. சிவராம் அண்ணா கடத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நள்ளிரவு 12.30 மணிக்கும் பின்னர்தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சடலத்தை சோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். சுடப்பயன்படுத்திய துப்பாக்கி முதல்கொண்டு எப்போது சுட்டிருக்கலாம் என்ற நேரம் வரை கண்டுபிடித்தாயிற்று. ஆனால், நாட்டின் உயர்ந்த நீதிபரிபாலன அவையாக கருதப்படும் நாடாளுமன்ற கட்டடத்துக்கு 500 மீற்றர் தொலைவில் இழுத்துவந்து சுட்டுக்கொன்றுவிட்டு சென்ற கொலையாளியை மட்டும் பத்து வருடங்களாக சிறிலங்கா காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியவே இல்லை.
ஆனால், ரணிலின் ஆட்சியில் சிங்களத்தால் தத்தெடுக்கப்பட்ட கருணா மகிந்தவின் மடியிலும் தவண்டு விளையாடி இன்று மறுபடியும் ரணில் - மைத்திரி அரசின் அரவணைப்பிலும் சமத்தாக இருக்கிறார். மட்டக்களப்பு மக்களுக்காக புலிகளுடன் போரிட்டு அதிலிருந்து புறப்பட்டுவந்தவர், கொழும்பிலிருந்துகொண்டு சிங்களத்தில் பாடுகிறார். ஜனநாயகமெல்லாம் பேசுகிறார்.
மாலையின் நடுவிலிருந்த படத்திலுள்ள சிவராம் அண்ணனின் முகத்தில் படர்ந்துள்ள அந்த சிரிப்புக்கு எந்த அர்த்தத்தை பொருத்திப்பார்த்தாலும் சரியாகத்தானிருக்கிறது.

(இந்தக்கட்டுரை  "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்)

Tuesday, April 14, 2015

பூங்கதவு தாழ் திறந்து இன்றுடன் 35 வருடங்கள்!



"பூங்கதவே தாழ் திறவாய்"

என் வாழ்நாள் முழுவதும் - மறக்க முடியாத - மனதில் ஆழப்பதிந்துவிட்ட -  உன்னதமான காதல் கீதம். அப்படியொரு பாடல். சிறுவயதிலிருந்தே இந்த பாடலுக்கு நான் அடிமை. "1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி  எனது வாழ்நாளில் பொன்னாள். பூங்கதவே பாடல் இசைஞானியால் ஒலிப்பதிவாகிய நாள். இன்றுடன் 35 வருடங்களாகின்றன" என்று இந்த பாடலுக்கு தனது குரலால் உயிர்கொடுத்த தீபன் சக்கரவர்த்தி இன்று முகப்புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறார். இதைப்படித்தவுடன் இந்த பாடலின் மீதான எனது காதல் வானில் ரெக்கை கட்டிப்பறந்தது.

திருச்சிராப்பள்ளி வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல் வரிசை ஒரு காலத்தில் எனக்கு மனப்பாடம். இந்த ஒலிபரப்பாளர்கள் ஒன்றுக்கு பின் ஒன்று சேர்ந்த set பாடல்களாக வைத்திருப்பார்கள். அவ்வப்போது திரையிசைப்பாடல்கள் ஒலிபரப்பாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அப்படியே எடுத்து அடித்துவிடுவார்கள். அந்த வகையில், "சின்னப்புறா ஒன்று வண்ணா கனாவினில்" பாடல் ஒலிபரப்பானால், அடுத்த பாடல்  "பூங்கதவே தாழ் திறவாய்" வரப்போகிறது என்று அர்த்தம். வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும், "சின்னப்புறா" பாடல் வானொலியில் ஒலிபரப்பானால், பறந்தடித்து வந்து வானொலிக்கு அருகில் குந்திவிடுவேன். காரணம், அந்த மந்தகாசக்குரலில் தீபன் சக்கரவர்த்தியும் உமா ரமணனும் தரப்போகும் இசைத்தேனை பருகுவதற்கே ஆகும்.

சிறுவயதில் வயதில் சங்கீதம் கற்க சென்றபோது நவாலி சந்திரிக்கா டீச்சரிடம் படித்த "சிறி கணநாதா சிந்தூர வர்ண" என்ற மாயாமாளவகொளை ராகத்தில் அமைந்த கீர்த்தனையும் அதே ராகத்தில் இந்த பாடலும் அமைந்த காரணமோ அல்லது இளையராஜா அலாதியாக எல்லா பாரம்பரிய இசைக்கருவிகளையும் பாடல் முழுவதும் பரவ விட்டிருக்கும் காரணமோ அல்லது வித்தியாசமான குரல்களோ அல்லது மெட்டோ எதுவொன்று தெரியாமல் இந்த பாடலில் நான்  ஆழமாக தொலைந்திருப்பதுதான் இன்றுவரைக்கும் எனக்கு புரியாத புதிர். சில பாடல்கள் சில நேரங்களில் கேட்கும்போது மனதுக்குள் பிரத்தியேக பூரிப்பும் பரவசமும் ஏற்படும். அந்தவகையில், மாயாமாளவகொளை ராகம் காலையில் பாடுவதற்கு உகந்த ராகம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்த பாடல் வடிவமைக்கப்பட்ட விதமோ என்னவோ தெரியவில்லை. எனக்கு எப்போது கேட்டாலும் சுகம்தான்.

பாடலின் ஆரம்பத்தில் இளையராஜா அநியாயத்துக்கு arrangement செய்திருக்கும் strings section, அதன் மேல் ஆரோகணித்துக்குகொண்டுவரும் வயலின், அது அவ்வளவும் பாடல் அல்ல. பாடம். அதை வாசிக்கப்பழகிக்கொண்டால், இப்போது வெளியாகும் ஒரு 50 புதிய பாடல்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று சொல்வேன். அப்படியொரு இசைக்கோர்வை. அதில் ஒரு நளினம். ஸ்வரங்கள் ராட்சத ராட்டினம் ஆடும் இசைக்களம். அதன் பின்னர், interlude இல் வரும் வீணை, தாலிகட்டும்போது வாசிக்கப்படும் கெட்டிமேளத்தை பாடலில் சரியாக place பண்ணியிருக்கும் கெட்டித்தனம். எல்லாமே இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் காலத்தால் அழிக்கமுடியாத இசைச்சிற்பங்கள்.


இந்த பாடலில் இன்னொரு சிறப்பம்ஸம் என்னென்றால், இந்த ராகத்தில் இளையராஜாவே எத்தனையோ அற்புதமான பாடல்களை இதற்கு முன்னரும் பின்னரும் இசைச்சுகம் சொட்ட சொட்ட அள்ளித்தந்திருக்கிறார். உதாரணமாக, 'குங்குமம்" படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை" பாடலுக்குப்பின்னர் டி.எம்.எஸ். - ஜானகி டூயட்டுக்கு பெயர்போன பாடல் 'அந்தப்புரத்தில் ஒரு மகாராணி". 'தீபம்" படத்தில் இளையராஜா western-eastern என இரு இசைகளையும் மாயாமாளவகொளை ராகத்தில் போட்டு ரகளை பண்ணியிருக்கும் பாடல். இந்த பாடலுக்கு வாத்தியங்கள் வாசித்த பல கலைஞர்கள் இசையமைப்பின்போது பயங்கரமாக திணறிப்போனார்கள் என்று எங்கோ ஒரு புத்தகத்தில் வாசித்த ஞாபகம். அதேபோல், "எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்தில் 'மதுர மரிக்கொழுந்து வாசம்" பாடல் 'காதல் பரிசு" படத்தில் 'காதல் மகாராணி" பாடல் "கோபுர வாசலிலே" பாடத்தில் "காதல் கவிதைகள்" பாடல், 'அம்மன் கோவில் கிழக்காலே" படத்தில் "பூவ எடுத்து வச்சு" பாடல், "சந்த்ரலேகா" படத்தில் "அல்லா உன் ஆணைப்படி" என்று ராஜா செய்த மாயாஜாலங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

எம்.எஸ்.வி. - ராமமூர்த்தி இசையில் "அம்பிகாபதி" படத்தில் டி.எம்.எஸ்;. 'கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" என்று பாட சரோஜாதேவியை பார்த்து படம் வரைந்துகொண்டு சிவாஜி பாட்டுக்கு மேலால் ஓவராக வாயசைப்பாரே, அந்த பாடல்கூட பக்கா மாயாமாளவகௌளைதான்.

நம்முடைய ஏ.ஆர். ரஹ்மான் 'அல்லி அர்ஜூனா" படத்திற்கு போட்ட "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலுக்கு எஸ்.பி.பியும் சுவர்லணலதாவும் அப்படியொரு ஜீவன் கொடுத்திருப்பார்கள். இந்தப்பாடலின் வரிகள் எனக்கு எப்போதமே பாடலோடு ஒட்டாததுபோல ஒரு நெருடலை ஏற்படுத்துவது உண்டு. பாடல் காட்சி அதைவிட மோசம். ஆனால், கண்ணை மூடிக்கேட்டுப்பாருங்கள் மாயாமாளவகௌளை ராகம் ஒவ்வொரு ஸ்வரமாக இதமாகத்தடவிச்செல்லும்.

இப்படி எத்தனையோ முத்து முத்தான பாடல்கள் பரவிக்கிடந்தாலும் இன்றைக்கும் இந்த ராகத்தில் வெடித்துக்கிளம்பிய 'பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் அடிமனதில் ஆழப்பதிந்துவிட்ட மதுரகானம்.

இந்தப்பாடலுக்கு பின்னர், தீபனின் குரலை கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அவரின் பாடல்களை தேடி தேடி கேட்டிருக்கிறேன். அதில் தமிழக அரசின் விருது பெற்ற "பூஜைக்காக வாழும் பூவை" மற்றும் "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு" போன்ற பாடல்கள் எல்லோராலும் கேட்கப்படுபவை. வானொலிகளிலும் அடிக்கடி நேயர் விருப்பங்களாக வருபவை. ஆனால், தீபனின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல் 'அரும்பாகி மொட்டாகி பூவாகி". அதிகம் எவரும் பாடாத அபூர்வ பாடல். சில வருடங்களுக்கு முன்னர் Airtel Super Singer நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபன் சக்கரவர்த்தியின் சகோதரரின் மகன் சக்தி இந்த பாடலை பாடியிருந்தார். மற்றும்படி அந்தப்பாடலை எவரும் live ஆக பாடி கேட்டதில்லை. ஏனோ தெரியவில்லை. அந்த பாடலை இப்போது பார்த்தால், கௌதமி மட்டுமல்ல கமலும் சேர்ந்து அழுவார் என்று நினைக்கிறேன். அப்படியொரு ஆட்டமொன்று ஆடியிருப்பார் பயப்புள்ள ராமராஜன்.


தீபனின் குரலும் அவர் தொடர்பான எனது தேடலும் முடிவற்றவை. அவர் தொடர்ந்து பாடாமல்போனமைக்கான காரணத்தை ஒருமுறை செவ்வியொன்றில் கேட்டபோது, எனக்கு ஏமாற்றமும் கோபமும் ஒருங்கே ஏற்பட்டது. அதாவது, தீபனின் 'பூங்கதவே" பாடலுக்கு பின்னர், அவரின் குரல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அவரது குரலுக்கென்றே சில பாடல்களை இளையராஜா பிரத்தியேகமாக தயாரித்திருந்தார். ஆனால், தீபனோ நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் அந்த துறையில் சுற்றி சுழன்றடித்துக்கொண்டு பிஸியா இருந்திருக்கிறார். அந்த பாடல்களை யாருக்கும் கொடுக்க மனமில்லாமல், பொறுத்து பொறுத்து பார்த்த இளையராஜா ஒரு தடவை தீபனை நேரில் அழைத்து இருத்தி வைத்து, "நீ பாடினால் இன்னும் 20 வருடங்களில் அந்த பாடல்கள் உனக்கு என்ன நிலையை தரும். அதேவேளை நடித்தால், அது என்ன எதிர்காலத்தை தரும் என்றும்கூட விளங்கப்படுத்தியிருக்கிறார். ஆனால், தீபனோ நடிப்பின் மீதிருந்த காதலை துறந்துவிட்டு இசைக்காக மீண்டுவரத்தயாரில்லை. விளைவு, தீபனுக்காக வைத்திருந்த பாடல்களை கடைசியில் எஸ்.பி.பி.க்கும் ஏனையவர்களுக்கும் கொடுத்து பாடல்களை ஒப்பேற்றிக்கொண்டார் இளையராஜா.

இளையராஜா சொன்னது போலவே இன்று நடந்திருக்கிறது. தீபன் நடித்த ஏதாவது படம் யாருக்காவது நினைவிருக்கிறதா? ஆனால், "பூங்கதவே தாழ் திறவாய்" இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு இசை இலக்கியங்களில் ஒரு பாடமாக மின்னப்போகும் காவியம்.


(இன்னொரு இசைப்பதிவில் சந்திப்போம்)

Monday, April 13, 2015

OK கண்(மணி) படத்தில் OMG! இந்த இசைக்கனி!!


Coke Studio நிகழ்ச்சியில் பாட வந்த கனடாவின் இசைக்குயில் ஒன்றை "கோச்சடையான்" படத்தின் பாடல் ஒன்றை ஹிந்தி version இல் பாடவைத்து தனது இசை சாம்ராஜ்யத்திற்குள் கட்டி இழுத்து வந்த ரஹ்மான், "OK கண்மணி" படத்தில் கொடுத்திருக்கும் ஒரு பாடலால் கடந்த இரண்டு வாரங்களாக எனது தலை கிறங்கடித்துப்போயுள்ளது.

பாடகி - சாஷா திருப்பதி
பாடல் - "நானே வருகிறேன்"

வரிகள், குரல், இசை என்று எல்லாமே புதுமைகள் அடங்கிய ஆக இந்த பாடல் பெரிய அளவில் பண்ணியிருக்கிறது.

முதில் இந்த பாடலின் இசையை எடுத்துக்கொண்டால் -

ரஹ்மான் தனது முதல் படத்திலேயே பயன்படுத்திய தர்பாரி கானடா ராகம்தான். "புதுவெள்ளை மழை" என்று உன்னிமேனன் - சுஜாதா குரல்களால் காஷ்மீர் பனிவெளியை கண்முன்னே கொண்டுவந்த அந்த அத்வைத ராகத்தை பின்னொரு நாளில் "ரிதம்" படத்தில் உன்னி மேனனையும் கவிதா கிருஷ்ணமூர்த்தியையும் வைத்து "காற்றே என் வாசல் வந்து" என்று காதோரம் வந்து கதைபேசியிருப்பார்.


இந்த ராகத்தில் வித்தைகள் காண்பிக்காத இசை மேதைகள் இல்லை என்று கூறலாம். ஒவ்வொரு இசையமைப்பாளனும் இந்த ராகத்தை சரியாக தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடுகின்றபோது பிரவசமாகின்ற பாடல்கள் பயங்கர பிரபலமாகி விடுகின்றன. கே.வி. மகாதேவன் இசையில் வெளயான "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை" பாடலாக இருக்கட்டும் எம்.எஸ்.வியின் "வசந்தத்தில் ஓர் நாள்" பாடலாக இருக்கட்டும் இளையராஜாவின் "ஆகாய வெண்ணிலாவே" பாடலாக இருக்கட்டும் எல்லாமே பிரபலமான பாடல்கள் என்பதற்கு அப்பால் காலத்தை தாண்டியும் கோலோச்சுகின்றன அருமையான மெட்டுக்கள். ஆனால், தர்பாரி கானடா ராகத்தில் - என்னைப்பொறுத்தவரை - வித்தியாசமான முயற்சிகளில் இறங்கி அதில் பயங்கர வெற்றியை ஈட்டியவர் "மெலடி மன்னன்" வித்யாசாகர்தான். இந்த ராகத்தில் அவர் போட்ட "நீ காற்று நான் மரம்" "ஒரே மனம். ஒரே குணம்" "என்னை கொஞ்சம் கொஞ்சம்" என்ற பாடல்களுடன் ஒரு காலத்தில் தமிழ் திரையிசைகளின் தேசிய கீதமாக பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த "மலரே மௌனமா" ஆகியவை இந்த ராகத்தின் மகத்துவத்தை உணர்த்திய இசைச்சித்திரங்கள்.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு ராகத்தை ரஹ்மான் இம்முறை கையாண்டிருக்கும் பாங்கு வித்தியாசமானது என்றே கூறவேண்டும். இந்த பாடல் முழுவதுமே கமஹங்கள்/சங்கதிகள் உருண்டோடியவண்ணமுள்ளன. வரிக்குவரி எழுத்துக்கு எழுத்து பாடகி சாஷா கமஹங்களால் அர்ச்சனை செய்திருக்கிறார். இது உண்மையில், ரஹ்மானின் ஆரம்ப கால "உதயா உதயா" பாணி என்றாலும்கூட "நானே வருகிறேன்", பாடல் முழுவதுமே கமஹங்களால் கோர்க்கப்பட்ட இசைச்சரமாக மின்னுகிறது. கமஹங்கள் நிறைந்த பாடல்களால் தங்கள் திறமையை நிரூபிப்பதற்கு "தேசுலாவுதே தேன் மலர்" மற்றும் 'இசையில் தொடங்குதம்மா" போன்ற பாடலை தெரிவு செய்யும் reality show போட்டியாளர்களுக்கு இந்த பாடல் புதிய தீனி என்று கூறலாம். ஆனால், முறையாக சங்கீதம் பயிலாதவர்கள் பாடலுக்கு கிட்டவும் வரவேண்டாம் என்று முகத்தில் அறைந்தாற் போல்  பாடியுள்ள சாஷா, இனிவரும் படங்களில் ரஹ்மானின் இசை செல்லமாக ஷ்ரேயா, சின்மயி வரிசையில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

இனி பாடகி சாஷாவை சற்று "சைட்" அடிப்போம். 

எழுபதுகளிலேயே காஷ்மீரிலிருந்து புறப்பட்டு சென்று கனடாவில் செட்டில் ஆகிக்கொண்ட இந்திய வம்சாவளியில் வந்த கனடிய இசைக்குயில் சாஷா. உள்ளுர் நிகழ்ச்சிகளில் பிரபலமாகி, ரஹ்மானின் Coke Studio நிகழ்ச்சியில் பாட தெரிவாகிறார். அதன் பின்னர், "கோச்சடையான்" படத்தில் பாடுவதற்கு சாஷாவை அழைத்த ரஹ்மான், தமிழில்  லதா ரஜினிகாந்த பாடிய 'காதல் கணவா" பாடலின் ஹிந்தி வேர்ஷனை பாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கிறார். படம் பப்படமாகி அது பாட்டுக்கும் சேதாரம் விளைவித்ததை உணர்ந்துகொண்டாரோ என்னவோ, தொடர்ந்து "காவியத்தலைவன்" படத்தில் "ஹேய் மிஸ்டர் மைனர்" பாடலுக்கும் சாஷாவின் குரலை இசைப்புயல் தெரிவுசெய்துகொள்ள, இம்முறை ரசிகர்களுக்கு அந்த குரலிலிருந்த மந்திரம் புரிந்துவிட்டது.

அந்த மந்திரக்குரலுக்கு சொந்தக்காரியின் "நானே வருகிறேன்" பாடலின் இன்னொரு சிறப்பு, இதில் எனது விருப்பத்துக்குரிய சத்யபிரகாஷ் முதல்முறையாக ரஹ்மானின் இசையில் பாடியிருப்பது. எந்த பாடலையும் நேர்த்தியுடன் பாடவல்ல பயங்கர திறமைசாலி சத்யபிரகாஷ்  கமஹங்கள் உள்ள பாடல்கள் எதையும் தேநீர் குடிப்பது போல சிம்பிளாக சீவி எறிந்துவிட்டு தனக்கு எத்தனை மார்க் வரப்போகுதோ என்று பயபக்தியுடன் பவ்வியமாக நின்றுகொண்டிருக்கும் அவனது 'எயார் டெல் சுப்பர் சிங்கர்' ஞாபங்கள் என்னுள் என்றுமே மறையாத அற்புதமான இசைத்தருணங்கள்.

ஒரு பாடலுக்கு இந்த பெரிய பதிவா என்று நீங்கள் புறுபுறுப்பது சாதுவாக கேட்கிறது. என்ன செய்வது..இரண்டு வாரங்களாக மண்டைக்குள் ரிங் டோன் போல அடித்துக்கொண்டிருந்த பாடல்..இன்னும் எழுதலாம். ஆனால், அடுத்த இசைப்பதிவில் சந்திப்போம்.


(காதல் கணவா பாடலை தமிழில் வித்தியாசமான இசைமுயற்சியில் பாடியுள்ள சாஷாவின் காணொலி)

Friday, April 10, 2015

மரணத்திடம் மட்டும் மண்டியிட்ட ஜெயகாந்தன்


எழுத்துலக மாமேதை - ஞானபீட விருதினை பெற்றுக்கொண்டதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை சேர்த்தவராக கருதப்படும் - ஜெயகாந்தனின் மறைவு தமிழ் இலக்கிய உலகினால் மிகப்பெரிய இழப்பாக அனுட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.ஜெயகாந்தனின் அறிவுச்செருக்குப் பற்றியும் தனது எழுத்தினால் ஏற்பட்ட கர்வம் பற்றியும் பல விமர்சனங்கள் இருப்பினும் இந்த நூற்றாண்டினை கடந்து செல்லும் அனைத்து எழுத்தாளர்களும் அவரையும் அவரது எழுத்துக்களையும் ஆதர்ஷ்யமாக உள்வாங்காமல் கடந்து சென்றுவிடமுடியாது என்றும் இலக்கிய நல் உலகம் நீட்டோலை வாசித்திருக்கிறது. ஜெயகாந்தன் குறித்து எனது இந்த பதிவினை ஆரம்பிக்கும் முன்னர், எஸ்.பொ. குறிப்பிட்ட ஒரு விடயத்தை முத்தாய்ப்பாக இங்கு பதிவு செய்துவிட்டு மேற்கொண்டுசெல்வது சாலப்பொருந்தும். "வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம், சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டிமுழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றிற்குச் செய்யப்படும் துரோகம்”

ஜெயகாந்தனை பொறுத்தவரை, அவர் தமிழ் இலக்கிய பரப்பில் - ஒருகாலத்தில் - அணுகப்படாத பல கோணங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய சமூகப்போராளி. யாருமே எழுதத்துணியாத விளிம்புநிலை மனிதர்களை சமூகத்தின் முன்பாக நிறுத்தி நியாயங்களை ஓங்கி ஒலித்த அறச்சீற்ற அவதாரன். தனது எழுத்து ஆளுமையினால் தர்க்க ரீதியான நியாயங்களை முன்வைத்து சமூகத்தின் மனச்சாட்சியை தட்டிக்கேள்வி கேட்ட இலக்கிய போராளி. எல்லாவற்றுக்கும் மேலாக தான் தனக்குள் தகவமைத்துக்கொண்ட - அவ்வப்போது தன்னுடனேயே முரண்பட்டுக்கொண்ட - அரசியல் கொள்கைகளை வீச்சாக பிரசாராம் செய்து அதனை வாசகர்களிடம் ஆழ ஊடுருவிச்சென்று பதிவு செய்து கொண்ட வல்லமையாளன். கடைசியாக குறிப்பிட்ட ஜெயகாந்தனின் கொள்கையுடன்தான் மிகப்பெரிய அளவில் அவருடன் முரண்படவும் அவரளவுக்கு அறச்சீற்றத்துடன் அவரை அணுகவும் வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஒரு ஈழத்தமிழனாக நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.

ஒரு இடதுசாரியாக தனது அரசியல் கொள்கையை வரிந்து கட்டிக்கொண்டு அதனை தனது எழுத்துக்களில் கட்டியம் கூறிய ஜெயகாந்தன், மாறிவந்த கால நீரோட்டத்தில் திராவிடக்கட்சிகளை திட்டித்தொலைத்தார். காங்கிரஸ் கட்சியுடன் இறுக்கமாகி நின்றார். மாநில அளவில், எந்த அரசியல் கொள்கைகைளுடன் உடன்படாது தனிவழியில் பயணப்பட தலைப்பட்டார். அதற்காகவெல்லாம் மூன்றாவது அணி சேர்த்து பெருமுயற்சி செய்தார். எம்.ஜீ.ஆரின் அரசியல் பிரவேசத்தை எள்ளி நகையாடுவதற்கென்றே "சினிமாவுக்கு போன சித்தாளு" என்று கதையை எழுதி தன் சினம் தீர்த்தார். இவையெல்லாம் ஜெயகாந்தனின் ஆற்றல்கள் என்று இன்றுவரை வியந்து நோக்கப்படுபவை.  ஆனால், ஈழத்தமிழர் விடயத்தில் ஜெயகாந்தன் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடு என்ன? ஈழத்தமினத்தின் மீது ஒரு எழுத்தாளனாக அவர் கொண்டிருந்த பார்வை என்ன?

எனது ஒற்றைப்பதில், “மிகவும் அருவருக்கத்தக்கது”

என்னைப்பொறுத்தவரை, அவரது இந்த நிலைப்பாடு அத்தனை பெருமைகளையும் புறம்தள்ளி அவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது என்பேன்.

எண்பதுகளின் ஈற்றில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய அரசு ஈழத்துக்கு தனது இராணுவத்தை அனுப்பிய நடவடிக்கையை வெளிப்படையாக ஆதரித்து கருத்து வெளியிட்ட ஜெயகாந்தன், அந்த படைகள் புரிந்த அட்டூழியத்தையும் அந்த படையினரால் ஒரு தேசமே சுடுகாடாகப்பட்ட கொடூரத்தையும் தமிழகத்தின் எந்த மூலையிலும் - குறைந்த பட்சம் - ஒரு கண்டனம்கூட தெரிவிக்க நாதியற்ற எழுத்தாளராக இருந்திருக்கிறார் என்றால் - விளிம்புநிலை மனிதர்களை தனது கதைக்கருக்களாக கொண்ட இவரது ஆரம்ப கால எழுத்துக்கள் எல்லாம் வெறும் போலி உணர்வில் உதித்த வெற்றுப்பாத்திரங்கள்தானா என்றுதான் தோன்றுகிறது.

கோடம்பாக்கத்தில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட பின்னர், சென்னையில் நடைபெற்ற இரங்கல்கூட்ட மேடையில் ஏறி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு 1990 அண்டிலேயே தனது பேச்சிலே முள்ளிவாய்க்காலை நடத்தி முடித்த மனிதர். அது ஒரு அமைப்பு மீதூன அவரது பார்வை. அதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், மக்களுக்காக போராட புறப்பட்ட இயக்கங்களையும் அவற்றின் போராட்ட முறைகளையும் தூக்கியெறிந்து பொதுவெளியில் தனது பேச்சுக்களில் நார் நாராக கிழித்து தொங்கப்போட்ட ஜெயகாந்தன், ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன கரிசனை கொண்டிருந்தார் என்பது அவருக்கும் அவர் திமிருக்கும்தான் வெளிச்சம். கழிக்கப்பட்ட கடைநிலை மனிதர்கள் பற்றியெல்லாம் பதறி பதறி பாத்திரங்கள் படைத்த உத்தமர், 2009 இல் முடிந்த கொடூரப்போரில் லட்சக்கணக்கான மக்களின் பேரழிவின்போது - ஈழத்தமிழினம் தம் உறவுகளின் பிணங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது - எப்போதும் அகலத்திறந்த தன் அறிவுக்கண்களை எந்த அடுப்பங்கரையில் காயவிட்டிருந்தார் என்று தெரியவில்லை.

சகோதாரப்படுகொலைகளை எதிர்க்கிறேன், விடுதலைப்புலிகளை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு படுகீழ்த்தரமான வகையில் விடுதலைப்புலிகளை நோக்கி "உங்களுக்கு தந்தை இல்லை. தாய் இல்லை. அரசியல் இல்லை..அது இல்லை இது இல்லை. நீங்கள் வன்முறையை வழிபடுகின்ற பாஸிஸ்ட்டுக்கள் என்று ஈனத்தனமான விமர்சனங்களை அள்ளி எறிந்து அப்போதைய இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு சாமரசம் வீசியவர்தான் ஜெயகாந்தன். சரி விடுதலைப்புலிகள் அமைப்புத்தான் ஜெயகாந்தன் பார்வையில் பயங்கரவாதிகள். பாஸிஸ்ட்டுக்கள். தான் நேசித்த ஏனைய தமிழ் அமைப்புக்களின் தொடர்ச்சியான அரசியல் வழிகளுக்காவது நேசக்கரம் கொடுத்தாரா? இல்லை. ஈழத்தமினம் தவிக்கும் - அரசியல் - களத்தில் அநாதைகளாக அந்தரித்துக்கொண்டிருந்த காலப்பகுதியை ஒரு சரியான எழுத்துப்போராளியாக போரிலக்கியமாகமாவது பதிவு செய்தாரா? இல்லை. எல்லாவற்றிலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக்கொண்டு, தனக்கு தோதான கோதாவில் சரச்சைகளை சமைத்து ருசி காணவேண்டும் என்ற சுயநலம் மிக்க எழுத்துலக பிதாமகனாகவே - ஒரு ஈழத்தமிழனாக - என்னால் ஜெயகாந்தனை பார்க்கமுடிகிறது.

யாரும் எட்ட முடியாத பெரு விருட்சமாக வியாபித்து நின்ற எழுத்துலக ஜாம்பவானாக தெரிந்த ஜெயகாந்தனின் விம்பம் இந்தப்புள்ளியில்தான் எனக்குள் நொருங்கிவிடுகிறது. பொதுத்தளத்தில் குறைந்தபட்சம் நடுநிலையாளராகக்கூட நின்று தான் சார்ந்த இனத்தின் வலியை பதிவுசெய்யமுடியாதவராக ஒரு பலவீனம் மிக்க பேனாவை ஜெயகாந்தன் சுமந்திருக்கிறார் என்று தெரிந்துகொண்ட தருணத்திலேயே இந்த சிகரம் என்னுள் சிதிலமாகிவிடுகிறது.

தான் சார்ந்த அனைத்து கொள்கைகளையும் காலத்துக்குக்காலம் மாற்றியமைத்து அதற்கு தர்க்க விளக்கமளித்த ஜெயகாந்தன், சரியோ பிழையோ தனது எழுத்தின் மீதான கர்வத்தை மட்டும் மாறாமல் தன்னுள் தக்கவைத்திருந்தார். அதற்கும் அவருக்கும் எனது அஞ்சலிகள்!

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...