Tuesday, November 6, 2007

எந்தன் தேசத்தின் குரல்

அன்புடன் 
நண்பனுக்கு

குளிர் நாட்டிலிருந்து நீயனுப்பிய 
தளிர் மடல் கிடைத்தது.
மகிழ்ச்சி.
நீ தமிழை மறக்காததையும் நினைத்து.

ஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்

பேச்சுவார்த்ததை போலவே இங்கு 
எதுவுமே நடக்கவில்லை

கொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்
கொக்கத்தடி களவெடுத்த
குமரேசன் பேர்த்தி பிரியாவுக்கு
போனவாரம் கலியாணம்.
கைநிறைய காசோட
பறந்து வந்த கனடா கனவான்
கொத்திக்கொண்டு போனான்.

வாசிக சாலை 'அமைச்சரவையில்' மாற்றம்
தண்ணீர்ப்பந்தல் போட்ட காசில் 
தண்ணீ காட்டிப்போட்டார் என்று 
பேரிம்பலத்தாரை தூக்கியாச்சு

உனக்காக உன்னுடன் சேர்ந்து
நானும் கலைத்து திரிந்த
பர்வதம் மகள் மைதிலி
இன்னும் காத்திருக்கிறாள்.
ரிஜிஸ்டர் பண்ணீட்டு போன
ஜேர்மன் மாப்பிள்ளை பார்த்து.

தூக்குக்காவடியில் தொங்கும்போது
றோட்டோரம் நிண்டு சிரித்து 
சிக்னல் கொடுத்த கலாவையே
எங்கட 'புட்போல்" கண்ணன்
கடைசியில கைப்பிடிச்சிட்டான்

கனகற்ற வளவுக்கு
சுத்துமதில் அடிச்சதால 
எங்கட கிரிக்கெட் கோஷ்டி இப்ப
பள்ளிக்கூட வளவுக்கு 
இடம்பெயர்ந்திட்டுது.

வழமைபோலவே
வள்ளியரிண்ட வளவு
பங்குப்புளி உலுப்பும்போது
இம்முறையும் நல்ல சண்டை
ஊர் கூடிவேடிக்கை
இரண்டு பேரையும் பொலீஸ்
தூக்கிப்போச்சுது.

நாங்கள் ஊமைக்கொட்டையால
எறிஞ்சு கால் முறிச்ச
கிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு
வடிவக்காவிண்ட வளவு வாங்கினதோட
இரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்
குமாரலிங்கத்தார்.

இறைப்புக்கு இன்ஜின் விட்டு
பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த தருமர்
மறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு
ரெண்டு பெடியளையும் சுவிஸ_க்கு அனுப்பீட்டார்.

முந்தி பார்த்தா 
மூஞ்சையை திருப்பிற பத்மா
இப்ப சாதுவா சிரிச்சிட்டு போகுது
புருசனோடு போகும்போது.

வேலியே பத்தி விடுமளவுக்கு
வேகிற வெய்யில்

வேற என்ன சொல்ல

அலாரம் வைத்தெழும்பும் 
அவதியான நாடென்றாலும்
அடிக்கடி கடிதம் போடு

நீ வந்து போன சந்தோஷம்
வருமெனக்கு.

இப்படிக்கு 
இன்னும்
இங்குள்ளவன்

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...