Monday, July 13, 2015

சிலுவையில் சிதறிய இரத்தம்!


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் எதிர்வரும் தேர்தலில் குதிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை களமிறக்கும் யோசனைகளை தீவிராமாக ஆராய்ந்து வருவதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன.

மகிந்தவின் அரசியல் பிரவேசத்திற்கு அனுமதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் முடிவு தொடர்பாக வெளிப்படையாக அதிருப்தி வெளியிட்டிருந்த சந்திரிகா அம்மையார், தான் அரசியலுக்கு மீண்டும் வருவது தொடர்பாக கோடி காட்டிவிட்டு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் புறப்பட்டுள்ளார். அங்கிருந்து வந்து தனது அரசியல் செல்நெறி குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

சந்திரிகா அம்மையாரின் அரசியல் இருப்பு என்பது காலாவதியாகிட்டபோதும் அது எவ்வாறு புதிய மூலப்பொருளாக மைத்திரியை ஜனாதிபதியாக கொண்டுவரும் உற்பத்தி முறையில் பயன்படுத்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். மகிந்தவை ஆட்சிக்கட்டிலிருந்து கலைப்பதற்கு மைத்திரியுடன் கைகோர்த்துக்கொண்ட அம்மையார் தனது புதிய அவதாரத்தின்போது வெளியிட்ட கருத்துக்கள் எவ்வளவு சுவாரஸியமானவை என்பதை அவரது பேச்சுக்களை கேட்டவர்கள் அவதானித்திருப்பர். அதாவது, புலிகளுக்கு எதிரான போரை வென்றுவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் மகிந்தவின் வெற்றி முழக்கத்தை நிராகரித்த சந்திரிகா அம்மையார், தனது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 75 சதவீதமான நிலப்பரப்புக்கள் சிறிலங்கா படையினரால் வெற்றிகொள்ளப்பட்டதாகவும் மீதியைத்தான் மகிந்தவின் படைகள் வென்றதாகவும் கூறியிருந்தார்.

சந்திரிகா அம்மையார் கூறிய அவரது படைகள் மேற்கொண்ட போரின்;போது தமிழ்மக்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நிகழ்வொன்றின் 20 ஆண்டு நிறைவு தினம் கடந்த ஜூலை 9 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டது.

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலய படுகொலை!

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி..

தமிழர் பிரதேசங்களை விழுங்கும் “முன்னேறிப்பாய்தல்” என்ற புதிய படை நடவடிக்கையுடன் சிறிலங்கா படைகள் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பிரதேசம் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அனுராதபுர தளத்திலிருந்து பலாலியில் வந்திறங்கிய மேலதிக வான்படை கலங்கள் என்று பெரும்படை பலத்துடன் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ரொஹான் தளுவத்தையின் துல்லியமான இராணுவத்திட்டத்துடன் வலிகாமத்தை நோக்கி படையணிகள் ஆக்ரோஷமாக நகர்ந்தன

வலிகாமம் பிரதேச மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் செல்லுமிடம் தெரியாது வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது கட்டடங்களில் வந்து தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு, அராலி, வட்டுக்கோட்டை பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் காரைநகர் வீதியூடாக நவாலியில் வந்து தஞ்சமடைந்த இடம்தான் சென் பீற்றர்ஸ் தேவாலயம்.

அடுத்த நாள் 9 ஆம் திகதி…

கூட்டு குடும்பங்களாக நெருக்கமாக வாழும் அந்த கிராமமே மிகுந்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த பெயர் தெரியாத தமது சொந்தங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஒட்டுமொத்த நவாலி மக்களும் இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். தேவாலயத்தின் பின்புற வளவினுள் பெரிய பாத்திரங்கள் வைத்து சமையல் நடந்துகொண்டிருந்தது. மூலைக்காணியில், கழிவிடங்களுக்கான குழிகளை வெட்டுவதில் ஆண்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தனர். தேவாலயத்தை கடந்து ஆனைக்கோட்டை நோக்கி செல்லும் காரைநகர் வீதியால் இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு இளைஞர்களும் யுவதிகளும் குளிர்பானங்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

சரியாக மாலை 5 மணி…

அப்பிரதேசத்தை கடந்து சென்றுகொண்டிருந்த “புக்காரா” வானூர்தி ஒன்று திடீரென வழமைக்கு மாறாக தாழப்பறந்தது. தேவாலயத்தினுள்ளும் தேவாலயத்தின் அருகாமையில் நின்றுகொண்டிருந்தவர்கள் எவருமே அந்த புக்காராவில் அப்போது சந்தேகப்படவில்லை. ஏனெனில், அவர்கள் தஞ்சமடைந்திருந்த இடம் தேவாலாயம். அத்துடன், தேவாலயத்தின் அருகிலிருந்த உயரமான மரத்தில் செஞ்சிலுவை கொடி கட்டப்பட்டிருந்தது. எந்த கல்நெஞ்சக்காரனுக்கும் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த தங்களின் மீது கண்மூடித்தனமாக குண்டுவீச மனம் வராது என்ற நம்பிக்கையுடன் அந்த அப்பாவி மக்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாகவிருந்தனர்.

ஆனால், எல்லோரையும் கதி கலங்க வைக்கும் பேரிரைச்சலுடன் வானிலிருந்து எட்டுக்குண்டுகளை தள்ளிவிட்டது அந்த இரக்கமே இல்லாத இரும்பு பறவை.

நவாலி முருகமூர்த்தி கோயிலிலுக்கு செல்லும் வீதிக்கு எதிர்புறமாக – காரைநகர் வீதியிலுள்ள – வீட்டில் ஆரம்பித்து எட்டு குண்டுகளும் வீழ்ந்து வெடித்து அந்த பிரதேசத்தை ஒரே கணத்தில் மயானமாக்கியது அந்த புக்காரா.

நவாலி மரியதாஸ் மாஸ்டரின் வழமையான டியூசன் வகுப்புக்கள் அன்றைய தினம் நடக்கவில்லை. முதல் நாள் படை நடவடிக்கை ஆரம்பித்து வலிகாமத்தை சங்காரம் செய்துகொண்டிருந்த காரணத்தினால் காலை நேர வகுப்புக்கள் மாத்திரமே நடைபெற்றது. மாலை நேர வகுப்புக்களுக்கு சென்ற மாணவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டதால் அப்போதுதான் நானும் வீடு திரும்பியிருந்தேன்.

வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்தபோது, பேரிரைச்சலுடன் வீழ்ந்த குண்டுகளின் சன்னங்கள் தேவாலயத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள எங்களது வீட்டின் கூரையில் சல்லிக்கல்லுகள் போல வந்து வீழ்ந்தன. விழுந்து படுத்துவிட்டு எழுந்து பார்த்தபோது  நவாலி பிரதேசத்துக்கு மேலாக புகைமண்டலம் கிளம்பிக்கொண்டிருந்தது. சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சென் பீற்றர்ஸ் தேவாலாயம் நோக்கி பறந்தேன். அங்குதான் குண்டு விழுந்தது என்று அப்போது தெரியாதபோதும் புகைமண்டலம் எழுந்த திசை நோக்கி சைக்கிளில் விரைந்தேன். ஒரே வகுப்பில் படித்த சகபாடிகள் முதல் ஏராளம் பேரை பால்ய வயதில் நவாலி எனக்கு அறிமுகம் செய்திருந்தது. வேகமாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த எனக்கு, தெரிந்த் முகங்கள் எல்லாம் மனக்கண்ணின் முன் வந்து வந்து போனார்கள். “சீ..அவனுக்கு அப்படி நடந்திருக்காது.. அவளும் தப்பியிருப்பாள்” என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு சைக்களை வேகமாக மிதித்தேன்.

மாகாண கல்வித்துறை அதிகாரி திருமதி இருதயநாதர் வீட்டுக்கு அப்பால், என்னால் போகமுடியவில்லை. ஏனெனில், சென்பீற்றர்ஸ் தேவாலயப்பக்கமிருந்து “ஓ..” வென்று குழறிக்கொண்டு அலையென வந்த சனத்திரள் என்னை அப்படியே அடித்து வீழ்த்திவிடும் போலிருந்தது. கால்களில் செருப்பில்லாமல் பிள்ளைகளை இடுப்பில் சுமந்துகொண்டு தாய்மாரும் கால்களில் ஒட்டிய மண்ணுடனும் மேற்சட்டை இல்லாமல் ஆண்களும் என்ன நடக்குதென்று எதுவும் தெரியாமல் சிறுவர் சிறுமியர்கள் குழறியழுது கொண்டு தெரிந்தவர்களின் பின்னாலும் நூற்றுக்கணக்கான மக்கள் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அதில் பலரின் முகங்களில் காயமில்லாமல் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அது யாரின் இரத்தமோ தெரியவில்லை. வேகமாக ஓடி வந்த சிலர் அந்த கிறவல் வீதியில் இடறி விழுந்தார்கள்..

நான் சைக்கிளை வேலியோரமாக விட்டு பூட்டிவிட்டு, “எங்க விழுந்தது” என்றேன். “தம்பி உங்கால போகத..கோயிலடியில சனம் சாரி சாரியா செத்துக்கிடக்கு” என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு சனம் ஓடிக்கொண்டிருந்தது. ஓரளவுக்கு சனத்தை விலத்திக்கொண்டு போன நான், தூரத்தில் தேவாலயம் தெரியுமளவுக்கு சென்றுவிட்டேன்.

தேவாலாய பிரதேசத்திலிருந்து மக்கள் எழுப்பிய மரண ஓலமும் அலறலும் அந்த பிரதேசத்தையே அதிர வைத்துக்கொண்டிருந்தது. ஈரக்குலையை நடுங்கவைக்கும் பயமும் அந்த பகுதி முழுதும் குப்பென அடித்த கந்தக வாடையும் என்னை மேற்கொண்டு செல்லவிடவில்லை. வந்த திசையை நோக்கி திரும்பி ஓடினேன். செருப்பு அறுந்து விட்டதைக்கூட கவனிக்கவில்லை. நின்று எடுப்பதற்கு மூளை பணித்தாலும் கால்கள் நிற்பதாக இல்லை. விட்ட இடத்தில் சைக்கிள் நின்றது. எடுத்துக்கொண்டு விடை தெரியாத பல வினாக்களோடு பதபதைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டில் சைக்கிளை விட்டுவிட்டு, மடத்தடி வீதிக்கு போனேன். சனம் சாரி சாரியாக குழறிக்கொண்டு தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. குண்டு விழுந்தவுடன் தங்களை காப்பாற்றுவதற்கு அங்கிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், தங்கள் பிள்ளைகளை சொந்தங்களை தவறவிட்டுவிட்டு வழி நெடுகிலும் நின்று அழுதுகொண்டு நின்றார்கள். தாய்மார்கள், வீதியோரத்தில் விழுந்துகிடந்து தரையில் அடித்து அடித்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். யார் இறந்தார்கள், யார் தப்பினார்கள், யாருக்கு காயம் எதுவுமே எவருக்கும் தெரியாது.

இருள் மெல்ல மெல்ல கவிழத்தொடங்கியது. ஆனாலும், தேவாலாய பிரதேசத்திலிருந்து அழுகுரலும் ஒப்பாரியும் ஒய்ந்தபாடில்லை. இரவு பதினொரு மணியளவில்தான் சத்தங்கள் அடங்க தொடங்கியது. சுற்றுவட்டாரமே மயான அமைதியில் மௌனமாக கிடந்தது.

அடுத்தநாள், விடிந்தது. வெளிச்சம் பரவ தொடங்கியவுடனேயே தேவாலயத்தை நோக்கி விரைந்தேன்.

தேவாலயத்தின் கூரையில் ஒரு ஓடுகூட கிடையாது. தேவாலயத்தின் மீது குண்டு விழாதபோதும், அருகில் விழுந்துவெடித்த அதிர்வில் அத்தனை ஓடுகளும் வீழ்ந்துநொருங்கி, தேவாலயத்தின் தீராந்திகள் மாத்திரம் அந்த மண்டபத்தை எலும்புக்கூடுகள் போல தாங்கிக்கொண்டிருந்தன. கதவுகள் எல்லாம் பிளந்து விழுந்து கிடந்தன. 

நாவூறு படாமல் பிஞ்சுக்கன்னத்தில் கறுத்தப்பொட்டு வைத்த பச்சிளம் குழந்தையின் தலை ஒன்று தேவாலயத்தின் முன்பாகவிருந்த பூத்தொட்டியில் கிடந்தது.  

தேவாலயத்தின் முன் பரந்த நிழலைக் கொடுத்துக்கொண்டிருந்த வாகை மரத்தின் கிளையொன்றின் மீது சடலம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

தேவாலய சுவர்கள், மதில்கள், மரங்கள் எல்லாம் வெடித்துச்சிதறிய குண்டின் சன்னங்கள் சல்லடை போட்டுக்கிடந்தன. அவற்றின் மீது இரத்தம் தெறித்து சதைகள் ஒட்டிப்போய் கசாப்புக் கடைக்குள் நுழைந்தது போல ஒரு நாற்றம் தலையை சுற்றியது. 


எனது வகுப்பு நண்பர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்பதற்கு அங்கு யாருமே இல்லையா என்று கண்களை அலையவிட்டுக் கொண்டிருந்தபோது தெரிந்த அண்ணா ஒருவர் வந்தார். பெயர்களை சொல்லி கேட்டேன். முதல்நாள் ராத்திரி அங்கிருந்து இடம்பெயர்ந்து போனபோது தான் கண்ட சில பெயர்கள் ஒவ்வொன்னறாக சொன்னபோது, எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ஆனால், எனது வகுப்பு தோழன் ஒருவனின் தங்கை குண்டடிபட்ட மரம் விழுந்து மரத்துக்கு அடியில் சிக்குண்டு இறந்துவிட்டாள் என்று கேட்ட செய்தி மின்சாரம் தாக்கியது போலிருந்தது.

குண்டு விழுகின்றபோது சக்கர நாற்காலியிலிருந்து பைபிள் வாசித்துக்கொண்டிருந்த நடக்கமுடியாத வயோதிபர் ஒருவர் குண்டடிபட்டு அந்த பைபிளின் மீதே சடலமாக விழுந்தார் என்றும் அவரது சடலத்தை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் விழுந்த குண்டின் சன்னங்கள் பாய்ந்து அந்த இடத்திலேயே சடலங்களாக சரிந்தார்கள் என்றும் எல்லோரையும் ட்ரக்டர்களில் ஏற்றி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியதாகவும் அவர் சொன்னார்.

அந்த இடத்தில் நிற்க நிற்க எனக்கு தலைசுற்ற தொடங்கியது. இரத்தவாடை வயிற்றை குமட்டியது. சைக்கிளையும் எடுத்துக்கொண்டு, நவாலி சந்தியால், முருகமூர்த்தி கோயிலுக்கு போகும் வீதிக்கு அருகாமையில் சென்றபோது, தலையில் இடிவிழுந்தது போல இருந்தது. இரண்டு வீடுகள் புல்டோசர் போட்டு இடித்தது போல தரைமட்டமாக கிடந்தன. அதிலிருந்தவர்கள் எங்கேயென்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.

அங்கிருந்த ஒரு இளைஞன் அணியும் உருத்தராச்சம் மாலை மாத்திரம் மரம் ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்ததை யாரோ கண்டெடுத்திருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் திரண்ட மக்கள், இடிபாடுகளுக்குள் நடந்து சென்று கற்களையும் மெதுவாக விலத்தி தேடத்தொடங்கினார்கள்.

இரண்டு நாட்களுக்கு பின்னர், அந்த இடிபாடுகளுக்குள்ளிருந்து கணவன், மனைவி மற்றும் ஆறுமாத குழந்தையின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வீட்டுக்கு முன்பாக, எனது வகுப்புத்தோழி சுஜீவா, குண்டு விழுந்தபோது வீழ்ந்து படுத்தாள் என்றும் சில செக்கன்களில் நிமிர்ந்து பார்த்தபோது பின்னாலிருந்து வந்து பிடரியை தாக்கிய குண்டுத்துகள் ஒன்று அவளின் மண்டையை பிளந்துவிட்டது என்றும் சொன்னார்கள். இரட்டை பின்னலுடன் குனிந்த தலைநிமிராமல் டியூஷனுக்கு வந்து, ஏழாம் வாங்கில் இருக்கும் அவளின் முகமும் ஒருமுறை வகுப்பில் தந்த கணக்கை செய்து முடித்தபின் கொப்பி மாத்தி திருத்துமாறு ஆசிரியிர் சொன்னவுடன், எனது கொப்பியை திருத்திய அவளின் கையெழுத்தை பார்த்துவிட்டு நான் எட்டிப்பார்த்து சிரித்தபோது வெட்கத்துடன் சிரித்துவிட்டு திரும்பிய அவள் முகமும் என் கண்களில் கண்ணீரை பொலபொலவென தள்ளியது.

தேவாலாயத்திலும் அந்த சுற்றுவட்டாரத்திலும் இப்படி சடலங்களாக விழுந்த எத்தனையோ பேரினது செய்திகள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் வரத்தொடங்கின.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பொங்கி எழுந்தது. சர்வதேசம் முழுக்க செய்தி பரவத்தொடங்கியது. செய்தியை பரப்பிய செஞ்சிலுவை சங்கத்தின் மீது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சீறிவிழுந்தார். தமது படைகள் விடுதலைப்புலிகளைத்தான் இலக்கு வைத்து தாக்கியதாகவும் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தொடர்ந்து பறையடித்து படுகொலைகளை மறுத்தார்.

ஆனால், செஞ்சிலுவை சங்கத்தின் முழுமையான அறிக்கைகள் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றால் சீற்றமடைந்த போப்பாண்டவர், தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதலும் விளக்கம் தருமாறு சந்திரிகா அரசிடன் கோரினார்.

அப்போதும்கூட, அப்பாவி பொதுமக்களின் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று சம்பவத்தை அடியோடு மறுத்த சந்திரிகா அம்மையார் “படையினரின் தாக்குதலினால் தேவாலயம் சேதமடைந்திருந்தால், உடைந்த ஓடுகளை எண்ணி சொல்லுங்கள். அதற்கு நட்டஈடு செலுத்துவதில் தங்களுக்கு சிக்கல் இல்லை” என்றார்.

இந்தப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை வெளி ஊடகங்கள் அனைத்திலும் தவறான தகவல்களே வெளிவந்துகொண்டிருப்பது வருந்தத்தக்க விடயம். சம்;பவத்தின் பின்னர் வெளியான கத்தோலிக்க வாரப்பத்திரிகையான “பாதுகாவலன்” கொல்லப்பட்ட 210 பேரின் விவரங்களை வெளியிட்டிருந்தது. அத்துடன், வருடாவருடம் சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெறும் படுகொலை நினைவு தினத்திலும் 210 பேருக்கான பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த படுகொலைக்கு காரணமான புக்காரா விமானத்தை ஓட்டிய விமானி, பின்னாளில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார் என்ற தகவலொன்று வெளியானபோதும் அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

இதயத்தை பிழியும் - இரத்தவாடை வீசும் - இந்த சம்பவத்தை இன்று குறிப்பிடுவதன் நோக்கம் இந்த சம்பவம் இடம்பெற்றதன் இருபதாம் ஆண்டு நிறைவை நினைவுபடுத்துவது மட்டுமல்ல.

இவ்வாறு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கு காரணமானவர்கள் பலர் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னணியில் ஒழிந்து விடுகிறார்கள். மக்களாலும் மறக்கப்பட்டு விடுகிறார்கள். யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்காவிற்கு வந்து பிரபாகரன் பற்றி பேசி கைதட்டல் வாங்கி செல்கிறார்கள். தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மறுசீரமைத்துக்கொண்டு, தாங்கள் படுகொலை செய்த அதே இனத்திற்கு முன்னால் வந்து நின்றுகொண்டு - கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் - எமது மக்களுக்கு தீர்வு பெற்றுத்தருவது பற்றியெல்லாம் பேசிச்செல்கிறார்கள்.

அதை ஜீரணித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் அப்படிப்பட்ட தலைவர்களை மன்னித்து கைகுலுக்கும் எமது அரசியல் தலைவர்களை நம்பித்தான் தமக்கொரு விடிவை பெற்றுக்கொள்ள வேண்டிய தலைவிதியுடனும் தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.


இன்று (14.07.2015) "தமிழ் மிரர்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரையின் விரிவான பதிவு இதுவாகும். 

Wednesday, July 1, 2015

பற்றை வெட்டித்திரிந்த கழகம் பல விருதுகளை அள்ளிய கதை


இலங்கை கல்வித்திட்டத்தின் பிரகாரம் பரீட்சைகள் பலவிதம். அவற்றில் கல்வி பொதுத்தராதர உயர் கல்வி பரீட்சை என்பது எம்மை சகல தளைகளிலுமிருந்து விடுதலை செய்வது போன்ற உணர்வை தருகின்ற சோதனை. அதிலும் அந்த பரீட்சை முடிவடைந்தவுடன் ஏற்படுகின்ற உணர்வு இருக்கிறதே, பரீட்சையை எப்படி செய்தோமோ இல்லையோ, அதையெல்லாம் மறந்து ஏகாந்த பெருவெளியில் பறப்பது போன்ற மிதப்பை தருவது. ‘என்னடா செய்யலாம்’ என்று நினைத்து நினைத்து என்னென்னவோ எல்லாம் செய்யத்தோன்றும் காலப்பகுதி அது. எல்லாம் அந்த தேர்வு முடிவுகள் வருமட்டும்தான் என்ற யதார்த்தநிலை எல்லோருக்கும் தெரிவதால், இயலுமானவரை அந்த குறுகிய சுதந்திரத்தை அப்படியே அனுபவித்துவிடவேண்டும் என்ற வெறி எல்லோரையும் பற்றிக்கொள்ளும்.

அப்போது யாழ் இந்துக்கல்லூரிக்கு பின் ஒழுங்கையிலிருந்த சந்திரன் அண்ணாவின் மினி சினிமா என்பது பலருக்கு சுதந்திரக்குடிசையாக விளங்கியபோதும், பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே போய் படம் பார்த்துவந்த பொழுதுபோக்கிடம் என்பதால், எமக்கு அது புதிதாக எந்த புரட்சிகரமான சுதந்திர உணர்வையும் தரவில்லை.

அப்போதுதான் நாங்கள் - கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் - தற்செயலாக இடறிவிழுந்த இடம் யாழ் நகர் மைய றோட்டரக்ட் கழகம். எமக்கு அப்போது றோட்டரக்ட் கழகத்துக்கும் றோட்டறிக்கழகத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாது. ஒருநாள் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்திலுள்ள மண்டபத்தில் கூட்டம். 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் “றோட்டரக்ட்ஸ்” (Rotaracts) என்று அழைக்கப்படுவர். அதன் பின்னர், அவர்கள் கழகத்தில் தொடர்ந்து அங்கம் வகித்தால் “றொட்டரியன்ஸ்” (Rotarians)எனப்படுவர் என்ற அரும்பொருள் விளக்கத்துடன் இந்த கழக செயற்பாட்டில் காலடி எடுத்துவைத்தோம்.

சயன்ஸ் ஹோலில் ஏ.எல் வகுப்புக்களுக்கு டாட்டா காட்டிய கையோடு நாங்கள் அழகிகளாக வளர்த்துவிட்ட எம் வகுப்பு தோழிகள் எல்லோரும் பரீட்சை முடிந்தவுடன் வீட்டுக்குள் போய் ஒழிந்துகொள்ள, “எங்கடா இவளவய காணலாம்” என்று வறட்சியாக திரிந்த எங்களுக்கு இந்த றோட்டரக்ட் கழகம் சின்ன வடிகாலாக அமைந்தது என்று இப்போது கூறுவதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது என்று நம்புகிறேன். இருந்தாலும் எமக்கு சேவை நோக்கமும் தொண்டர் பணியும்தான் மூச்சிலும் பேச்சிலும் நிறைந்து கிடந்தது. (கொஞ்சம் நெளிவு எடுபட்டிருக்கும் எண்டு நினைக்கிறன்)

அப்போது தளபதி அனுராஜ் தலைமையில் இந்த றோட்டரக்ட் கழக செயற்பாடுகள் ஆரம்பித்தன. அவனும் இந்த கூத்துக்கு புதுசுதான். ஆனால், அதை வெளிக்காட்டமாட்டான். ஏதோ, தனக்கும் இந்த றோட்டரக்ட் கழகத்துக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல பக்தி பரவசத்துடன் கூட்டங்களை நடத்துவான். புறொஜக்ட்ஸ் எண்ட பெயரில் ஒவ்வொரு இடமாக தொண்டர் சேவை செய்வதற்கு எங்களை மேய்த்துக்கொண்டு போவான். அதில் எனக்கு செயலாளர் பதவி வேறு. அது வேறொன்றும் இல்லை. அப்போது, ஒவ்வொரு கூட்டத்துக்கும் மினிட்ஸ் எடுத்து எழுதவேணும். ஒரு பயலும் முன்வரமாட்டன் எண்டவுடன், அடியேன் அப்போது உதயனில் வேலை செய்த காரணத்தால், “இவன் எழுதுவான்” - என்று வழங்கப்பட்ட வரம்தான் அது.

கழகம் அமைத்துவிட்டோம் என்பதற்காகவே புறொஜெக்ட் தேடி திரிந்து பிடித்து அவற்றை எப்படியாவது முடித்து அறிக்கை எல்லாம் தயாரிப்பதுதான் அப்போது எங்களது வேலை. சனசமூக நிலையங்கள் மற்றும் பாடசாலைகளிடம் போய் புறொஜெக்ட் கேட்டால், பேசிக்கொண்டிருக்கும்போதே “உந்தா கிடக்கு வெறும் வளவு. கனநாளா பத்தையா கிடக்கு. அதை வெட்டி கிட்டி துப்பரவாக்கினா ஏதாவது செய்யலாம் எண்டுறத பற்றி யோசிக்கலாம்” – எண்டு பக்கத்து வளவுகளை காட்டுவார்கள். சொல்லி முடிப்பதற்குள் அனுராஜின் முகத்தில் தமிழீழமே கிடைத்தது போல சந்தோஷம் பிறக்கும்.

பிறகென்ன, கொடி குடை ஆலவட்டங்கள் தரித்த மன்னர் ஊர்வலம் போல, மண்வெட்டி, கடப்பாறைகள் சகிதம் சைக்கிளில் கட்டிக்கொண்டு எங்களது படையணி நகரும். குறித்த இடத்தில் போய் இறங்கி நின்று சங்காரம் செய்து சரித்திரம் படைக்கும். அதில் ஓரிருவர் “பற்றை கடிக்குது. கல்லா கிடக்கு அலவாங்கு போடமுடியாம கிடக்கு” என்று பின்னடிக்க முயற்சித்தாலும் திரிவேணி, வானதி தலைமையில் பெண்கள் அணி நாங்கள் வேலை செய்வதை பார்க்குது என்றால், வெளியில் தள்ளும் நாக்கை உள்ளே இழுத்துப்போட்டு தம் பிடித்து கொத்துவார்கள். தாங்கள் எவ்வளவு பெரிய புஜ பல பராக்கிரமபாகுகள் என்பதை  கடைக்கண்ணால் பார்த்து பார்த்து மண்ணை கொத்திக்காட்டுவார்கள். அரைமணி நேரம் வேலை செய்துவிட்டு “திருவேணி  அக்கா தேத்தண்ணி போடுங்கோவன்” எண்ட சாக்கில் அவர்களுடன் போய்நின்று கடலைபோடுவதில் மப்பி மன்னாதி மன்னன்.

இந்த கழகத்தின் ஏற்பாட்டில், யாழ் வேம்படியில் நடத்திய “கானரசாவின் காதல் கீதங்கள்” நாங்கள் அப்போது படைத்த மிகப்பெரிய இசைச்சரித்திரம். வேம்படி மகளிர் கல்லூரியில் மண்டம் எடுத்து நடத்திய இந்த ரிக்கெட் ஷோ. பெரிய பட்ஜட். நான் எல்லாம் அப்போதுதான் முதல் முதலாக, சிற்றி போய்ஸ் தையல் கடையில் ப்ளீட்ஸ் வைத்த ஜீன்ஸ் தைத்து போட்ட சாதனை படைத்தநாள். அன்றைய காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் சிற்றி போய்ஸ் தையல்கடையில் தைக்கும் ஜீன்ஸ் மற்றும் காற்சட்டைகள் மிகவும் பிரபலம். அங்கு தைத்த ஜீன்ஸ் காற்சட்டை போட்டு போனாலே, பள்ளிக்கூட இன்டர்வேலில் அதை பார்ப்பதற்கு என்று அணிந்தவனை சூழ ஒரு கூட்டம் நிற்கும். இந்த பிரபலத்தன்மை காரணமாக, அங்கு தைப்பதற்கு விலையும் கூட, தைப்பதற்கு என ஓடர் கொடுக்கவேண்டிய காலப்பகுதியும் அதிகம். நமக்கெல்லாம் அது கொடுப்பினை இல்லாத காலம். மானிப்பாய்  அந்தோனியார் கோவிலுக்கு முன்னாலிருந்த “ஜெகபதி டெய்லர்ஸ்”தான் நமக்கு அளவெடுத்து அடிக்கும் 'All in All அழகுராஜா'

சரி விஷயத்துக்கு வருவோம்.

இப்படியாக ஆல் போல் வளர்ந்து அறுகுபோல் வேரூன்றி தொடர்ச்சியாக பயணித்த யாழ் றோட்டரக்ட் பின்னர் றோட்டறிக்கழகத்துக்குள் காலடி எடுத்துவைத்தபோதும், அதில் முன்னர் பயணித்த முக்கால்வாசிப்பேர் பரீட்சை பெறுபேறுகளுடனும் கொழும்பு – வெளிநாடு என்று சென்றுவிட -

கழகத்தை கொண்டு இழுத்த ஒரே தலைமகன் தளபதி அனுராஜ். போனவர்கள் போக புதிதாக பலரை சேர்த்து றோட்டரக்ட் கழகத்தையும் அதேவேளை மூத்த அங்கத்தவர்களின் ஆலோசகனைகளுடனும் ஆசீர்வாதத்துடனும் றோட்டறிக்கழகத்தையும் கொண்டு நடத்தி –

இன்று ROTARY DISTRICT 3220 AWARDING NIGHT விருதுவழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணம் றோட்டறிக்கழகம் சிறந்த மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் விருது உட்பட 14 விருதுகளை அள்ளிக்குவித்திருக்கிறது. நண்பர்களும் முன்னாள் அங்கத்தவர்களும் (முக்கியமாக முன்னாள் செயலாளரும்!) மாவட்ட நலன்விரும்பிகளும் எல்லோரும் பெருமையடையும் தருணம்.

அப்படியானால், இவ்வளவு காலமும் இந்த றோட்டறிக்கழகம் என்னதான் செய்தது என்று புருவம் குவிப்பவர்கள் யாழ்ப்பாணம் றோட்டறிக்கழக முகப்புத்தக பக்கத்தை சொடுக்கினால் தெரியும்.

மக்களுக்கு நம்பிக்கையான இப்படிப்பட்ட அமைப்புக்கள் சமூக மட்டத்தில் பலமான பாலத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டவை. மக்களுக்கு நெருக்கமான அரசியல் தெரிவுகளும்கூட இப்படியான சேவை அமைப்புக்களின் பாதையிலிருந்து தெரிவு செய்யப்படும்போதுதான் ஆரோக்கியம் மிக்கதாக அமையும். மக்களுக்கும் தலைவர்களுக்குமான அந்நியோன்யம் இவ்வாறான ஆழமான புரிதல் உறவுகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படுகின்றபோது, அது பலமானதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல், அதுதான் உண்மையிலேயே மக்கள் பிரதிநிதிகள் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தத்தை கொடுக்கிறது. இந்த வெறுமை நிலை அண்மையில், புங்குடுதீவு சம்பவத்தில் பல தரப்புக்களால் எதிரொலிக்கப்பட்டது.

அந்த வகையில், இளைஞர்களின் தலைமைத்துவ ஆற்றல் மிக்க இவ்வாறான அமைப்புசார் நடவடிக்கைள் நிச்சயம் பரந்த அளவில் வளர்க்கப்படவேண்டியவை. அவர்களின் வளர்ச்சி பாராட்டப்படவேண்டியது. அது கட்டாயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாவிட்டாலும்கூட சிவில் அமைப்புக்களாக செயற்படவல்ல வெளிப்படையான தளமாக செயற்படுவது அவசியமானதும் ஆரோக்கியமானதும் ஆகும்.

யாழ் றோட்டறிக்கழகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆரம்பகால சாதனைகள் காட்சிகள் - 


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற றோட்டரக்ட் கழக மாநாடு ஒன்றுக்கும் எங்களது யாழ். படையணியினர் கட்டளைத்தளபதி அனுராஜ் தலைமையில் விஜயம் செய்திருந்தபோது எடுக்கப்பட்ட படம். ஒருத்தன் நம்மை படம் எடுக்கும்போது சாதுவாக சிரிக்கலாம் என்கிற சராசரி புத்திகூட இல்லாமல் விறைத்த கட்டைகளாக தெரிபவர்கள் எல்லோரும் யாழ். அணியினர். 


மாநாட்டுக்கு வந்த எங்களை மதித்து மாநாடு முடிந்தவுடன் பத்தரமுல்லவில் after party ஒன்றுக்கு அழைத்து சென்ற எம்மை அவிழ்த்துவிட்டவுடன் நாங்கள் எமது சுயரூபத்தை காண்பிக்க முற்பட்ட கணங்கள்.

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...