Wednesday, July 1, 2015

பற்றை வெட்டித்திரிந்த கழகம் பல விருதுகளை அள்ளிய கதை


இலங்கை கல்வித்திட்டத்தின் பிரகாரம் பரீட்சைகள் பலவிதம். அவற்றில் கல்வி பொதுத்தராதர உயர் கல்வி பரீட்சை என்பது எம்மை சகல தளைகளிலுமிருந்து விடுதலை செய்வது போன்ற உணர்வை தருகின்ற சோதனை. அதிலும் அந்த பரீட்சை முடிவடைந்தவுடன் ஏற்படுகின்ற உணர்வு இருக்கிறதே, பரீட்சையை எப்படி செய்தோமோ இல்லையோ, அதையெல்லாம் மறந்து ஏகாந்த பெருவெளியில் பறப்பது போன்ற மிதப்பை தருவது. ‘என்னடா செய்யலாம்’ என்று நினைத்து நினைத்து என்னென்னவோ எல்லாம் செய்யத்தோன்றும் காலப்பகுதி அது. எல்லாம் அந்த தேர்வு முடிவுகள் வருமட்டும்தான் என்ற யதார்த்தநிலை எல்லோருக்கும் தெரிவதால், இயலுமானவரை அந்த குறுகிய சுதந்திரத்தை அப்படியே அனுபவித்துவிடவேண்டும் என்ற வெறி எல்லோரையும் பற்றிக்கொள்ளும்.

அப்போது யாழ் இந்துக்கல்லூரிக்கு பின் ஒழுங்கையிலிருந்த சந்திரன் அண்ணாவின் மினி சினிமா என்பது பலருக்கு சுதந்திரக்குடிசையாக விளங்கியபோதும், பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே போய் படம் பார்த்துவந்த பொழுதுபோக்கிடம் என்பதால், எமக்கு அது புதிதாக எந்த புரட்சிகரமான சுதந்திர உணர்வையும் தரவில்லை.

அப்போதுதான் நாங்கள் - கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் - தற்செயலாக இடறிவிழுந்த இடம் யாழ் நகர் மைய றோட்டரக்ட் கழகம். எமக்கு அப்போது றோட்டரக்ட் கழகத்துக்கும் றோட்டறிக்கழகத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாது. ஒருநாள் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்திலுள்ள மண்டபத்தில் கூட்டம். 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் “றோட்டரக்ட்ஸ்” (Rotaracts) என்று அழைக்கப்படுவர். அதன் பின்னர், அவர்கள் கழகத்தில் தொடர்ந்து அங்கம் வகித்தால் “றொட்டரியன்ஸ்” (Rotarians)எனப்படுவர் என்ற அரும்பொருள் விளக்கத்துடன் இந்த கழக செயற்பாட்டில் காலடி எடுத்துவைத்தோம்.

சயன்ஸ் ஹோலில் ஏ.எல் வகுப்புக்களுக்கு டாட்டா காட்டிய கையோடு நாங்கள் அழகிகளாக வளர்த்துவிட்ட எம் வகுப்பு தோழிகள் எல்லோரும் பரீட்சை முடிந்தவுடன் வீட்டுக்குள் போய் ஒழிந்துகொள்ள, “எங்கடா இவளவய காணலாம்” என்று வறட்சியாக திரிந்த எங்களுக்கு இந்த றோட்டரக்ட் கழகம் சின்ன வடிகாலாக அமைந்தது என்று இப்போது கூறுவதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது என்று நம்புகிறேன். இருந்தாலும் எமக்கு சேவை நோக்கமும் தொண்டர் பணியும்தான் மூச்சிலும் பேச்சிலும் நிறைந்து கிடந்தது. (கொஞ்சம் நெளிவு எடுபட்டிருக்கும் எண்டு நினைக்கிறன்)

அப்போது தளபதி அனுராஜ் தலைமையில் இந்த றோட்டரக்ட் கழக செயற்பாடுகள் ஆரம்பித்தன. அவனும் இந்த கூத்துக்கு புதுசுதான். ஆனால், அதை வெளிக்காட்டமாட்டான். ஏதோ, தனக்கும் இந்த றோட்டரக்ட் கழகத்துக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல பக்தி பரவசத்துடன் கூட்டங்களை நடத்துவான். புறொஜக்ட்ஸ் எண்ட பெயரில் ஒவ்வொரு இடமாக தொண்டர் சேவை செய்வதற்கு எங்களை மேய்த்துக்கொண்டு போவான். அதில் எனக்கு செயலாளர் பதவி வேறு. அது வேறொன்றும் இல்லை. அப்போது, ஒவ்வொரு கூட்டத்துக்கும் மினிட்ஸ் எடுத்து எழுதவேணும். ஒரு பயலும் முன்வரமாட்டன் எண்டவுடன், அடியேன் அப்போது உதயனில் வேலை செய்த காரணத்தால், “இவன் எழுதுவான்” - என்று வழங்கப்பட்ட வரம்தான் அது.

கழகம் அமைத்துவிட்டோம் என்பதற்காகவே புறொஜெக்ட் தேடி திரிந்து பிடித்து அவற்றை எப்படியாவது முடித்து அறிக்கை எல்லாம் தயாரிப்பதுதான் அப்போது எங்களது வேலை. சனசமூக நிலையங்கள் மற்றும் பாடசாலைகளிடம் போய் புறொஜெக்ட் கேட்டால், பேசிக்கொண்டிருக்கும்போதே “உந்தா கிடக்கு வெறும் வளவு. கனநாளா பத்தையா கிடக்கு. அதை வெட்டி கிட்டி துப்பரவாக்கினா ஏதாவது செய்யலாம் எண்டுறத பற்றி யோசிக்கலாம்” – எண்டு பக்கத்து வளவுகளை காட்டுவார்கள். சொல்லி முடிப்பதற்குள் அனுராஜின் முகத்தில் தமிழீழமே கிடைத்தது போல சந்தோஷம் பிறக்கும்.

பிறகென்ன, கொடி குடை ஆலவட்டங்கள் தரித்த மன்னர் ஊர்வலம் போல, மண்வெட்டி, கடப்பாறைகள் சகிதம் சைக்கிளில் கட்டிக்கொண்டு எங்களது படையணி நகரும். குறித்த இடத்தில் போய் இறங்கி நின்று சங்காரம் செய்து சரித்திரம் படைக்கும். அதில் ஓரிருவர் “பற்றை கடிக்குது. கல்லா கிடக்கு அலவாங்கு போடமுடியாம கிடக்கு” என்று பின்னடிக்க முயற்சித்தாலும் திரிவேணி, வானதி தலைமையில் பெண்கள் அணி நாங்கள் வேலை செய்வதை பார்க்குது என்றால், வெளியில் தள்ளும் நாக்கை உள்ளே இழுத்துப்போட்டு தம் பிடித்து கொத்துவார்கள். தாங்கள் எவ்வளவு பெரிய புஜ பல பராக்கிரமபாகுகள் என்பதை  கடைக்கண்ணால் பார்த்து பார்த்து மண்ணை கொத்திக்காட்டுவார்கள். அரைமணி நேரம் வேலை செய்துவிட்டு “திருவேணி  அக்கா தேத்தண்ணி போடுங்கோவன்” எண்ட சாக்கில் அவர்களுடன் போய்நின்று கடலைபோடுவதில் மப்பி மன்னாதி மன்னன்.

இந்த கழகத்தின் ஏற்பாட்டில், யாழ் வேம்படியில் நடத்திய “கானரசாவின் காதல் கீதங்கள்” நாங்கள் அப்போது படைத்த மிகப்பெரிய இசைச்சரித்திரம். வேம்படி மகளிர் கல்லூரியில் மண்டம் எடுத்து நடத்திய இந்த ரிக்கெட் ஷோ. பெரிய பட்ஜட். நான் எல்லாம் அப்போதுதான் முதல் முதலாக, சிற்றி போய்ஸ் தையல் கடையில் ப்ளீட்ஸ் வைத்த ஜீன்ஸ் தைத்து போட்ட சாதனை படைத்தநாள். அன்றைய காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் சிற்றி போய்ஸ் தையல்கடையில் தைக்கும் ஜீன்ஸ் மற்றும் காற்சட்டைகள் மிகவும் பிரபலம். அங்கு தைத்த ஜீன்ஸ் காற்சட்டை போட்டு போனாலே, பள்ளிக்கூட இன்டர்வேலில் அதை பார்ப்பதற்கு என்று அணிந்தவனை சூழ ஒரு கூட்டம் நிற்கும். இந்த பிரபலத்தன்மை காரணமாக, அங்கு தைப்பதற்கு விலையும் கூட, தைப்பதற்கு என ஓடர் கொடுக்கவேண்டிய காலப்பகுதியும் அதிகம். நமக்கெல்லாம் அது கொடுப்பினை இல்லாத காலம். மானிப்பாய்  அந்தோனியார் கோவிலுக்கு முன்னாலிருந்த “ஜெகபதி டெய்லர்ஸ்”தான் நமக்கு அளவெடுத்து அடிக்கும் 'All in All அழகுராஜா'

சரி விஷயத்துக்கு வருவோம்.

இப்படியாக ஆல் போல் வளர்ந்து அறுகுபோல் வேரூன்றி தொடர்ச்சியாக பயணித்த யாழ் றோட்டரக்ட் பின்னர் றோட்டறிக்கழகத்துக்குள் காலடி எடுத்துவைத்தபோதும், அதில் முன்னர் பயணித்த முக்கால்வாசிப்பேர் பரீட்சை பெறுபேறுகளுடனும் கொழும்பு – வெளிநாடு என்று சென்றுவிட -

கழகத்தை கொண்டு இழுத்த ஒரே தலைமகன் தளபதி அனுராஜ். போனவர்கள் போக புதிதாக பலரை சேர்த்து றோட்டரக்ட் கழகத்தையும் அதேவேளை மூத்த அங்கத்தவர்களின் ஆலோசகனைகளுடனும் ஆசீர்வாதத்துடனும் றோட்டறிக்கழகத்தையும் கொண்டு நடத்தி –

இன்று ROTARY DISTRICT 3220 AWARDING NIGHT விருதுவழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணம் றோட்டறிக்கழகம் சிறந்த மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் விருது உட்பட 14 விருதுகளை அள்ளிக்குவித்திருக்கிறது. நண்பர்களும் முன்னாள் அங்கத்தவர்களும் (முக்கியமாக முன்னாள் செயலாளரும்!) மாவட்ட நலன்விரும்பிகளும் எல்லோரும் பெருமையடையும் தருணம்.

அப்படியானால், இவ்வளவு காலமும் இந்த றோட்டறிக்கழகம் என்னதான் செய்தது என்று புருவம் குவிப்பவர்கள் யாழ்ப்பாணம் றோட்டறிக்கழக முகப்புத்தக பக்கத்தை சொடுக்கினால் தெரியும்.

மக்களுக்கு நம்பிக்கையான இப்படிப்பட்ட அமைப்புக்கள் சமூக மட்டத்தில் பலமான பாலத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டவை. மக்களுக்கு நெருக்கமான அரசியல் தெரிவுகளும்கூட இப்படியான சேவை அமைப்புக்களின் பாதையிலிருந்து தெரிவு செய்யப்படும்போதுதான் ஆரோக்கியம் மிக்கதாக அமையும். மக்களுக்கும் தலைவர்களுக்குமான அந்நியோன்யம் இவ்வாறான ஆழமான புரிதல் உறவுகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படுகின்றபோது, அது பலமானதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல், அதுதான் உண்மையிலேயே மக்கள் பிரதிநிதிகள் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தத்தை கொடுக்கிறது. இந்த வெறுமை நிலை அண்மையில், புங்குடுதீவு சம்பவத்தில் பல தரப்புக்களால் எதிரொலிக்கப்பட்டது.

அந்த வகையில், இளைஞர்களின் தலைமைத்துவ ஆற்றல் மிக்க இவ்வாறான அமைப்புசார் நடவடிக்கைள் நிச்சயம் பரந்த அளவில் வளர்க்கப்படவேண்டியவை. அவர்களின் வளர்ச்சி பாராட்டப்படவேண்டியது. அது கட்டாயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாவிட்டாலும்கூட சிவில் அமைப்புக்களாக செயற்படவல்ல வெளிப்படையான தளமாக செயற்படுவது அவசியமானதும் ஆரோக்கியமானதும் ஆகும்.

யாழ் றோட்டறிக்கழகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆரம்பகால சாதனைகள் காட்சிகள் - 


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற றோட்டரக்ட் கழக மாநாடு ஒன்றுக்கும் எங்களது யாழ். படையணியினர் கட்டளைத்தளபதி அனுராஜ் தலைமையில் விஜயம் செய்திருந்தபோது எடுக்கப்பட்ட படம். ஒருத்தன் நம்மை படம் எடுக்கும்போது சாதுவாக சிரிக்கலாம் என்கிற சராசரி புத்திகூட இல்லாமல் விறைத்த கட்டைகளாக தெரிபவர்கள் எல்லோரும் யாழ். அணியினர். 


மாநாட்டுக்கு வந்த எங்களை மதித்து மாநாடு முடிந்தவுடன் பத்தரமுல்லவில் after party ஒன்றுக்கு அழைத்து சென்ற எம்மை அவிழ்த்துவிட்டவுடன் நாங்கள் எமது சுயரூபத்தை காண்பிக்க முற்பட்ட கணங்கள்.

3 comments:

  1. யாழ் றொட்டரக்ட் கழகமா..ஃ?? யாழ் நகர்மைய றொட்டரக்ட் கழகமா....ஃ?

    ReplyDelete
  2. யாழ் நகர்மைய றொட்டரக்ட் கழகம். தவறுக்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டுள்ளேன்.

    ReplyDelete
  3. ஒரு பதிவில் ஒரு பகிர்வில் விவரிக்ககூடிய நாட்களல்ல அவை... வாழ்த்திக்கள் பங்காளர்களிற்கு, மேலும், யாழ்ப்பாணம் மிட் டவுண் றோட்டரகட் கழகம் என்றிருந்ததை தமிழில் யாழ் நகர்மைய றோட்டரக்ட் கழகம் என பல விவாதங்களுக்கு மத்தியில் தமிழ்ப்படுத்தி செம்மொழி அங்கீகாரம் கொடுத்த சரித்திர சாதனை எனக்குரியதென இவ்விடம் நினைவூட்டுகிறேன் செயலாளரே! -ஜேனா.

    ReplyDelete

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...