Tuesday, April 14, 2015

பூங்கதவு தாழ் திறந்து இன்றுடன் 35 வருடங்கள்!



"பூங்கதவே தாழ் திறவாய்"

என் வாழ்நாள் முழுவதும் - மறக்க முடியாத - மனதில் ஆழப்பதிந்துவிட்ட -  உன்னதமான காதல் கீதம். அப்படியொரு பாடல். சிறுவயதிலிருந்தே இந்த பாடலுக்கு நான் அடிமை. "1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி  எனது வாழ்நாளில் பொன்னாள். பூங்கதவே பாடல் இசைஞானியால் ஒலிப்பதிவாகிய நாள். இன்றுடன் 35 வருடங்களாகின்றன" என்று இந்த பாடலுக்கு தனது குரலால் உயிர்கொடுத்த தீபன் சக்கரவர்த்தி இன்று முகப்புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறார். இதைப்படித்தவுடன் இந்த பாடலின் மீதான எனது காதல் வானில் ரெக்கை கட்டிப்பறந்தது.

திருச்சிராப்பள்ளி வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல் வரிசை ஒரு காலத்தில் எனக்கு மனப்பாடம். இந்த ஒலிபரப்பாளர்கள் ஒன்றுக்கு பின் ஒன்று சேர்ந்த set பாடல்களாக வைத்திருப்பார்கள். அவ்வப்போது திரையிசைப்பாடல்கள் ஒலிபரப்பாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அப்படியே எடுத்து அடித்துவிடுவார்கள். அந்த வகையில், "சின்னப்புறா ஒன்று வண்ணா கனாவினில்" பாடல் ஒலிபரப்பானால், அடுத்த பாடல்  "பூங்கதவே தாழ் திறவாய்" வரப்போகிறது என்று அர்த்தம். வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும், "சின்னப்புறா" பாடல் வானொலியில் ஒலிபரப்பானால், பறந்தடித்து வந்து வானொலிக்கு அருகில் குந்திவிடுவேன். காரணம், அந்த மந்தகாசக்குரலில் தீபன் சக்கரவர்த்தியும் உமா ரமணனும் தரப்போகும் இசைத்தேனை பருகுவதற்கே ஆகும்.

சிறுவயதில் வயதில் சங்கீதம் கற்க சென்றபோது நவாலி சந்திரிக்கா டீச்சரிடம் படித்த "சிறி கணநாதா சிந்தூர வர்ண" என்ற மாயாமாளவகொளை ராகத்தில் அமைந்த கீர்த்தனையும் அதே ராகத்தில் இந்த பாடலும் அமைந்த காரணமோ அல்லது இளையராஜா அலாதியாக எல்லா பாரம்பரிய இசைக்கருவிகளையும் பாடல் முழுவதும் பரவ விட்டிருக்கும் காரணமோ அல்லது வித்தியாசமான குரல்களோ அல்லது மெட்டோ எதுவொன்று தெரியாமல் இந்த பாடலில் நான்  ஆழமாக தொலைந்திருப்பதுதான் இன்றுவரைக்கும் எனக்கு புரியாத புதிர். சில பாடல்கள் சில நேரங்களில் கேட்கும்போது மனதுக்குள் பிரத்தியேக பூரிப்பும் பரவசமும் ஏற்படும். அந்தவகையில், மாயாமாளவகொளை ராகம் காலையில் பாடுவதற்கு உகந்த ராகம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்த பாடல் வடிவமைக்கப்பட்ட விதமோ என்னவோ தெரியவில்லை. எனக்கு எப்போது கேட்டாலும் சுகம்தான்.

பாடலின் ஆரம்பத்தில் இளையராஜா அநியாயத்துக்கு arrangement செய்திருக்கும் strings section, அதன் மேல் ஆரோகணித்துக்குகொண்டுவரும் வயலின், அது அவ்வளவும் பாடல் அல்ல. பாடம். அதை வாசிக்கப்பழகிக்கொண்டால், இப்போது வெளியாகும் ஒரு 50 புதிய பாடல்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று சொல்வேன். அப்படியொரு இசைக்கோர்வை. அதில் ஒரு நளினம். ஸ்வரங்கள் ராட்சத ராட்டினம் ஆடும் இசைக்களம். அதன் பின்னர், interlude இல் வரும் வீணை, தாலிகட்டும்போது வாசிக்கப்படும் கெட்டிமேளத்தை பாடலில் சரியாக place பண்ணியிருக்கும் கெட்டித்தனம். எல்லாமே இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் காலத்தால் அழிக்கமுடியாத இசைச்சிற்பங்கள்.


இந்த பாடலில் இன்னொரு சிறப்பம்ஸம் என்னென்றால், இந்த ராகத்தில் இளையராஜாவே எத்தனையோ அற்புதமான பாடல்களை இதற்கு முன்னரும் பின்னரும் இசைச்சுகம் சொட்ட சொட்ட அள்ளித்தந்திருக்கிறார். உதாரணமாக, 'குங்குமம்" படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை" பாடலுக்குப்பின்னர் டி.எம்.எஸ். - ஜானகி டூயட்டுக்கு பெயர்போன பாடல் 'அந்தப்புரத்தில் ஒரு மகாராணி". 'தீபம்" படத்தில் இளையராஜா western-eastern என இரு இசைகளையும் மாயாமாளவகொளை ராகத்தில் போட்டு ரகளை பண்ணியிருக்கும் பாடல். இந்த பாடலுக்கு வாத்தியங்கள் வாசித்த பல கலைஞர்கள் இசையமைப்பின்போது பயங்கரமாக திணறிப்போனார்கள் என்று எங்கோ ஒரு புத்தகத்தில் வாசித்த ஞாபகம். அதேபோல், "எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்தில் 'மதுர மரிக்கொழுந்து வாசம்" பாடல் 'காதல் பரிசு" படத்தில் 'காதல் மகாராணி" பாடல் "கோபுர வாசலிலே" பாடத்தில் "காதல் கவிதைகள்" பாடல், 'அம்மன் கோவில் கிழக்காலே" படத்தில் "பூவ எடுத்து வச்சு" பாடல், "சந்த்ரலேகா" படத்தில் "அல்லா உன் ஆணைப்படி" என்று ராஜா செய்த மாயாஜாலங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

எம்.எஸ்.வி. - ராமமூர்த்தி இசையில் "அம்பிகாபதி" படத்தில் டி.எம்.எஸ்;. 'கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" என்று பாட சரோஜாதேவியை பார்த்து படம் வரைந்துகொண்டு சிவாஜி பாட்டுக்கு மேலால் ஓவராக வாயசைப்பாரே, அந்த பாடல்கூட பக்கா மாயாமாளவகௌளைதான்.

நம்முடைய ஏ.ஆர். ரஹ்மான் 'அல்லி அர்ஜூனா" படத்திற்கு போட்ட "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலுக்கு எஸ்.பி.பியும் சுவர்லணலதாவும் அப்படியொரு ஜீவன் கொடுத்திருப்பார்கள். இந்தப்பாடலின் வரிகள் எனக்கு எப்போதமே பாடலோடு ஒட்டாததுபோல ஒரு நெருடலை ஏற்படுத்துவது உண்டு. பாடல் காட்சி அதைவிட மோசம். ஆனால், கண்ணை மூடிக்கேட்டுப்பாருங்கள் மாயாமாளவகௌளை ராகம் ஒவ்வொரு ஸ்வரமாக இதமாகத்தடவிச்செல்லும்.

இப்படி எத்தனையோ முத்து முத்தான பாடல்கள் பரவிக்கிடந்தாலும் இன்றைக்கும் இந்த ராகத்தில் வெடித்துக்கிளம்பிய 'பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் அடிமனதில் ஆழப்பதிந்துவிட்ட மதுரகானம்.

இந்தப்பாடலுக்கு பின்னர், தீபனின் குரலை கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அவரின் பாடல்களை தேடி தேடி கேட்டிருக்கிறேன். அதில் தமிழக அரசின் விருது பெற்ற "பூஜைக்காக வாழும் பூவை" மற்றும் "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு" போன்ற பாடல்கள் எல்லோராலும் கேட்கப்படுபவை. வானொலிகளிலும் அடிக்கடி நேயர் விருப்பங்களாக வருபவை. ஆனால், தீபனின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல் 'அரும்பாகி மொட்டாகி பூவாகி". அதிகம் எவரும் பாடாத அபூர்வ பாடல். சில வருடங்களுக்கு முன்னர் Airtel Super Singer நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபன் சக்கரவர்த்தியின் சகோதரரின் மகன் சக்தி இந்த பாடலை பாடியிருந்தார். மற்றும்படி அந்தப்பாடலை எவரும் live ஆக பாடி கேட்டதில்லை. ஏனோ தெரியவில்லை. அந்த பாடலை இப்போது பார்த்தால், கௌதமி மட்டுமல்ல கமலும் சேர்ந்து அழுவார் என்று நினைக்கிறேன். அப்படியொரு ஆட்டமொன்று ஆடியிருப்பார் பயப்புள்ள ராமராஜன்.


தீபனின் குரலும் அவர் தொடர்பான எனது தேடலும் முடிவற்றவை. அவர் தொடர்ந்து பாடாமல்போனமைக்கான காரணத்தை ஒருமுறை செவ்வியொன்றில் கேட்டபோது, எனக்கு ஏமாற்றமும் கோபமும் ஒருங்கே ஏற்பட்டது. அதாவது, தீபனின் 'பூங்கதவே" பாடலுக்கு பின்னர், அவரின் குரல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அவரது குரலுக்கென்றே சில பாடல்களை இளையராஜா பிரத்தியேகமாக தயாரித்திருந்தார். ஆனால், தீபனோ நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் அந்த துறையில் சுற்றி சுழன்றடித்துக்கொண்டு பிஸியா இருந்திருக்கிறார். அந்த பாடல்களை யாருக்கும் கொடுக்க மனமில்லாமல், பொறுத்து பொறுத்து பார்த்த இளையராஜா ஒரு தடவை தீபனை நேரில் அழைத்து இருத்தி வைத்து, "நீ பாடினால் இன்னும் 20 வருடங்களில் அந்த பாடல்கள் உனக்கு என்ன நிலையை தரும். அதேவேளை நடித்தால், அது என்ன எதிர்காலத்தை தரும் என்றும்கூட விளங்கப்படுத்தியிருக்கிறார். ஆனால், தீபனோ நடிப்பின் மீதிருந்த காதலை துறந்துவிட்டு இசைக்காக மீண்டுவரத்தயாரில்லை. விளைவு, தீபனுக்காக வைத்திருந்த பாடல்களை கடைசியில் எஸ்.பி.பி.க்கும் ஏனையவர்களுக்கும் கொடுத்து பாடல்களை ஒப்பேற்றிக்கொண்டார் இளையராஜா.

இளையராஜா சொன்னது போலவே இன்று நடந்திருக்கிறது. தீபன் நடித்த ஏதாவது படம் யாருக்காவது நினைவிருக்கிறதா? ஆனால், "பூங்கதவே தாழ் திறவாய்" இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு இசை இலக்கியங்களில் ஒரு பாடமாக மின்னப்போகும் காவியம்.


(இன்னொரு இசைப்பதிவில் சந்திப்போம்)

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...