Friday, April 10, 2015

மரணத்திடம் மட்டும் மண்டியிட்ட ஜெயகாந்தன்


எழுத்துலக மாமேதை - ஞானபீட விருதினை பெற்றுக்கொண்டதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை சேர்த்தவராக கருதப்படும் - ஜெயகாந்தனின் மறைவு தமிழ் இலக்கிய உலகினால் மிகப்பெரிய இழப்பாக அனுட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.ஜெயகாந்தனின் அறிவுச்செருக்குப் பற்றியும் தனது எழுத்தினால் ஏற்பட்ட கர்வம் பற்றியும் பல விமர்சனங்கள் இருப்பினும் இந்த நூற்றாண்டினை கடந்து செல்லும் அனைத்து எழுத்தாளர்களும் அவரையும் அவரது எழுத்துக்களையும் ஆதர்ஷ்யமாக உள்வாங்காமல் கடந்து சென்றுவிடமுடியாது என்றும் இலக்கிய நல் உலகம் நீட்டோலை வாசித்திருக்கிறது. ஜெயகாந்தன் குறித்து எனது இந்த பதிவினை ஆரம்பிக்கும் முன்னர், எஸ்.பொ. குறிப்பிட்ட ஒரு விடயத்தை முத்தாய்ப்பாக இங்கு பதிவு செய்துவிட்டு மேற்கொண்டுசெல்வது சாலப்பொருந்தும். "வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம், சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டிமுழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றிற்குச் செய்யப்படும் துரோகம்”

ஜெயகாந்தனை பொறுத்தவரை, அவர் தமிழ் இலக்கிய பரப்பில் - ஒருகாலத்தில் - அணுகப்படாத பல கோணங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய சமூகப்போராளி. யாருமே எழுதத்துணியாத விளிம்புநிலை மனிதர்களை சமூகத்தின் முன்பாக நிறுத்தி நியாயங்களை ஓங்கி ஒலித்த அறச்சீற்ற அவதாரன். தனது எழுத்து ஆளுமையினால் தர்க்க ரீதியான நியாயங்களை முன்வைத்து சமூகத்தின் மனச்சாட்சியை தட்டிக்கேள்வி கேட்ட இலக்கிய போராளி. எல்லாவற்றுக்கும் மேலாக தான் தனக்குள் தகவமைத்துக்கொண்ட - அவ்வப்போது தன்னுடனேயே முரண்பட்டுக்கொண்ட - அரசியல் கொள்கைகளை வீச்சாக பிரசாராம் செய்து அதனை வாசகர்களிடம் ஆழ ஊடுருவிச்சென்று பதிவு செய்து கொண்ட வல்லமையாளன். கடைசியாக குறிப்பிட்ட ஜெயகாந்தனின் கொள்கையுடன்தான் மிகப்பெரிய அளவில் அவருடன் முரண்படவும் அவரளவுக்கு அறச்சீற்றத்துடன் அவரை அணுகவும் வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஒரு ஈழத்தமிழனாக நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.

ஒரு இடதுசாரியாக தனது அரசியல் கொள்கையை வரிந்து கட்டிக்கொண்டு அதனை தனது எழுத்துக்களில் கட்டியம் கூறிய ஜெயகாந்தன், மாறிவந்த கால நீரோட்டத்தில் திராவிடக்கட்சிகளை திட்டித்தொலைத்தார். காங்கிரஸ் கட்சியுடன் இறுக்கமாகி நின்றார். மாநில அளவில், எந்த அரசியல் கொள்கைகைளுடன் உடன்படாது தனிவழியில் பயணப்பட தலைப்பட்டார். அதற்காகவெல்லாம் மூன்றாவது அணி சேர்த்து பெருமுயற்சி செய்தார். எம்.ஜீ.ஆரின் அரசியல் பிரவேசத்தை எள்ளி நகையாடுவதற்கென்றே "சினிமாவுக்கு போன சித்தாளு" என்று கதையை எழுதி தன் சினம் தீர்த்தார். இவையெல்லாம் ஜெயகாந்தனின் ஆற்றல்கள் என்று இன்றுவரை வியந்து நோக்கப்படுபவை.  ஆனால், ஈழத்தமிழர் விடயத்தில் ஜெயகாந்தன் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடு என்ன? ஈழத்தமினத்தின் மீது ஒரு எழுத்தாளனாக அவர் கொண்டிருந்த பார்வை என்ன?

எனது ஒற்றைப்பதில், “மிகவும் அருவருக்கத்தக்கது”

என்னைப்பொறுத்தவரை, அவரது இந்த நிலைப்பாடு அத்தனை பெருமைகளையும் புறம்தள்ளி அவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது என்பேன்.

எண்பதுகளின் ஈற்றில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய அரசு ஈழத்துக்கு தனது இராணுவத்தை அனுப்பிய நடவடிக்கையை வெளிப்படையாக ஆதரித்து கருத்து வெளியிட்ட ஜெயகாந்தன், அந்த படைகள் புரிந்த அட்டூழியத்தையும் அந்த படையினரால் ஒரு தேசமே சுடுகாடாகப்பட்ட கொடூரத்தையும் தமிழகத்தின் எந்த மூலையிலும் - குறைந்த பட்சம் - ஒரு கண்டனம்கூட தெரிவிக்க நாதியற்ற எழுத்தாளராக இருந்திருக்கிறார் என்றால் - விளிம்புநிலை மனிதர்களை தனது கதைக்கருக்களாக கொண்ட இவரது ஆரம்ப கால எழுத்துக்கள் எல்லாம் வெறும் போலி உணர்வில் உதித்த வெற்றுப்பாத்திரங்கள்தானா என்றுதான் தோன்றுகிறது.

கோடம்பாக்கத்தில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட பின்னர், சென்னையில் நடைபெற்ற இரங்கல்கூட்ட மேடையில் ஏறி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு 1990 அண்டிலேயே தனது பேச்சிலே முள்ளிவாய்க்காலை நடத்தி முடித்த மனிதர். அது ஒரு அமைப்பு மீதூன அவரது பார்வை. அதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், மக்களுக்காக போராட புறப்பட்ட இயக்கங்களையும் அவற்றின் போராட்ட முறைகளையும் தூக்கியெறிந்து பொதுவெளியில் தனது பேச்சுக்களில் நார் நாராக கிழித்து தொங்கப்போட்ட ஜெயகாந்தன், ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன கரிசனை கொண்டிருந்தார் என்பது அவருக்கும் அவர் திமிருக்கும்தான் வெளிச்சம். கழிக்கப்பட்ட கடைநிலை மனிதர்கள் பற்றியெல்லாம் பதறி பதறி பாத்திரங்கள் படைத்த உத்தமர், 2009 இல் முடிந்த கொடூரப்போரில் லட்சக்கணக்கான மக்களின் பேரழிவின்போது - ஈழத்தமிழினம் தம் உறவுகளின் பிணங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது - எப்போதும் அகலத்திறந்த தன் அறிவுக்கண்களை எந்த அடுப்பங்கரையில் காயவிட்டிருந்தார் என்று தெரியவில்லை.

சகோதாரப்படுகொலைகளை எதிர்க்கிறேன், விடுதலைப்புலிகளை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு படுகீழ்த்தரமான வகையில் விடுதலைப்புலிகளை நோக்கி "உங்களுக்கு தந்தை இல்லை. தாய் இல்லை. அரசியல் இல்லை..அது இல்லை இது இல்லை. நீங்கள் வன்முறையை வழிபடுகின்ற பாஸிஸ்ட்டுக்கள் என்று ஈனத்தனமான விமர்சனங்களை அள்ளி எறிந்து அப்போதைய இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு சாமரசம் வீசியவர்தான் ஜெயகாந்தன். சரி விடுதலைப்புலிகள் அமைப்புத்தான் ஜெயகாந்தன் பார்வையில் பயங்கரவாதிகள். பாஸிஸ்ட்டுக்கள். தான் நேசித்த ஏனைய தமிழ் அமைப்புக்களின் தொடர்ச்சியான அரசியல் வழிகளுக்காவது நேசக்கரம் கொடுத்தாரா? இல்லை. ஈழத்தமினம் தவிக்கும் - அரசியல் - களத்தில் அநாதைகளாக அந்தரித்துக்கொண்டிருந்த காலப்பகுதியை ஒரு சரியான எழுத்துப்போராளியாக போரிலக்கியமாகமாவது பதிவு செய்தாரா? இல்லை. எல்லாவற்றிலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக்கொண்டு, தனக்கு தோதான கோதாவில் சரச்சைகளை சமைத்து ருசி காணவேண்டும் என்ற சுயநலம் மிக்க எழுத்துலக பிதாமகனாகவே - ஒரு ஈழத்தமிழனாக - என்னால் ஜெயகாந்தனை பார்க்கமுடிகிறது.

யாரும் எட்ட முடியாத பெரு விருட்சமாக வியாபித்து நின்ற எழுத்துலக ஜாம்பவானாக தெரிந்த ஜெயகாந்தனின் விம்பம் இந்தப்புள்ளியில்தான் எனக்குள் நொருங்கிவிடுகிறது. பொதுத்தளத்தில் குறைந்தபட்சம் நடுநிலையாளராகக்கூட நின்று தான் சார்ந்த இனத்தின் வலியை பதிவுசெய்யமுடியாதவராக ஒரு பலவீனம் மிக்க பேனாவை ஜெயகாந்தன் சுமந்திருக்கிறார் என்று தெரிந்துகொண்ட தருணத்திலேயே இந்த சிகரம் என்னுள் சிதிலமாகிவிடுகிறது.

தான் சார்ந்த அனைத்து கொள்கைகளையும் காலத்துக்குக்காலம் மாற்றியமைத்து அதற்கு தர்க்க விளக்கமளித்த ஜெயகாந்தன், சரியோ பிழையோ தனது எழுத்தின் மீதான கர்வத்தை மட்டும் மாறாமல் தன்னுள் தக்கவைத்திருந்தார். அதற்கும் அவருக்கும் எனது அஞ்சலிகள்!

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...