Monday, April 27, 2015

சிவராம்: ஊடக ஆளுமையின் ஒப்பற்ற உறைவிடம்


2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி..பிற்பகல் 3 மணியிருக்கும்..
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் உடலம் நெல்லியடி மாயானத்தில் தீயிலே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்த உற்றார், உறவினர், நண்பர்கள், தமிழ் தேசிய செயற்பட்டாளர்கள், பத்திரிகை நண்பர்கள் என அனைவரும் வெறித்த பார்வையுடன் மனமெங்கும் வெறுமை நிறைந்தவர்களாக அந்த மயானத்தின் சுற்றாடலில் நின்றுகொண்டிருந்தார்கள்.
மயானத்தின் மூலையிலிருந்த வேப்பமரத்திற்கு கீழே என்னுடன் கொழும்பிலிருந்து கிளிநொச்சியூடாக வந்த பத்திரிகை நண்பர்களும் லண்டனிலிருந்து வந்த அனஸ் அண்ணாவும் மட்டக்களப்பிலிருந்து நடேசன் அண்ணாவின் உடலத்தோடு வந்திருந்த ஊடகவியலாளர்கள் சண். தவராசா மற்றும் துரைரட்ண ஆகியோரும் நின்றுகொண்டிருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத மௌனம். "அடுத்தது யாரோ" என்று மனதுக்குள் மரண ஓலமிடும் கிழக்கின் தொடர்கொலைகளின் ஒப்பாரிகள் மண்டைக்குள் தனி அலைவரிசையில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நேரம்.
"சண்ணும் துரையும் இனிக்கொஞ்சம் யோசிக்க வேணும் திரும்பி அங்க போறத பற்றி. அவன் போற போக்க பாத்தா ஒண்டொண்டா போட்டுத்தள்ளப்போறான் போல கிடக்கு. உதயகுமாருக்கும் பாதுகாப்பு இல்ல. எல்லாரையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வாறதுதான் புத்திசாலித்தனம்" என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் தளதளத்த குரலில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மெதுவான குரலில் ஆலோசனை கூறினர். சண் அண்ணையும் துரையண்ணையும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு எதுவமே பேச முடியாதவர்களாக கனத்த நெஞ்சத்துடன் நின்றுகொண்டிருந்தனர். "குடும்பத்த கூட்டிக்கொண்டு வாறதுக்காவது போகவேணுமடா" என்று சண் அண்ணை சொல்ல, என்ன செய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாதவர்களாக - கொஞ்சம் கொஞ்சமாக - அங்கிருந்து கிளம்புகிறோம்.
நடேசன் அண்ணையின் இழப்பு எமக்கெல்லாம் பாரிய இடியாக விழுந்திருந்தாலும் அடுத்தது யாரை கருணா குழு போட்டத்தள்ளப்போகிறார்கள் என்று எண்ணிப்பார்க்கையில் அப்போதைக்கு மனதுக்கு நிம்மதி தந்த ஒரே விடயம், அந்த நேரம் சிவராம் அண்ணா வெளிநாட்டு பயணம் ஒன்றுக்கு சென்றிருந்ததாகும். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த நாள் முதல் அடுக்கடுக்காக ஒவ்வொரு நாளும் கிழக்கில் மூலைக்கு மூலை துப்பாக்கி சன்னங்கள் சல்லடை போட்ட சடலங்கள் வீசிக்கிடந்தாலும் ஊடகவியலாளர்களின் தலைகளின் மீது இவ்வளவு சர்வ சாதரணமாக துப்பாக்கி குண்டை இறக்குவார்கள் என்று எவரும் நம்பவில்லை. ஏனெனில், கிழக்கு ஊடகவியாளர்கள் பலரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா இயங்கிய காலத்தில், கருணாவுடன் மிக நெருக்கமாக அந்நியோன்யமாக பழகியவர்கள்.
ஆனால், நடேசன் அண்ணையின் படுகொலையுடன் சிவராம் அண்ணனின் மீதுதான் அனைவரின் கவனமும் திரும்பியது. வெளிநாட்டில் இருந்த சிவராம் அண்ணைக்கு எத்தனையோ தொலைபேசி அழைப்புக்கள். அவரது தமிழ் நண்பர்கள் மாத்திரமல்ல. கொழும்பிலிருந்த அவரது சிங்கள நண்பர்கள், பத்திரிகை சகாக்கள் என பலர் சிவராம் அண்ணாவை தொடர்புகொண்டு, "தயவுசெய்து இங்கே திரும்பி வரவேண்டாம். நிலமை படுமோசமாக உள்ளது. நடேசன் அண்ணையை போட்டுத்தள்ளினவங்களுக்கு உங்கள போடுறதுக்கு கன நேரமாகாது. பார்த்து, நிதானமாக கொஞ்சம் தணிஞ்சா பிறகு வாறதுதான் நல்லம்" என்று கெஞ்சாத குறையாக விண்ணப்பம் போட்டனர்.
ஆனால், சிவராம் அண்ணையோ அவருக்கே உரித்தான சிங்கக்குரலில் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, அங்கிருந்தே வீடியோ வடிவில் ஊடகமொன்றுக்கு செவ்வியளித்தார். அதாவது "என்னையோ நடேசனையோ போட்டுத்தள்ளுவதன் மூலம் மட்டக்களப்பு மக்களுக்காக போராடப்புறப்பட்டுவிட்டதாக கூறி புலிகள் அமைப்புடன் முரண்பட்டுக்கொண்ட கருணா எதையும் சாதிக்கப்போவதில்லை" என்று முகத்திலடித்தாற்போல கூறினார். அது மட்டுமல்ல. அடுத்த வாரமே கொழும்பில் வந்திறங்கினார்.
எனக்கு இன்றும் அந்த நாள் பசுமரத்தாணி போல நெஞ்சில் நிற்கிறது. வீரகேசரியின் ஆசிரியர்பீடத்திலிருந்து விளம்பர பிரிவின் ஊடாக வெளியே வந்த நான், பிரதான வாயிலின் ஊடாக உள்ளே வந்த சிவராம் அண்ணையை பார்த்து அப்படியே உறைந்துபோய்நின்றேன். எக்காள சிரிப்புடன் "என்ன நான் வரமாட்டன். இனி கட்டுரை எழுதுற வேலையில்லை எண்டு நினைச்சீராக்கும். இண்டைக்கு இரவுக்கு வெடி இருக்கு பாரும்" என்று சொல்லிட்டு உள்ளே வந்தார். எனக்கு மட்டுமல்ல அலுவலகத்தில் அவரை பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.
அன்று இரவு, தலையங்கம் போடச்சொன்ன கட்டுரையின் பெயரே, "நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி" அவர் சொல்ல சொல்ல நான் எழுதிய அன்றைய கட்டுரையும் அடுத்தவாரம் எழுதிய "கருணா ஓடியது எதற்காக" என்ற கட்டுரையும் கிட்டத்தட்ட - என்னைப்பொறுத்தவரை - அவரது ஆயுளை தீர்மானித்துவிட்டன. தனது உற்ற நண்பன் நடேசனை இழந்த வேதனையும் அவர் உயிருக்கு உயிராக நேசித்த கிழக்கு மண் மீதான கொலைப்படலமும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே அவரைக்கொண்டு சென்றிருந்தாலும் மிக நிதானமாக பொறுப்பான சொற் பிரயோகங்களினால் கருணாவின் நடவடிக்கைகளை தனது கனதியான கட்டுரையின் மூலம் தீர்த்துக்கட்டினார். அது மட்டுமல்லாமல், கருணாவின் முட்டாள்தனத்தையும் முரட்டுப்போக்கையும் மக்களுக்கு தோலுரித்துக்காட்டினார். இவையெல்லாம், சிவராம் அண்ணையை பகையாளியாக பார்த்த கொலையாளிகளுக்கு மேலும் மேலும் இரத்தத்தை சூடேற்றியிருக்கும். உண்மையின் பக்கமிருந்து கிழக்கு மக்களுக்கு தெளிவேற்படமுனைந்த சிவராம் அண்ணையின் எழுத்துக்கள் நிச்சயம் அவர்களின் குறிக்கோளுக்கு குழிதோண்டியிருக்கும்.
கடைசியில் முடிவு என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தேசியத்தின் மீது தீராத பற்றுறுதியையும் தமிழனுக்கே உரித்தான வீரத்தையும் கொள்கைகளாக கொண்டவர்கள் எல்லோரையும் மரணம்தான் அதிகம் காதலித்திருக்கிறது. இதில் சிவராம் அண்ணையும் விதிவிலக்கில்லாத கொள்கைவாதியாக இணைந்துகொண்டுவிட்டார்.
இன்று , 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி. சிவராம் அண்ணா கடத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நள்ளிரவு 12.30 மணிக்கும் பின்னர்தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சடலத்தை சோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். சுடப்பயன்படுத்திய துப்பாக்கி முதல்கொண்டு எப்போது சுட்டிருக்கலாம் என்ற நேரம் வரை கண்டுபிடித்தாயிற்று. ஆனால், நாட்டின் உயர்ந்த நீதிபரிபாலன அவையாக கருதப்படும் நாடாளுமன்ற கட்டடத்துக்கு 500 மீற்றர் தொலைவில் இழுத்துவந்து சுட்டுக்கொன்றுவிட்டு சென்ற கொலையாளியை மட்டும் பத்து வருடங்களாக சிறிலங்கா காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியவே இல்லை.
ஆனால், ரணிலின் ஆட்சியில் சிங்களத்தால் தத்தெடுக்கப்பட்ட கருணா மகிந்தவின் மடியிலும் தவண்டு விளையாடி இன்று மறுபடியும் ரணில் - மைத்திரி அரசின் அரவணைப்பிலும் சமத்தாக இருக்கிறார். மட்டக்களப்பு மக்களுக்காக புலிகளுடன் போரிட்டு அதிலிருந்து புறப்பட்டுவந்தவர், கொழும்பிலிருந்துகொண்டு சிங்களத்தில் பாடுகிறார். ஜனநாயகமெல்லாம் பேசுகிறார்.
மாலையின் நடுவிலிருந்த படத்திலுள்ள சிவராம் அண்ணனின் முகத்தில் படர்ந்துள்ள அந்த சிரிப்புக்கு எந்த அர்த்தத்தை பொருத்திப்பார்த்தாலும் சரியாகத்தானிருக்கிறது.

(இந்தக்கட்டுரை  "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்)

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...