Thursday, April 30, 2015

"பாலி 9: பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!


எண்மரும் சுட்டுக்கொல்லப்பட்ட மரணதண்டனை திடல்

உலகின் வழமையான இயல்பு ஒழுங்கிலிருந்து வித்தியாசமாக நடைபெறும் சம்பவங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். அண்மையில் பாலியில் இடம்பெற்ற மரண தண்டனையும் அவ்வாறான ஒரு விடயமே ஆகும். தனிமையான மரணத்தீவொன்றில் நடைபெற்று முடிந்த - ஈரக்குலையை நடுங்கவைக்கும் - எட்டு மரணங்களினதும் அதிர்வுகள் நாளுக்கு நாள் ஊடகங்களில் மிரட்டிக்கொண்டேயிருக்கின்றன.

கடந்த 29 ஆம் திகதி இந்தோனேஷிய நேரம் 1225 மணியளவில் இடம்பெற்ற இந்த மரணங்களின் கடைசி மணித்துளிகளில் இடம்பெற்ற சம்பவங்களை இந்தோனேஷிய, ஆஸ்திரேலிய ஊடகங்கள் இன்னும் விட்ட பாடில்லை. அது இனியும் ஓயப்போவதாகவும் தெரியவில்லை.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை வழங்குவது என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்பது பேரும் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாலித்தீவிலிருந்து உயர் பாதுகாப்பு மிக்க தீவொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மரண தண்டனை நிறைவேற்றுவேற்றுவதற்கென பயன்படுத்தப்படும் தனிமையான இந்த தீவில் பல கொடூரமான கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் வெளியுலகுக்கான தொடர்புகள் இவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்றும் இந்தோனேஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மரண தீவுக்கு கொண்டுசெல்லப்பட்ட மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ ஷான் உட்பட்ட ஒன்பது பேரும் பேசி என்ற சிறையில் தனித்தனி தடுப்பு அறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையிலான தொடர்புகள்கூட மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த தீவுக்கு இடமாற்றப்பட்டதிலிருந்து இன்றைக்கோ நாளைக்கோ என்று இழுபட்டுவந்த இவர்களின் மரணதண்டனை ஊடகங்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மறுபுறத்தில், சம்பந்தப்பட்ட அரசுகள் தங்களது குடிமக்களை கொலை செய்யவேண்டாம் என்று மாறி மாறி கோரிக்கை விடுத்தவண்ணமே இருந்தன.


கடந்த ஏப்ரல் 17 அன்று பேசி சிறையில் மயூரன் - இறப்பதற்கு 12 நாட்களுக்கு முன்னர் - கொண்டாடிய கடைசி பிறந்ததினம்

இந்த மரண தீவுக்கு இவர்கள் இடமாற்றப்பட்டதிலிருந்து நடந்த  ஒரேயொரு நல்ல சம்பவம் என்றால், மயூரன் தனது 34 பிறந்ததினத்தை உயிரோடு இருக்கும்போதே கொண்டாடியதுதான். சாவின் நிழல் அவனை தொடர்ந்துகொண்டே வந்தபோதும், சகோதரன் சிந்துஜன் சிறைக்கு அனுப்பிய கேக்கினை வெட்டி தனது சிறை சகாக்களுடன் பிறந்தநானை கொண்டாடினான். அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இன்னும் 12 நாட்களில் இறக்கப்போகிறோமே என்ற சிறு அச்சம்கூட அவன் முகத்தில் தெரியவில்லை.

கடந்த 26 ஆம் திகதி, இந்தோனேஷிய அரசு ஒன்பது பேருக்குமான மரணதண்டனையை உறுதி செய்து 72 மணி நேர காலக்கெடு வழங்கியதுடன் இவர்களது வாழ்வின் எஞ்சியிருந்த மணித்துளிகளை உலகமே எண்ணத்தொடங்கியது. ஆனாலும், இவர்களுக்கு கடைசி நேர வாய்ப்பு ஏதாவது கிட்டதா என்று உள்ளுக்குள் தீராத அங்கலாய்ப்பும் இருந்தது.

இந்தவேளை, அன்ட்ரூ ஷான் தான் தான் காதலித்த இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்ய முடிவுசெய்தான். அன்ட்ரூ ஷானை அடிக்கடி சிறையில் சென்று பார்வையிட்ட பெபி என்ற இந்தப்பெண் காலப்போக்கில் காதல் வீழ இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயமாகியிருந்தனர். ஆனால், கடந்த 26 ஆம் திகதி பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். சாவை அணைக்கும் முன்னர் தன் காதலியை அணைத்துக்கொண்ட அன்ட்ரூ, சிறையில் சிம்பிளாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் அப்படி ஒரு சந்தோஷத்தில் திளைத்திருந்தான்.


பாதிரியாரின் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெற்ற அன்ட்ரூ - பெபி திருமணம்

நாட்கள் ஒன்றொன்றான நகர்ந்தன. ஓன்பது பேரும் சாவை நோக்கி ஒவ்வொரு மணித்துளியாக நகர்ந்தனர். இந்த உலகம் அவர்களையும் அவர்கள் இந்த உலகையும் பார்க்கும் நிமிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கின.

ஏப்ரல் 28 ஆம் திகதியும் வந்தது. அன்றிரவு 12 மணிக்கு ஒன்பது பேரையும் துப்பாக்கிகள் தின்ற பின்னர் இறுதிநிகழ்வுகள் செய்வதற்கான சவப்பெட்டிகள் மரண தண்டனை வழங்குமிடத்தை நோக்கி வாகனங்களில் பறந்தன.

கைதிகள் அனைவரும் தங்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்களை பார்வையிடுவதற்கான கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சோகமும் அழுகையும் பிரிவின் உச்சமும் நிறைந்த அந்த சந்திப்பை எந்த மொழியிலும் வர்ணித்துவிட முடியாது. “பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த உன் பிள்ளையை இழுத்துச்சென்று கட்டிவைத்து சுட்டுக்கொல்லப்போகிறார்கள். இதுதான் உன் கடைசி சந்திப்பு, சிரித்து பேசிவிட்டு போ” என்று கூறினால், எந்த கல்நெஞ்சக்காரிதான் பொறுத்துக்கொள்வாள். சட்டம், நீதி, தண்டனை, அரசியல் என்ற சமரசம் இல்லாத சொற்களுக்கெல்லாம் அப்பால், மனிதாபிமானம், பாசம், காதல் போன்ற ஆன்மாவுடன் பின்னிப்பிணைந்த உணர்வுகளை சாமாதானப்படுத்துவது என்பது எந்த நீதிபதியாலும் முடியாத காரியம். அதுதான் அன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருந்து. தமது கடைசி சந்திப்பில் மயூரன் உட்பட பலரும் தமது உறவுகளுடன் கே.எவ்.ஸி. சாப்பிட்டனர். சந்திப்புக்கான நேரம் முடிவடைந்த பின்னர், உறவுகள் கதற கதற கைதிகளை உள்ளே அழைத்து சென்றனர் காவல்துறையினர்.

இதி;ல் மிகக்கொடுமையான தண்;டனை கிடைத்தது பிறேசில் நாட்டை சேர்ந்த றொட்ரிக்கோ என்பவனுக்குத்தான். 42 வயதான றொட்ரிக்கோ கடந்த 2004 ஆம் ஆண்டு ஜகார்த்தா விமானநிலையத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவன். கைது செய்யப்பட்ட பின்னர் மிகக்கடுமையான உளவள சிக்கல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்த நோயின் பாரதூரம் குறித்து இந்தோனேஷிய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உத்தரவி;ன் பேரில் முதலாவது மருத்துவ சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது மருத்துவ சோதனைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் அவனுக்கு எதிரான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


மரணதண்டனை திடலுக்கு உளவள ஆலோசகராக சென்று கலந்துகொண்ட ஐரிஷ் கிறிஸ்தவ மதப்பெரியார் சார்லி பரோஸ்

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், சாவினை எதிர்கொள்வதற்கு இயன்றளது தெம்பினை - மத ரீதியான ஆலோசனைகள் மூலம் - வழங்குவதற்கு பாதிரியார் சார்வி பரோஸ் மரணத்தீவுக்கு சென்றிருந்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர் தெரிவித்துள்ள செவ்வியில் -

“மிக மோசமாக மனநிலை பாதிக்கப்பட்ட றொட்ரிக்கோவுக்கு அவன் கொலை செய்யப்படப்போகிறான் என்ற விடயம் கடைசி நிமிடம்வரை தெரிந்திருக்கவில்லை” – என்று கூறியுள்ளார்.

“சுமார் ஒன்றரை மணிநேரம் உளவள ஆலோசனை வழங்கி மரண தண்டனை விதிக்கப்படவிருந்த இடத்துக்கு கூட்டி செல்லும்போது, ‘என்னை கொல்லப்போகிறார்களா’ என்று றொட்ரிக்கோ கேட்டான். நானும் ‘ஆம்! நான் உனக்கு முதலே விளங்கப்படுத்தியிருந்தேன் அல்லவா’ என்று கூறினேன். அதற்கு அவன் ‘என்னை கொல்வதற்கு வெளியே சினேப்பருடன் யாரும் காத்திருக்கிறார்களா’ என்று கேட்டான். நான் ‘இல்லை’ என்றேன். ‘அப்படியானால், காரில் வைத்து என்னை சுடப்போகிறார்களா’ என்று றொட்ரிக்கோ கேட்டான். அதற்கு நான் ‘இல்லை’ என்றேன். அதன் பின்னர், ‘எனக்கு இப்போது 72 வயது. இன்னும் கொஞ்சக்காலத்தில் நானும் நீ போகவுள்ள சொர்க்கத்துக்கு வந்துவிடுவேன். நீ எனக்கு ஒரு வீடொன்றை கண்டுபிடித்து அதில் பூங்கா எல்லாம் தயார் செய்து வை. நான் வெகுவிரைவில் வந்துவிடுவேன்’ என்று நான் கூறினேன்.

றொட்ரிக்கோ மிகவும் மென்மையானவன். மெதுவாக பேசுபவன். மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த கடைசி நேரத்தில், மிகக்கடுமையான உளவளச்சிக்கலுக்கு உள்ளாகி சாவு என்ற சொல் கேட்டு குழப்பமடைய தொடங்கிவிட்டான். அதனால், அவனை சாந்தப்படுத்தி சிக்கலில்லாமல் சாவை சந்திக்க தயார்படுத்துவதற்காக, அவன் கம்பத்தில் கேபிளால் கட்டிவைக்கப்பட்டிருந்த நேரத்திலும் என்னை மீண்டும் பார்வையிட்டு பேச அனுமதித்தனர்.

அப்போது, ‘நான் முன்பொரு காலத்தில் ஒரு சிறிய தவறு செய்தேன். அதற்குப்போய் இப்படி என்னை கொல்லக்கூடாது. இது சரியில்லை’ என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே, சட்டமும் சன்னங்களும் தங்கள் கடமையை செவ்வனே செய்து உயிரற்ற அவனது உடலத்தையும் பெட்டிக்குள் கிடத்திவிட்டன.

மரணதண்டனை வழங்கப்பட்ட இடம் ஒன்பது பேருக்கும் முதலில் தயார் செய்யப்பட்டிருந்தது. காட்டின் நடுவில் வெளியாக்கப்பட்ட பிரதேசத்தில், அகன்ற கொட்டில் அமைக்கப்பட்டு நான்கு மீற்றர் இடைவெளியில் ஒன்பது கம்பங்கள் நாட்டப்பட்டன. இந்த கம்பங்களை சிலுவை வடிவில் அமைக்கப்பட்டு, தனித்தனி தடுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் அங்கு கொண்டுவரப்பட்டு கம்பங்களில் கேபிளால் கட்டப்பட்டனர். துப்பாக்கி பிரயோகத்துக்கு அஞ்சுபவர்கள் முதலிலேயே கூறினால் அவர்களின் முகத்தை கறுப்பு துணியால் மூடிவிடுவதற்கான வாய்ப்பு கைதிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஒருவரும் அதற்கு உடன்படவில்லை. உயிர்வாழும் கடைசிக்கணம் வரை இந்த உலகை பார்த்துக்கொண்டே சாகவேண்டும் என்று அனைவரும் கூறிவிட்டனர்.


மனநிலை பாதிக்கப்பட்டவனாக உயிரிழந்த பிரேஸிலை சேர்ந்த றொட்ரிக்கோ

மரணவீடுகளில் சாவினை தழுவிக்கொண்டவர்கள் சொர்க்கத்துக்கு சுகமாக போய் சேரவேண்டும் என்ற பிரார்த்தனைக்காக பாடப்படும் கிறீஸ்தவ பாடலை பாடிக்கொண்டே கைதிகள் அனைவரும் மரணதண்டனை திடலுக்கு வந்தனர். அனைவரிலும் மயூரனும் அன்ட்ரூவும்தான் அந்த பாடலை உரத்துப்பாடிக்கொண்டு வந்ததாக மதப்பெரியார் கூறியுள்ளார்.

மரண தண்டனை வழங்கப்படுவதற்கு சரியாக ஒரு மணிநேரத்திற்கு முன்னர், தண்டனை நிறைவேற்றப்படவிருந்த பிலிப்பீன்ஸை சேர்ந்த பெண்ணின் மரணதண்டனையை பிற்போடுவதாக சட்ட மா அதிபர் அறிவித்ததை அடுத்து மீதி எட்டுப்பேர் மாத்திரமே திடலுக்கு அழைத்துவரப்பட்டனர்.

1225 மணிக்கு மரணதண்டனை திடலுக்கு அழைத்து வந்து கம்பங்களுடன் கட்டப்பட்ட கைதிகள் அனைவரின் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு சகல ஆயத்தங்களும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கைதியும் கடைசியாக மூச்சிழுத்து தம்மை முயன்றளவு அமைதிகொள்ள மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டது.

1235 மணிக்கு படபடவென வெடித்த எம்.16. துப்பாக்கி சன்னங்கள் எட்டுப்பேரினதும் நெஞ்சுகளை துளைத்தன. ஏதையும் துணிச்சலுடன் செய்தால் வெற்றியே. அதில் எல்லாமே அடங்கும் என்று ஆயிரம் ஆயிரம் உயிர்களை கொல்லும் போதைப்பொருளை துச்சமென சுமந்த அந்த மேனிகள் சுருண்டு வீழந்தன.

0102 மணிக்கு எட்டு உடலங்களையும் சோதனை செய்த மருத்துவர், எட்டுப்பேரும் உயிரிழந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்தார். இந்த மரண தண்டனை தீவிலிருந்து மிக அருகிலுள்ள தீவில் நின்றுகொண்டிருந்த கைதிகளின் உறவுகளுக்கு இந்த துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டதாக பின்னொரு தகவல் தெரிவித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து போல, எல்லாமே நடந்து முடிந்தது.


கைதிகள் கட்டிவைத்து சுடப்பட்ட சிலுவைக்கம்பம்

உடலங்களை கழுவி தூய்மைப்படுத்திய பின்னர், ஏற்கனவே தயார்நிலையிலிருந்த சவப்பெட்டிகளில் எண் வரிசைப்படி அவை வைக்கப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தோனேஷியர் ஒருவரின் சடலம் அந்த தீவுக்கு அருகாமையிலிருந்த தீவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய, நைஜீரிய, பிரேஸில் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுபேரினதும் உடலங்கள் பத்து மணிநேர பயணம் மூலம் தரைவழியாக தலைநகர் ஜகார்த்தாவுக்கு கொண்டுவரப்பட்டு, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)

பாலி - 9 ; பாகம் - 1: பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...