Monday, April 13, 2015

OK கண்(மணி) படத்தில் OMG! இந்த இசைக்கனி!!


Coke Studio நிகழ்ச்சியில் பாட வந்த கனடாவின் இசைக்குயில் ஒன்றை "கோச்சடையான்" படத்தின் பாடல் ஒன்றை ஹிந்தி version இல் பாடவைத்து தனது இசை சாம்ராஜ்யத்திற்குள் கட்டி இழுத்து வந்த ரஹ்மான், "OK கண்மணி" படத்தில் கொடுத்திருக்கும் ஒரு பாடலால் கடந்த இரண்டு வாரங்களாக எனது தலை கிறங்கடித்துப்போயுள்ளது.

பாடகி - சாஷா திருப்பதி
பாடல் - "நானே வருகிறேன்"

வரிகள், குரல், இசை என்று எல்லாமே புதுமைகள் அடங்கிய ஆக இந்த பாடல் பெரிய அளவில் பண்ணியிருக்கிறது.

முதில் இந்த பாடலின் இசையை எடுத்துக்கொண்டால் -

ரஹ்மான் தனது முதல் படத்திலேயே பயன்படுத்திய தர்பாரி கானடா ராகம்தான். "புதுவெள்ளை மழை" என்று உன்னிமேனன் - சுஜாதா குரல்களால் காஷ்மீர் பனிவெளியை கண்முன்னே கொண்டுவந்த அந்த அத்வைத ராகத்தை பின்னொரு நாளில் "ரிதம்" படத்தில் உன்னி மேனனையும் கவிதா கிருஷ்ணமூர்த்தியையும் வைத்து "காற்றே என் வாசல் வந்து" என்று காதோரம் வந்து கதைபேசியிருப்பார்.


இந்த ராகத்தில் வித்தைகள் காண்பிக்காத இசை மேதைகள் இல்லை என்று கூறலாம். ஒவ்வொரு இசையமைப்பாளனும் இந்த ராகத்தை சரியாக தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடுகின்றபோது பிரவசமாகின்ற பாடல்கள் பயங்கர பிரபலமாகி விடுகின்றன. கே.வி. மகாதேவன் இசையில் வெளயான "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை" பாடலாக இருக்கட்டும் எம்.எஸ்.வியின் "வசந்தத்தில் ஓர் நாள்" பாடலாக இருக்கட்டும் இளையராஜாவின் "ஆகாய வெண்ணிலாவே" பாடலாக இருக்கட்டும் எல்லாமே பிரபலமான பாடல்கள் என்பதற்கு அப்பால் காலத்தை தாண்டியும் கோலோச்சுகின்றன அருமையான மெட்டுக்கள். ஆனால், தர்பாரி கானடா ராகத்தில் - என்னைப்பொறுத்தவரை - வித்தியாசமான முயற்சிகளில் இறங்கி அதில் பயங்கர வெற்றியை ஈட்டியவர் "மெலடி மன்னன்" வித்யாசாகர்தான். இந்த ராகத்தில் அவர் போட்ட "நீ காற்று நான் மரம்" "ஒரே மனம். ஒரே குணம்" "என்னை கொஞ்சம் கொஞ்சம்" என்ற பாடல்களுடன் ஒரு காலத்தில் தமிழ் திரையிசைகளின் தேசிய கீதமாக பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த "மலரே மௌனமா" ஆகியவை இந்த ராகத்தின் மகத்துவத்தை உணர்த்திய இசைச்சித்திரங்கள்.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு ராகத்தை ரஹ்மான் இம்முறை கையாண்டிருக்கும் பாங்கு வித்தியாசமானது என்றே கூறவேண்டும். இந்த பாடல் முழுவதுமே கமஹங்கள்/சங்கதிகள் உருண்டோடியவண்ணமுள்ளன. வரிக்குவரி எழுத்துக்கு எழுத்து பாடகி சாஷா கமஹங்களால் அர்ச்சனை செய்திருக்கிறார். இது உண்மையில், ரஹ்மானின் ஆரம்ப கால "உதயா உதயா" பாணி என்றாலும்கூட "நானே வருகிறேன்", பாடல் முழுவதுமே கமஹங்களால் கோர்க்கப்பட்ட இசைச்சரமாக மின்னுகிறது. கமஹங்கள் நிறைந்த பாடல்களால் தங்கள் திறமையை நிரூபிப்பதற்கு "தேசுலாவுதே தேன் மலர்" மற்றும் 'இசையில் தொடங்குதம்மா" போன்ற பாடலை தெரிவு செய்யும் reality show போட்டியாளர்களுக்கு இந்த பாடல் புதிய தீனி என்று கூறலாம். ஆனால், முறையாக சங்கீதம் பயிலாதவர்கள் பாடலுக்கு கிட்டவும் வரவேண்டாம் என்று முகத்தில் அறைந்தாற் போல்  பாடியுள்ள சாஷா, இனிவரும் படங்களில் ரஹ்மானின் இசை செல்லமாக ஷ்ரேயா, சின்மயி வரிசையில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

இனி பாடகி சாஷாவை சற்று "சைட்" அடிப்போம். 

எழுபதுகளிலேயே காஷ்மீரிலிருந்து புறப்பட்டு சென்று கனடாவில் செட்டில் ஆகிக்கொண்ட இந்திய வம்சாவளியில் வந்த கனடிய இசைக்குயில் சாஷா. உள்ளுர் நிகழ்ச்சிகளில் பிரபலமாகி, ரஹ்மானின் Coke Studio நிகழ்ச்சியில் பாட தெரிவாகிறார். அதன் பின்னர், "கோச்சடையான்" படத்தில் பாடுவதற்கு சாஷாவை அழைத்த ரஹ்மான், தமிழில்  லதா ரஜினிகாந்த பாடிய 'காதல் கணவா" பாடலின் ஹிந்தி வேர்ஷனை பாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கிறார். படம் பப்படமாகி அது பாட்டுக்கும் சேதாரம் விளைவித்ததை உணர்ந்துகொண்டாரோ என்னவோ, தொடர்ந்து "காவியத்தலைவன்" படத்தில் "ஹேய் மிஸ்டர் மைனர்" பாடலுக்கும் சாஷாவின் குரலை இசைப்புயல் தெரிவுசெய்துகொள்ள, இம்முறை ரசிகர்களுக்கு அந்த குரலிலிருந்த மந்திரம் புரிந்துவிட்டது.

அந்த மந்திரக்குரலுக்கு சொந்தக்காரியின் "நானே வருகிறேன்" பாடலின் இன்னொரு சிறப்பு, இதில் எனது விருப்பத்துக்குரிய சத்யபிரகாஷ் முதல்முறையாக ரஹ்மானின் இசையில் பாடியிருப்பது. எந்த பாடலையும் நேர்த்தியுடன் பாடவல்ல பயங்கர திறமைசாலி சத்யபிரகாஷ்  கமஹங்கள் உள்ள பாடல்கள் எதையும் தேநீர் குடிப்பது போல சிம்பிளாக சீவி எறிந்துவிட்டு தனக்கு எத்தனை மார்க் வரப்போகுதோ என்று பயபக்தியுடன் பவ்வியமாக நின்றுகொண்டிருக்கும் அவனது 'எயார் டெல் சுப்பர் சிங்கர்' ஞாபங்கள் என்னுள் என்றுமே மறையாத அற்புதமான இசைத்தருணங்கள்.

ஒரு பாடலுக்கு இந்த பெரிய பதிவா என்று நீங்கள் புறுபுறுப்பது சாதுவாக கேட்கிறது. என்ன செய்வது..இரண்டு வாரங்களாக மண்டைக்குள் ரிங் டோன் போல அடித்துக்கொண்டிருந்த பாடல்..இன்னும் எழுதலாம். ஆனால், அடுத்த இசைப்பதிவில் சந்திப்போம்.


(காதல் கணவா பாடலை தமிழில் வித்தியாசமான இசைமுயற்சியில் பாடியுள்ள சாஷாவின் காணொலி)

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...