Sunday, December 20, 2015

ஒரு ஆளுமையின் அஸ்தமனம்!


காலக்காற்று அன்று மட்டும் ஏனோ
கருகிய நாற்றத்துடன் திடீரென மூச்சிரைத்தது.

நீண்ட அமைதிகளுக்குள் நெட்டி முறித்துக்கிடந்த 
வெறுமையான மயான கிடங்குகள்
திடீரென்று இரைகேட்டு பசியோடு அலறத்தொடங்கின

முறிந்து விழுந்த பேனாவின் பாரத்தால்
தாங்கியிருந்த கடைசி ஒற்றையும் 
குறை மையினால் எழுதிய
கடைசி வரிகளை சுமந்துகொண்டு
படைத்தவளின் பின்னால் பறந்து சென்றது

ஊழிக்கூத்தின் கடைசி காட்சியிலிருந்து
வேடம் உரிந்த பாவி பாத்திரங்கள்
காலனின் கழுமரத்தை நோக்கிய
நீண்ட வரிசையில் இணைந்துகொண்டனர்

வரிசையின் கடைசியில் குட்டையாக 
ஒரு தாய் - 

அவர்தான் அருண் விஜயராணி.

பன்முக ஆளுமை கொண்ட இலக்கியவாதி. நெருக்கமாக பழகுவதற்கு என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். தாய்நிலம் தாண்டி காங்காரு நாட்டில் என்னை தத்தெடுத்த இரண்டாம் தாய்.

சிறுவயதிலிருந்து “உனது மாமி ஒரு எழுத்தாளர். உனது மாமி ஒரு எழுத்தாளர்” என்று என் அம்மா அடிக்கடி கூறிவந்த அந்த விகல்பமற்ற விருட்சத்துடன் ஆஸ்திரேலியா வந்துதான் ஆழமாக பழகிக்கொண்டேன். 

என்னை பொறுத்தவரை மாமியின் அளவுகடந்த பாசமும் தன் மூத்த மகன்போல எனை வளர்த்த தாய்மையும் அவரை ஒரு இலக்கிய ஆளுமையாக நான் தரிசிப்பதற்கு அநேக தருணங்களில் அனுமதித்ததில்லை. மிகுந்த எளிமை மிக்கவராக மட்டுமே அவரை என் மனதில் இருத்திக்கொள்ள முடிந்தது. ஆனால், அதையும் மீறி அவரது இலக்கியத்தையும் அவர் கடந்துவந்த எழுத்துலக பாதையையும் அறிந்துகொள்வதற்கு நான் முயற்சித்தபோதெல்லாம் - 

மாமியின் நிழலிருந்து என்னை தொலைவில் இருத்தி பூபதி அண்ணா, கானா பிரபா, சந்திரன் அண்ணா போன்றோர் ஊடாகத்தான் அவரை ஆழமாக படித்தும் கேட்டும் வியந்துகொள்ள முடிந்தது. அதன் பின்னர், நான் வியந்தவற்றை அவருடன் நெருக்கமாக பேசி திருப்திகொள்வதுதான் எனக்கு மிகப்பெரும் கொடையாகவும் அமைந்தது. அந்த வகையில் நான் கொடுத்துவைத்தவன் என்றுதான் கூறவேண்டும்.

மாமியின் எழுத்துக்களிலும் அவரது வாழ்விலும் நான் கண்டுவியந்த மிகமுக்கிய விடயம், அவர் சின்ன சின்ன விடயங்களையும் அழகியல் கண்ணோடு நுணுக்கமாக நோக்கும் வல்லமை என்று கூறலாம். தான் அனுபவிக்கும் பிரதிமைகளை அதே காத்திரத்துடன் மற்றவர்களுக்கும் சொல்லக்கூடிய திறன் கொண்டவர். அவரது அந்த நுண்ணுணர்வு விசாலமானது. 

தான் ரசித்த சின்ன விடயங்களையும் அருமையாக எழுத்தில் கொண்டுவரும் கதைசொல்லித்தனமாக இருக்கட்டும், தான் பார்த்த சிறிய மனத்தாங்கல்மிக்க சம்பவங்களை முக்கியத்துவப்படுத்தி அவற்றுக்கு தீர்வு கொடுக்க தவிக்கும் மனப்பாங்காக இருக்கட்டும், தான் சந்தித்த எல்லா மனிதர்களின்மீதும் பாரபட்சமின்றி மரியாதை கொடுக்கும் பரந்த மனமாக இருக்கட்டும் அனைத்தையும் சளைக்காது மனம்நிறைவாக தொடர்ந்து செய்யக்கூடிய குணங்கள் அவரின் இரத்தத்திலேயே ஓடிக்கொண்டிருந்தன.

நாம் அன்றாட வாழ்வில் காணும் அநேகமானவர்கள் இவ்வாறான குணாதிசயங்களை ஒருவித நாடகத்தனமாகவே தங்கள் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருப்பர். உண்மையை சொல்லப்போனால், மாமி கொண்டிருந்த இந்த நற்குணங்களை ஆரும்பத்தில் நானும் ஆச்சரியத்துடன் கூடிய இந்த சந்தேகத்துடன்தான் பார்த்துதேன். ஆனால், போலியாக நடந்துகொள்பவர்களின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நடிப்பு வெளித்தெரிந்துவிடும். ஆனால், மாமியின் இந்த விநோதமான நற்குணங்கள் எப்போதுமே சேதாரமடையாத செழிப்புடன் அவருடன் தொடர்ந்து பயணித்ததுதான் எனக்கு பின்னாளில் மிகுந்த வியப்பை தந்தது.

உதாரணமாக ஓரு சம்பவத்தை குறிப்பிடலாம். நடிகர் ரஜினிகாந்த் “விடுதலை” படத்திற்கான படப்பிடிப்புக்காக லண்டன் வந்திருந்தார். (அமெரிக்காவில் படப்பிடிப்பக்கு ஒழுங்கானபோதும் கலைஞர்கள் எல்லோருக்கும் விஸா கிடைக்காத காரணத்தினால் லண்டனில்தான் அந்த படப்பிடிப்ப நடைபெற்றது. ஆனால், படத்தில் அந்த காட்சிகள் அனைத்து அமெரிக்க காட்சிகளாகத்தான் பேசப்படும்) ரஜினியை பேட்டி காண்பதற்காக சென்ற மாமிக்கு அவரை சந்தித்து ஒரு இடத்திலிருந்து பேட்டி காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்காக உயரமான கற்குவியல் ஒன்றின் மீது நின்றுகொண்டிருந்த ரஜினியிடம் தான் அவரை பேட்டி காணவந்திருக்கும் செய்தியை மாமி கீழே நின்றுகொண்டிருந்த உதவியாளர் ஒருவரிடம் சொல்லியனுப்பினார். செய்தியை பெற்றுக்கொண்ட ரஜினி, படப்பிடிப்பு நேரம் மட்டுமட்டாக இருப்பதால், இடைவேளையின்போது கற்குவியலின் அரைவாசித்தூரத்துக்கு மாமியை ஏறிவருமாறும் தான் அரைவாசித்தூரம் இறங்கிவருவதாகவும் கூறி, அங்கேயே ஒரு இடத்திலிருந்து பேட்டியை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார். அதுபோலவே, மாமியும் அங்கு சென்று ரஜினியுடனான பேட்டியை பெற்றுக்கொண்டார். 


மிகுந்த பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியிலும் தனது கோரிக்கையை ஏற்று தனக்கு பிரத்தியேக பேட்டியை வழங்கிய நடிகர் ரஜினியை மாமி தன் வாழ்நாள் முழுவதும் மிகவும் மரியாதைக்குரிய நடிகராகவே கூர்ந்தார். 

ஏத்தனையோ பிரபலங்களை மாமி பேட்டி கண்டிருக்கிறார். ஆனால், அந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போதெல்லாம் அவர்களின் நல்ல குணாதிசயங்களை மட்டுமே அதிகம் பேசுவார். 

இயக்குனர் பாலச்சந்தர் “அபூர்வராகங்கள்” படத்தில் பெண்களின் உணர்வை மிகவும் சாதரணமாக தூக்கியெறிந்தது போல நோகடித்திருந்தார் என்று விமர்சித்திருந்த மாமி, இயக்குநர் சிகரத்தை ஒரு தடவை விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது நேரில் கண்டு தனது கருத்தினை கூறியபோது, மாமியின் மனம்நோகும்படி ஒரு பதிலை பாலச்சந்தர் கூறியிருந்தார். ஆனாலும் அதற்காக அவரை மாமி வெறுக்கவில்லை. கடைசிவரை, பாலச்சந்தரின் படங்களின் மீதும் அவரது கதாபாத்திர படைப்புக்களின் மீதும் அவருக்கு மிகுந்த மதிப்பு இருந்திருந்தது. நெருங்கிய இலக்கிய நண்பர்களாக பழகிய எஸ்.பொ. உட்பட சிலர் பிற்காலத்தில் கருத்துக்களால் முரண்பட ஆரம்பித்தபோதும் அவர்கள் மீதெல்லாம் மாமி மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தார். 

கண்ணதாசனின் பாடல்களுக்கு மாமி ஒரு முழுமையான அடிமை என்று கூறலாம். கிட்டத்தட்ட அவரது அனைத்து திரையிசை பாடல்களும் மாமிக்கு மனப்பாடம். புராண இதிகாசங்களையெல்லாம் சாமான்ய ரசிகனுக்கு புரியக்கூடிய வகையில் - இலகு தமிழில் - தத்துவார்த்தமாக - திரையிசை பாடல்களில் எழுதிய கண்ணதாசனின் பாணியை மாமி வியந்து வியந்து பேசிக்கொண்டே இருப்பார். கண்ணதாசனின் பாதிப்பு இல்லாமல் மாமியின் எந்த ஆக்கமும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு தூரம் அவரது கவிதைகளையும் பாடல்களையும் ஆத்மார்த்தமாக நேசித்தார். 

தன் வாழ்விலும் பிறர் வாழ்விலும் இடம்பெற்ற நல்ல – தீய சம்பவங்கள் அனைத்திலும் கண்ணதாசன் பாடல் ஒன்றை குறிப்பிட்டு கவியரசர் வாழக்கையை எவ்வளவுதூரம் தீர்க்கதரிசனத்துடன் - நீக்கமற - வாழ்ந்திருக்கிறார் என்று நினைவு கூருவார். 

தோல் மீதான தொற்றுநோய் வந்து உடல் முழுவதும் அது பரவி, செழிப்பான அவரழகை கொன்று தின்றுவிட்ட கடந்த ஐந்து வருட காலத்தில், முன்பு போல எந்த நிகழ்ச்சிகளுக்கும் மாமி அதிகமாக போனதில்லை. அப்போதெல்லாம், “உங்கள் வருத்தம் மாறிவிடும் மாமி கவலைப்படாதீர்கள். பழையபடி நீங்கள் மேடைகளில் தோன்றுவீர்கள். உங்கள் இலக்கியம் மீண்டும் துளிர்விட்டு பேசும் பாருங்கள்” – என்று கூறும்போதெல்லாம், ஒரு சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு – 

“கோடையில் இனிமேல் மழை வரலாம் - என் 
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ” – என்று சொல்வார். அவ்வாறு அவர் கூறும்போது உயிரை உருவி வெளியில் எறிந்ததுபோல இருக்கும். 

தனது வாழ்நாளில் சந்திக்க விரும்பி முடியாமல்போன மனிதர்கள் என்று அன்னை திரேசாவையும் கண்ணதாசன் பற்றியும் மாமி அடிக்கடி குறிப்பிடுவார்.

ஆஸ்திரேலியாவுக்கு நான் வந்த புதிதில் சினிமா தவிர அவருடன் நான் பேசிய அனைத்து விடயங்களிலும் கடுமையான விவாதங்கள் நடக்கும். சில சமயங்களில் எங்களுக்கு மத்தியில் மாமா வந்து பஞ்சாயத்து பார்க்குமளவுக்கு விவாதங்கள் வீங்கி வெடித்ததும் உண்டு. தொடர்ச்சியான விவாதங்களுக்கு நேரமில்லாமல் போன சந்தர்ப்பங்களில் மாமிக்கு பதில் கூறவதற்காகவே இரவிரவாக விழித்திருந்து எனது கருத்துக்களை கட்டுரையாக எழுதி சாப்பாட்டு மேசையில்வைத்துவிட்டு போய்விடுவேன். அவற்றை வாசித்துவிட்டு நான் வகுப்புக்கள் விட்டு மாலை வீடுவரும்போது புன்முறவலுடன் தனக்காக நேரம் ஒதுக்கி கட்டுரை எழுதியதற்கு நன்றி சொல்லி, என் தமிழையும் ஊக்கப்படுத்துவார். நான் எழுதுவது அவருக்கு பிடிக்கும். அதை அவர் வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இட்லியை Italy என்று கூறிக்கொண்டு தமிழ் பேசுவதற்கு பெரும் போராட்டம் செய்துகொண்டிருந்த தனது இரண்டாவது மகன் அஜந்தனை, “நீ என்னிடம்தான் தமிழ் பழகிறாயில்லை. தெய்வீகன் அண்ணாவிடமாவது கேட்டு பழகு பாப்பம்” - என்று செல்லமாக கண்டிப்பார். 

மாமியின் அரசியலும் எனது அரசியலும் என்றைக்குமே ஒத்துப்போனதில்லை. இருவருமே எங்கள் கொள்கைகளில் இழகிக்கொண்டதும் இல்லை. ஆனாலும், இதனை மையமாக கொண்டு நடைபெறும் விவாதங்களில் ஒன்றை மட்டும் மாமியிடமிருந்து ஆழமாக கற்றுக்கொண்டேன். அதாவது, கருத்துக்களை எவ்வாறு கருத்துக்களால் எதிர்கொள்வது என்றும் கதிரைநுனி வரைக்கும் வந்து காட்டு கத்து கத்தினாலும் விவாதம் என்பது முரண்பாடான கருத்துடையவர்களின் ஆரோக்கியமான கருத்து மோதலாக இருக்கவேண்டுமே தவிர, தனிமனித பலவீனங்கள் குஸ்தி போடும்; களமாக இருக்கக்கூடாது என்பதாகும்;.

மாமியின் வெளித்தெரியாத குணங்களில் ஒன்று அவரது இறுக்கமான மனமும் ஆங்காங்கே தூவிவிட்டாற்போல கிடக்கும் இறுமாப்பும் ஆகும். தனது பிடிப்புமிக்க கொள்கைகளை இலகுவில் விட்டுக்கொடுத்ததும் இல்லை. தான் நினைத்ததை சாதிக்காமல் விட்டதுமில்லை. மரணத்தை தவிர அனைத்தையும் அவர் வாழ்வில் வென்றிருந்தார். 

திருமணம் என்ற உறவுமுறையினால்தான் பெண்கள் தம் உரிமைகளை இழந்துவிடுகிறார்கள் என்றும் திருமணம் என்பது பெண்களுக்கு தொடர்ந்தும் ஒரு பொறியாக இருக்குமானால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் உறுதியான கொள்கையுடைய பெண்ணியவாதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தார்.

ஆனால், ஒரு காலத்தில், சரி அப்படியே அந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும் பெண் எனப்படுபவள் எவ்வளவு காத்திரமாக அந்த உறவுமுறையை மாற்றியமைக்கலாம் என்பதை வாழ்ந்து காண்பிக்கவேண்டும் என்ற உறுதியுடன் உதாரண மனுசியாக வாழ்ந்து காண்பித்தவர்.

சமுதாய கட்டுப்பாடுகளும் ஆணாதிக்க சிந்தனைகளும் பெண்களுக்கு விலங்கிடும் தளைகளாக இருக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் திருமணத்து முன்னரும் பின்னரும் தனது எழுத்துக்களில் பழமைகளை உடைத்தெறிந்தார். 


மாமி எழுதி 70 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய “விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்” என்ற நகைச்சுவை நாடாகத்திலும் வீரகேசரியில் வெளியாகிய “நாளைய சூரியன்” கதையிலும் தெறித்து விழுந்த பெண்விடுலை கருத்துக்களால் சீற்றமடைந்த சின்ன மனம்கொண்ட சில நேயர்கள் மற்றும் வாசகர்கள் “உன்னையெல்லாம் எவனடி கலியாணம் கட்டப்போறான்” என்று காழ்ப்புடன் கடிதங்கள் எழுதி அனுப்பிய சம்பவங்களையும் நகைச்சுவையாக நினைவுகூருவார். அப்போதெல்லாம், மாமா அருகிலிருந்து கொடுப்புக்குள் சிரிப்பார். 

குடும்ப வாழ்வில் அவர் கடைப்பிடித்த எத்தனையோ ஒழுக்க முறைகள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டு மிகுந்தவையாக அமைந்தன. திருமணம் முடித்து இன்னோர் குடும்பத்துக்கு போன பெண் தன் பெற்றோரை பராமரிப்பதில் காண்பிக்கவேண்டிய அக்கறை, சகோதர – சகோதரிகளின் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளை போல வளர்த்த பாசம், சகோதரங்களின் குடும்ப சுமைகளை தன்சுமைகளாக கருதி தீர்வுகளை சொல்லும் பண்பு ஆகியவை எல்லாமே மாமியை எல்லோரும் அணுகக்கூடிய நீதிபதிபோன்ற நிலையை அவர் குடும்பத்தில் ஏற்படுத்தியிருந்தது.

மனித உணர்வுகளுக்கு உயரிய மதிப்பளித்தார். மானிட நேயத்துக்கு தானே உதாரணமானார். எளியவர்களின் தோழியாகவும் பெண்ணியல்வாதிகளின் முன்மாதிரியாகவும் எல்லோர் மனதிலும் குடிகொண்டவர்.

சாந்தி சச்சிதானந்தா, தமிழினி வரிசையில் அருண் விஜயராணியையும் இந்த ஆண்டில் இழந்துவிட்ட தமிழ் படைப்புலகம் அந்த ஆளுமை மிக்க விருட்சங்களின் வெற்றிடத்தால் கண்ணீர் மல்கி நிற்கிறது. 

- தெய்வீகன்

(படைப்பாளி அருண் விஜயராணி அவர்களின் இறுதிநிகழ்வில் 18.12.15 அன்று வாசிக்கப்பட்ட அஞ்சலி உரை)

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...