Thursday, November 6, 2014

நாதம் என் ஜீவனே....



'எயார்டெல் சுப்பர் சிங்கர்', 'சண் சிங்கர்', 'கேடி Boys கில்லாடி Girls' என்று புதிது புதிதாக முளைத்த Reality Showக்களினால், தமிழ் இசை எனப்படுவது உலகளாவிய ரீதியில் இன்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு பரிணாமங்களை எட்டிவிட்டது. 
ஒரு காலத்தில் திரையிசைப்பாடல்கள் எந்தப்படத்தில் வெளியானவை என்ற தகவலை அல்லது யார் பாடினார்கள் என்ற தகவலை மட்டும் தெரிந்திருந்த சாமானிய ரசிகர்கள், இன்று அந்த பாடலின் ராகம் முதற்கொண்டு இசையமைப்பு நுணுக்கங்களைக்கூட சர்வசாதாரணமாக பிரித்து மேய்ந்து விமர்சிக்கும் ஆரோக்கியமான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் - 
அதற்கு காரணம் தலைமுறைகள் தாண்டிய பரந்த இசை அறிவும் அதற்கு ஏற்ற தரத்துடன் வளர்ந்துள்ள ஆராக்கியமான இசைநிகழ்ச்சிகளும்தான்.
ஆனால், தொண்ணூறுகளின் ஆரம்பம் முதல் திரைஇசை என்பது என் போன்றவர்களுக்கு கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான பாடல்கள், தூத்துக்குடி வானொலியில் முக்கியமாக இரவு 08.45 ற்கு ஒலிபரப்பாகும் பாடல்கள், பலாலி வானொலியில் ஒலிபரப்பான பாடல்கள் என்பவற்றின் ஊடான அறிமுகமாகவே இருந்தது. 
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ராஜன், கண்ணன், சாந்தன் மற்றும் அருணா இசைக்குழுக்கள் எமக்கெல்லாம் பெரும்பேறு அளித்த இசை நிகழ்ச்சிகள் எனலாம். ராஜன் இசைக்குழுவில் சத்தியசீலன் பெண்குரலில் பாடும் "பூங்குயில் ராகமே", ஸ்டனிஸ் சிவானந்தனின் 'பட்டத்து ராஜாவும் பட்டாளச்சிப்பாயும்" மற்றும் "தேவனே என்னை பாருங்கள்" பாடல்கள், அருணா இசைக்குழுவின் "புதுச்சேரி கச்சேரி" என்ற சிங்காரவேலன் படப்பாடல் எஸ்.ஜி.சாந்தனின் "கனலில் கருவாகி" போன்றறைதான் எமக்கெல்லாம் விசிலடிக்கும் வித்தையை காட்டித்தந்த அந்தக்கால அற்புதங்கள்.'அண்டர்வெயார்' இல்லாமல் வேட்டியை இறுக்கக்கட்டி அங்கப்பிரதஷ்டணை அடித்து சாதனை செய்து காண்பிப்பதற்கான திருவீதிகளாக ஆலயங்களை நாங்கள் அப்போது பயன்படுத்திக்கொண்டாலும், இந்த இசைக்கச்சேரிகளும் எங்களை ஆலயங்கள் நோக்கி வாரி அணைத்துக்கொண்டன. 
தண்ணீர்பந்தல், கம்பன் கழக பேச்சாளர்களின் சொற்பொழிவு, இசைக்கச்சேரிகள் என்றெல்லாம் ஆலயங்கள் எங்களுக்கு 'எயார்டெல் சுப்பர் சிங்கர்' தரும் போதையை அள்ளித்தந்துகொண்டிருந்த அந்த காலப்பகுதியில் - பிரபல்யமான நாதஸ்வர - தவில் வித்துவான்களின் வருகைகள் ஆலயங்களுக்கு எப்போதுமே ஒருவித பரவச உணர்வை ஏற்படுத்திவிடும். 
அன்று அந்த பரவசநிலையை அளித்த நாதஸ்வர இசையை நேற்று நண்பன் visakan முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட காணொலியில் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பெற்றுக்கொண்டேன். அதற்கு காரணமான நாதஸ்வர வித்துவான் வேறு யாருமல்ல. 33 வருடங்களாக யாழ் மண்ணை தங்கள் இசையால் கட்டிப்போட்ட நாதஸ்வர சக்கரவர்த்திகள் கானமூர்த்தி - பஞ்சமூர்த்தி சகோதரர்களில், பஞ்சமூர்த்தியின் மகன் குமரன். என்ன ஒரு இசைஞானம்?
கரவெட்டி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கச்சேரியில் அவர் வாசித்துள்ள "உயிரே உயிரே" பாடலை பார்த்ததிலிருந்து, அந்த பாடல் மாறுவேடத்தில் உடலுக்குள் புகுந்து இசைக்கலகம் செய்தவண்ணமுள்ளது. இந்தப்பாடல் இல்லாமல் ஏ.ஆர். ரகுமானின் நிகழ்ச்சிகளோ, ஹரிஹரன் மற்றும் சித்ராவின் இசைநிகழச்சிகளோ எங்கும் இடம்பெற்றதில்லை. அந்த பாடலை ஒவ்வொருமுறை பாடும்போதும் ஹரிஹரன் புதிது புதிதாக சங்கதிகள் வைத்து பாடுவதும் அந்தப்பாடலினால் எவ்வாறெல்லாம் ரசிகர்களின் ஆன்மாவை அர்ச்சனை செய்யமுடியுமோ அவ்வாறெல்லாம் பல ஸ்தாயிகளிலும் சென்று இசைப்போரே நடத்தி மெய்மறக்கச்செய்பவர் பாடகர் ஹரிஹரன். ஒரு குரல் தேர்ந்த கசல் பாடகராக அவருக்கு அந்த முயற்சி என்றுமே கடினமாக இருந்ததில்லை. அந்த பாடல் பல வருடங்கள் கடந்து இன்றும் புதிதாக இருப்பதற்கு மூல காரணம் அதனை சிருஷ்டித்த ஏ.ஆர்.ரகுமான்.
ஆனால், அந்த பாடலை தனது நாதஸ்வரத்தால் அநாயசமாக வாசித்து ஹரிஹரன் தன் குரலால் காண்பிக்கும் இசை ஜாலத்தை குமரன் தன் குழலால் காண்பித்திருக்கும் அழகு இருக்கிறதே...இந்த காணொலியை எத்தனை தடவைகள் பார்த்தாலும் போதாது. 
ஒரு பாடலை improvise பண்ணி பாடுவது என்பது தேர்ந்த பாடகருக்கு பெரிய சிக்கலான விடயமில்லை. ஆனால், அவ்வாறு தன் வாத்தியத்தால் improvise பண்ணி இசைப்பது என்பது எல்லா இசைக்கலைஞரும் செய்யக்கூடிய விடயமே அல்ல. என்னதான், improvise பண்ணி இசைப்பதற்கு எம் இசைஞானம் எத்தனித்தாலும் அதனை ஒலியிலே வெளிக்கொணர்வதற்கு எந்த இசைக்கலைஞனுக்கும் அவனது வாத்தியத்தில் கைதேர்ந்த ஞானமும் சரளமான இசைப்புலமையும் ஒருங்கே தேவைப்படுகின்றது. இசைக்கருவி எனப்படுவது அவனது உடலின் ஒரு அங்கம் போல இணைந்துகொள்ளும் அர்த்தநாரீஸ்வர நிலையில்தான் இது சாத்தியம். அவன் போடும் இசைக்கட்டளைகள் அனைத்தையும் அப்படியே ஒலியாக்கும் வாத்தியத்தை தன்னக்தே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் உச்சம்தான் ஆத்மார்த்தமான இசையை ரசிகனிடம் கொண்டு சேர்க்கிறது. அவ்வாறான நிலையில், இசைக்கலைஞனதும் ரசிகனதும் ஆன்மாக்கள் பேசத்தொடங்கி விடுகின்றன. அந்த அத்வைத வெளியில்தான் மனித மனம் தன்னிலை மறந்து தன் எல்லா உணர்வுகளுடனும் இசையிடம் சரணடைந்துவிடுகிறது.
இந்தக்காணொலியில் அந்த பரவச நிலையை நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் தந்திருக்கிறான் குமரன். 
'உயிரே உயிரே' பாடலின் சரணத்தை வாசித்துவிட்டு ஒவ்வொரு முறை பல்லவிக்கு வரும்போது அவன் போடும் வித்தியாசமான சங்கதிகள், இதுவரை ஹரிஹரனின் குரலிலும் கேட்டதில்லை. அதுபோக, அந்த பாடலில் வரும் இரண்டாவது interlude இசைக்கலைஞர்கள் - பாடர்கள் என்று எவருமே தொட்டுக்கொள்ள அச்சப்படும் பகுதி. அதனை பாடுவதற்கோ - வாத்தியங்களில் வாசிப்பதற்கோ சரியான தாளக்கட்டுமானம் வேண்டும். அப்படியான தாளக்கட்டுமானத்துக்குள் நின்றுகொள்வதற்கு சரியான மூச்சுப்பிடிப்பு வேண்டும். இவையெல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு பாடலில் கோர்க்கப்பட்டுள்ள ஸ்வரங்களுடன் இழுபட்டபடி உச்ச ஸ்தாயிக்கு செல்லவேண்டும். அசாத்தியமான இந்த முயற்சியை எந்தப்பிசிறும் இல்லாமல் குமரன் வாசிக்கும்போது கடைக்கண்ணில் ஒரு கண்ணீர்த்துளியே எட்டிப்பார்த்துவிட்டது.
குமரன். இவன் போன்றவர்கள் நாங்கள் கொண்டாடவேண்டிய கலைஞர்கள். அவனது திறமையும் அவன் போன்றவர்களின் ஆற்றலும் எங்களால் ஆராதிக்கப்படவேண்டியவை. அவனது தந்தையின் திறமை எங்களின் கை தட்டல்களுடனும் ஒரு சில பட்டங்களுடனும் சில வெளிநாட்டுப்பயணங்களுடனும் முடிந்து போயிற்று. ஆனால், இசையில் பெரு வீச்சுடன் இறங்கியுள்ள குமரன் போன்ற அடுத்த தலைமுறையின் வீரியத்தை உலகளாவிய ரீதியில் எம் இனத்தின் ஆற்றலாக பிரகடனப்படுத்துவதும் அதை எமது சாதனைகளின் அடையாளமாக எடுத்துச்செல்வதும் எங்களின் கைகளில்தான் உள்ளது.

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...