Sunday, November 6, 2005

முதலிரவு

முதலிரவு என்றதால்
நெஞ்சில் படபடப்பு;
கொஞ்சம் பரபரப்பு.

எத்தனையோ பாதிநாட்களை
படுக்கையில் கழித்த எனக்கு,
அன்று ஏனோ
அரை அவுன்ஸ் ஏக்கம்
மனதில் மகுடி வாசித்தது.

விளக்கணைத்து -இருளின்
விரல் பிடித்து ஏதோ
போருக்கு போவது போல
போர்வைக்குள் போனேன்.

சாய்ந்த மாத்திரத்திலேயே
காதுக்குள் அவள் சொன்ன
சிருங்கார மொழியும்
சிக்கன சிணுங்கலும்
புரியாமல் தலையசைத்தேன்.

ஓயாத அவள் பசிக்கு
ஓவ்வாத ஜென்மமாக
சுருண்டு விட்டேன்.

ஆனால்,
அவளோ விடவில்லை.

போர்வைக்குள் நீச்சலடித்தேன்;
கைகளோ படபடத்தன;
கால்களோ துடிதுடித்தன;
என் கை நகங்களே
என்னை பிராண்டின.

முடிந்தளவு போராட்டம்
விடிய விடிய நடந்தது.

போரின் உச்சத்தில்
போர்வையே கிழிந்தும்விட்டது.

காலையில் பார்த்தபோது
ஓரத்தில் சிறு ரத்தக்கறை.

என்னவிரசமான வர்ணனையா?

வெளிநாடொன்றில்,
நான் கழித்த முதலிரவில்,
எனையழித்த நுளம்பின் தொல்லையை
இதற்கு மேல் எப்படி சொல்ல?

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...